Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 30 மார்ச், 2018

கலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 37

கலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 37





கதைகள், கணிப்புகள், வாய்ப்புகள் ஆகியவற்றை ஈவிரக்கமில்லாமல் கழித்துவிட்டுப் பார்த்தால் கொனாரக் கோவிலின் வீழ்ச்சிக்கு வரலாற்றுப் பக்கங்களைப் புரட்ட வேண்டும். வரலாற்றில் ஒடிசாவும் வங்காளமும் அண்டையண்டை நாடுகள். அவ்விரு பகுதிகளிலும் நேரெதிரான ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஆண்டு வந்திருக்கின்றனர். வங்காளத்தை ஆளும் அரசர்கட்கு ஏதேனும் இழப்புக் கணக்கு என்றால் அவர்கள் ஒடியாவின்மீது படையெடுத்து வந்து கொள்ளையடித்துச் செல்லத் தயங்கியதில்லை. வரலாற்றிலுள்ள படையெடுப்புகள் பலவும் அரசர்களால் நடத்தப்பட்ட கொள்ளையடிப்புகளே என்பதில் யார்க்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது.
மொகலாய மன்னர்களின் ஆட்சிப்பரப்பு கங்கையாற்றுச் சமவெளியைப் பிடித்தபடி வங்காளம் வரைக்கும் பரவியது. கொனாரக் பகுதியானது அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட ஒடியாவின் கடற்கரைப் பகுதியில் இருப்பது. அப்போது வங்காளத்தில் மொகலாய மன்னர்களின் ஆளுநராக இருந்தவர் சுலைமான் கரானி என்பவர். அவருடைய படைத்தளபதிகளில் ஒருவர் கலாபகர். கலாபகர் என்றால் கருமலையன். கலாபகரின் இயற்பெயர் இராஜிவ்லோச்சன்ராய். பிறப்பால் இந்து மதத்தவர்.



Exploring Odhisha, travel series - 37
மேற்கு வங்காளப் பகுதியில் கூகுளி நதிக்கரையின் வடக்கே இருக்கும் சிறுநகரம் திரிபேனி. அங்கே நடந்த போரில் சுலைமான் கர்ரானிக்குப் பெருத்த பின்னடைவு. இனியும் போரிடல் தகாது, அமைதிப் பேச்சு நடத்து என்று மேலிடத்திலிருந்து செய்தி வருகிறது. இராஜீவ்லோச்சன்ராய் என்பவரை வென்றாலொழிய வங்காளத்தில் சுலைமானின் மேலாட்சியைத் தக்கவைத்தல் கடினம் என்னும் நிலை. அதனால் இராஜீவை அமைதிப் பேச்சுக்கு அழைக்கிறார் சுலைமான். அமைதிப் பேச்சின்போது சுலைமானின் பேரழகு மகளை இராஜீவ் பார்த்துவிடுகிறார். அவள் அழகில் மயங்கிய இராஜிவ் அவளை மணம் செய்துவைக்கக் கோருகிறார். இந்தத் திருமணத்தால் தாம் விரும்பிய அமைதிக்கு வாய்ப்பு ஏற்படுவதை உணர்ந்த சுலைமான் அதற்கு ஒப்புக்கொள்கிறார். சுலைமானின் மகளைத் தம் மதத்திற்கு மாற்றிக்கொண்டு திருமணம் செய்ய முயன்ற இராஜீவின் முயற்சியைச் சமயப் பெரியவர்கள் ஏற்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்த இராஜீவ் இஸ்லாத்தைத் தழுவுகிறார். அப்போது அவர்க்குச் சூட்டப்பட்ட பெயரே கலாபகர் அல்லது கலாபகத்.



Exploring Odhisha, travel series - 37
மொகலாய ஆளுநரின் உறவு ஏற்பட்டபின் கலாபகரின்கீழ்ப் பெரும்படை வந்துவிடுகிறது. தன்னைச் சுற்றியுள்ள பகைகளை அழித்தபடியே, கலிங்கத்திற்குள்ளும் நுழைகிறார் கலாபகர். கலிங்கத்தில் பூரி, கொனாரக் ஆகிய கோவில்களை முற்றுகையிடுகிறார். கிபி. 1568ஆம் ஆண்டு இந்தப் படையெடுப்பு நடந்தது. பூரிக்கோவில் பதிவேட்டில் இந்தக் கொள்ளைப் படையெடுப்பு குறித்த பதிவுகள் இருக்கின்றன. பூரிக்கோவிலை முற்றுகையிட்டபோது இறைத்திருவுருவங்களை அங்கிருந்த கோவில் பணியாளர்கள் அருகிலுள்ள காட்டுப் பகுதிகளுக்குக் காப்பாக எடுத்துச் சென்று மறைத்து வைத்தனர். கொனாரக் கோவிலின் அத்தகைய காப்பேற்பாடுகளைச் செய்யத் தவறினர். வழியில் கொனாரக் கோவிலே முதலாக இருந்தமையால் கலாபகரின் படைகள் கொனாரக்கைச் சிதைக்கத் தொடங்கின. கற்களில் உயிர்ப்புற எழில் கொஞ்சிய கோவிற் சிலைகள் மூளியாக்கப்பட்டன. கொனாரக் கோவிலுக்கு நேர்ந்த இந்தச் சீரழிவைக் கேள்வியுற்ற பூரிக்கோவில் பணியாளர்கள் கோவில் காப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும்.



Exploring Odhisha, travel series - 37
பூரிக்கோவில் தப்பித்த அந்நேரத்தில் கொனாரக் கோவில் சீரழிவில் சிக்கிக்கொண்டது. சிலைகளின் சிறு நீட்டங்களை உடைத்துபோட்ட வங்காளப் படையினரால் கோவிலின் பெருங்கட்டுமானத்தை அசைக்க முடியவில்லை. கோபுர உச்சியில் கலயமாக வைக்கப்பட்டிருந்த பெருங்கல் அனைத்தையும் அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தது. பிற கோவில்களைப்போல் கொனாரக் கோவில் அகலக்குறைவான சுவர்களையுடையதன்று. சுவரின் பருமன் இருபது முதல் இருபத்தைந்து அடிகளுக்குக் குறைவில்லாதது. அதனால் சுவரைப் பெயர்த்து கோவிலை வீழ்த்துவது இயலாத செயல். கடுப்படைந்த கலாபகரின் படையினர் கோவிலைத் தாங்கியிருந்த உத்தரங்களைச் சேதப்படுத்தத் தொடங்கினர். கோவில் தகர்ப்பு முயற்சியில் ஒரு கட்டத்திற்கு மேல் களைப்படைந்த அப்படை கொள்ளையடித்தவற்றோடு அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தது. உத்தரங்களையும் விதானங்களையும் சேதப்படுத்தப்பட்டமையால் காலப்போக்கில் கொனாரக் கோவில் சரிந்து விழுந்துவிட்டது. இந்தக் காரணம் நம்பும்படியாகவும் சான்றுகளைக்கொண்டதாகவும் உள்ளது.



Exploring Odhisha, travel series - 37
அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கலாபகர் முழுமையாய் ஊர்போய்ச் சேரவில்லை. மகாநதிக் கரையின் சம்பல்பூர் என்ற இடத்தில் கூடாரமிட்டுத் தங்கியபோது ஒரு பெண்மணியின் கையால் மோர் வாங்கிக் குடித்துச் சுருண்டு விழுந்து செத்தார். கலாபகரோடு மோர் குடித்த அவருடைய படைமறவர்கள் பலர்க்கும் சாவு. சம்பலேசுவரி என்னும் அவ்வூர்த் தெய்வம்தான் நஞ்சு கலந்த மோரைக் கொடுத்துக் கொன்றதாக நம்பப்படுகிறது. மகாநதிக்கரையில் சம்பலேசுவரி கல்லூரிக்குப் பின்னே இருக்கும் மாந்தோப்பில் உள்ள பெரிய சுடுகாட்டில்தான் இறந்தவர்கள் புதைக்கப்பட்டனராம்.
- தொடரும்



Exploring Odhisha, travel series - 37





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக