Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

ஒன் + ஒன் = ஜீரோ 32


விவேக் கேட்டான்.
"ரஹீம் கஸாலி உன்கிட்டே அப்படி என்ன சொன்னார் அய்யப்பன் ..?"
வாட்ச்மேன் அய்யப்பன் பக்கத்தில் நின்றிருந்த அப்சர்வேடிவ் ஆபிஸர் சச்சிதானந்தை சற்றே தயக்கத்துடன் பார்க்க, அவர் நெருங்கி வந்து அவன் தோள் மீது கையை வைத்தார்.
"இதோ பார் அய்யப்பன்.....! நான் இந்த சிறை விடுதிக்கு ஒரு அதிகாரியாய் இருந்தாலும் என்னை விட உனக்குத்தான் பல விஷயங்கள் தெரிஞ்சிருக்கு. உனக்கு என்னென்ன தெரியுமோ அதையெல்லாம் இவங்ககிட்டே நீ தாராளமாய் சொல்லலாம். உன் பேர்ல துறை ரீதியாய் எந்த ஒரு நடவடிக்கையும் வராமே பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு..."
அய்யப்பன் மேலும் சில விநாடிகள் மெளனமாய் இருந்துட்டு கம்மிப் போன குரலில் மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான்.
"ஸார்... ரிடையர்ட் ஆபீஸர் ரஹீம் கஸாலி என்கிட்ட சொன்ன பகீர் தகவல் இதுதான். வெளியே இருக்கிற யாரோ ஒரு முக்கிய புள்ளி இந்த சிறை விடுதியில் இருக்கிற சில சிறுவர்களை இங்கிருந்து தப்பிக்க வெச்சு, அவங்க வெளியே வந்ததும் தன்னோட இடத்துக்கு கூட்டிப் போய் சில நாட்கள் தங்க வெச்சு ஒரு டாக்டர் மூலமாய் மூளைச் சலவைப் பண்ணி மிகப் பெரிய சட்டவிரோதமான வேலைகளுக்கு பயன்படுத்திகிட்டு அதுக்கப்புறம் அந்த சிறுவர்களை தீர்த்துக்கட்டி எரிச்சுடறாங்களாம். இந்த விஷயத்தை ரஹீம் கஸாலி ஸார் சொன்ன நாளில் இருந்து எனக்கு சரியான தூக்கமில்லை.... எனக்கு பசி எடுத்து சாப்பிட்டு பல நாளாச்சு."
விவேக் குறுக்கிட்டு கேட்டான்
"இப்ப நீ போன்ல பேசினது யார் கூட ?"
"ரஹீம் கஸாலி ஸார் கிட்டே.... இந்த விடுதிக்கு உங்களை மாதிரியான முக்கியமான ஆட்கள் வந்தா அவர்க்கு உடனே போன் பண்ணி விஷயத்தை சொல்லிருவேன். கல்லில் சுற்றப்பட்ட கடிதத்தை எடுத்து படிச்சிட்டு யாராவது நடவடிக்கை எடுக்கமாட்டாங்களாங்கிற எதிர்பார்ப்பு எங்க ரெண்டு பேர்க்கும் இருந்தது."
"சரி.... ரஹீம் கஸாலிக்கு போன் பண்ணி குடு, நான் பேசறேன்.....!" விவேக் தன் கையில் இருந்த சற்று முன்பு அய்யப்பனிடம் இருந்து வாங்கிய செல்போனை நீட்ட, அவன் அதை தயக்கத்தோடு வாங்கி டயல் செய்து மறுமுனையில் இருந்த ரஹீம் கஸாலியுடன் பேசி விபரத்தைச் சொல்லிவிட்டு விவேக்கிடம் நீட்டினான். விவேக் போனை வாங்கி காதுக்கு ஏற்றினான்.
"வணக்கம் சார்"
"வணக்கம் மிஸ்டர் கஸாலி"
"ஸார்... உங்க கூட பேசறதுல எனக்கு ரொம்பவும் சந்தோஷம். இப்படியொரு சந்தர்ப்பத்தை நான் எதிர்பார்க்கலை!"
"எனக்கு சந்தோஷமில்லை கஸாலி.... வாட்ச்மேன் அய்யப்பன் மூலமாய் நான் எல்லா விஷயங்களையும் தெரிஞ்சிகிட்டேன். நீங்க இந்த கூர்நோக்கு இல்லத்தில் அப்ஸர்வேடிவ் ஆபிஸராய் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த இல்லத்தில் ஏதாவது சட்ட விரோதமா நடந்திருந்தா அதை முறைப்படி எந்தத் துறைக்கு தெரியப்படுத்தணுமோ அந்தத் துறைக்கு தெரியப்படுத்தலாமே. அதை விட்டுட்டு ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ?"
"ஸாரி ஸார்..... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உயிரோடு இருந்த நியாயம், நேர்மை, வாய்மை போன்ற வார்த்தைகள் இப்போது வெறும் வார்த்தைகளே.... இந்த அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் நல்லவங்களும் இருக்காங்க... கெட்டவங்களும் இருக்காங்க... ஆனா அதில் யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு இனம் பிரிக்கிறதுதான் கஷ்டம். யாரையும் நம்பி எதையும் சொல்ல முடியலை. நான் வேலையிலிருந்து ரிடையர்ட் ஆயிட்டாலும் என்னோட அம்மாவும் அப்பாவும் இன்னமும் இருக்காங்க. அப்பாவுக்கு எண்பத்தேழு வயசு, அம்மாவுக்கு எண்பது வயசு. எனக்கு ஒரு பையன். ஒரு பொண்ணு. ரெண்டு பேர்க்கும் கல்யாணமாகிடுச்சு. ஒரு பேரன் ஒரு பேத்தி. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாய் போயிட்டிருக்கு. இருந்தாலும் என்னோட மனசுக்குள்ளே ஒரு குற்ற உணர்ச்சி."
"என்ன குற்ற உணர்ச்சி?"
"ஸார்....! நான் அந்த கூர்நோக்கு இல்லத்தில் நன்னடத்தை அதிகாரியாய் இருந்து வேலை பார்த்த போது, விடுதியிலிருந்து சில சிறுவர்கள் தப்பிச்சுப் போறதும், சில நாட்களுக்குப் பிறகு பிடிபட்டு திரும்பி வர்றதும் வாடிக்கையா இருந்தது. ஆனா நான் ரிட்டயர் ஆன பிறகு, அந்த கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பித்துப் போகிற சிறுவர்கள் பற்றிய செய்தி மூணு மாசத்துக்கு ஒரு தடவையாவது பேப்பரில் படிக்கும் போது மனசு வலிக்கும். தப்பித்துப் போன சிறுவர்கள் அடுத்த சில நாட்களில் போலீஸாரின் கையில் எப்படியாவது மாட்டிக் கொள்வார்கள். ஆனால் தப்பித்துப் போன சிறுவர்கள் மறுபடியும் விடுதிக்கு திரும்புவது இல்லை என்கிற செய்தி என்னை ரொம்பவே பாதித்தது. சம்பந்தப்பட்ட மேலிடத்துறை தலைவர்க்கு வாரம் ஒரு அனானிமஸ் லெட்டர்ஸ் எழுதிப் போட்டேன். வேறு வேறு பெயர்களில் கடிதங்கள் டைப் செய்து அனுப்பி வைத்தேன். பதில் இல்லை. சி.எம். செல்லுக்கும் அதன் நகல்களை அனுப்பி வைத்தேன். எல்லாமே கிணற்றில் போட்ட கற்களாயிற்று. அதற்குப் பிறகுதான் ஒருநாள் வாட்ச்மேன் அய்யப்பனை அங்கே வந்து பார்த்தேன். விஷயத்தைச் சொல்லி அந்த கூர்நோக்கு இல்லத்தில் என்ன நடக்கிறது என்று கவனித்து எனக்கு தகவல் கொடுக்கச் சொன்னேன். செல்போனும் வாங்கிக் கொடுத்தேன். விடுதிக்கு யாராவது வி.ஐ.பி.க்கள் வந்தால் கல் கடிதம் வீசச் சொன்னதும் நான்தான். நானோ அய்யப்பனோ இந்த காரியத்தை வெளிப்படையாய் பண்ணியிருந்தா இந்த உண்மைகளை எல்லாம் இப்ப உங்க கிட்டே சொல்ல நாங்க உயிரோடு இருந்திருக்க மாட்டோம்."
"உங்க நிலைமை எனக்கு புரியுது கஸாலி. இனிமேல் இந்த விஷயத்தில் நீங்களோ அய்யப்பனோ பயப்பட வேண்டியதில்லை. நான் இப்போ கேட்கப் போகிற கேள்விகளுக்கு மட்டும் நீங்க உண்மையான பதில்களைச் சொன்னா போதும் இது எதுமாதிரியான குற்றம், குற்றவாளி யார் என்கிற உண்மையைக் கண்டுபிடிக்க நாங்க இனி முயற்சி எடுத்துக்குவோம்."
"ஸார்.... நீங்க எது மாதிரியான கேள்விகளைக் கேட்டாலும் சரி அதற்கான பதில்கள் உண்மை நிரம்பினதாகவே இருக்கும். கேளுங்க ஸார்....!"
"என்னோட முதல்கேள்வி இதுதான். இந்த கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறுவர்களை தப்பித்து போக வைக்கிற நபர் யார் ?"
"அந்த நபர் யார்ன்னு எனக்குத் தெரியாது ஸார். ஆனா அந்த நபர் வடநாட்டு அரசியல் பிரமுகர். சில க்ரிமினல் வழக்குகள் அவர் பேர்ல நிலுவையில் இருக்கு. அமைச்சர்களுக்கு வேண்டியவர்."
"இவ்வளவு விபரங்கள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனா அவர் பெயர் தெரியாதுன்னு சொல்றது கொஞ்சம் முரண்பாடாய் இருக்கே...?"
"ஸார்... இந்த விபரங்கள் எல்லாம் தெரியக் காரணமே நம்ம உளவுத்துறையில் இருக்கிற என்னுடைய நண்பர் ஒருவர்தான். அவரோட பெயரைச் சொல்ல எனக்கு அனுமதியில்லை," என்று சொன்னவர் விவேக்கிடம் கேட்டார், "மும்பையில் ஒரு கோயில் வாசலில் அனிஷ் மெஹ்ரா என்கிற கோடீஸ்வர இளைஞனை ஒரு சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்த விபரம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்."
"தெரியும்"
"அந்தப் பையன் யார்ன்னு தெரியுமா ஸார் ?"
"தெரியாது"
"அந்தப் பையன் பேரு அன்பரசன். திண்டுக்கல்லுக்குப் பக்கத்தில செம்மேடு என்கிற கிராமத்தைச் சேர்ந்த பையன். அப்பா குடிகாரன். தினமும் குடிச்சுட்டு வந்து அம்மாவை அடிக்கிறதைப் பார்த்து பொறுக்க முடியாமே தூங்கிட்டிருந்த அப்பா தலையில் கல்லைப் போட்டுக் கொன்னுட்டான். பெத்த மகனே அப்பாவைக் கொன்னுட்ட அதிர்ச்சியில் அம்மாகாரியும் இறந்துட்டா. கொலையைப் பண்ணிட்டு அவன் சீர்திருத்தப் பள்ளிக்கு வந்த போது அவனுக்கு வயசு பதினாலு. கொஞ்சம் மூர்க்கமான பையன். நான் அவனை ஹேண்டில் பண்ணியிருக்கேன். போன வருஷம் கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பிச்ச நாலு பசங்கள்ல இந்த அன்பரசனும் ஒருத்தன். மும்பை கோயில் வாசலில் அனிஷ் மெஹ்ராவை கொலை பண்ணினது அன்பரசன்தான்."
"அதாவது கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச்ச சிறுவர்களை யாரோ ஒரு நபர் கடத்திக் கொண்டு போய் மூளைச் சலவை செய்து அந்த நபர்க்கு வேண்டாத அல்லது எதிரிகளைக் கொலை செய்யப் பயன்படுத்திக்கிறார். இதுதானே உங்க உளவுத்துறை நண்பர் உங்ககிடே சொன்னது ?"
"ஆமா ஸார்."
"அந்த உளவுத்துறை நண்பர் நம்பிக்கைக்கு உரிய நபர்தானா?"
"மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் ஸார். நாட்ல எந்த ஒரு அநியாயம் நடந்தாலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாமே என் கூட ஷேர் பண்ணிக்குவார். அந்த அநியாயத்தை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டுட்டு வரலாம்னு என்கிட்டே யோசனை கேட்பார். நானும் சொல்வேன். எல்லாமே மறைமுகத் தாக்குதல்தான்."
"கஸாலி! இந்த மறைமுகத் தாக்குதல் எல்லாம் நிழலோடு யுத்தம் செய்யற மாதிரி. இந்த நிழல் யுத்தம் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவாது. இனி நேரடி யுத்தம்தான். கிட்டத்தட்ட குற்றவாளிக்குப் பக்கத்துல வந்திட்டோம். அடுத்த 24 மணிநேரத்துக்குள்ளே எல்லா டி.வி,சானல்களிலும் யாருமே நம்ப முடியாத செய்தி ஒண்ணு பிரேக்கிங் நியூஸாய் இடம் பெறலாம்.....!" விவேக் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக