"பாஸ்! அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருக்கிற நபர்கள் ஏன் இப்படி கொலை வெறியோடு இருக்காங்கன்னு தெரியலை.
500 கோடி, 1000 கோடின்னு பணம் சம்பாதிச்சு என்னதான் பண்ணுவாங்க? காலையில நாலு இட்லிக்கு மேல் சாப்பிட்டா நம்ம வயிறு அதுக்கு மேல் சாப்பிடாதே நான் தாங்க மாட்டேன்னு 'நோ எண்ட்ரி' போர்டு போட்டுடுது. ஒரு சாண் வயித்துக்கு இருக்கிற அறிவு கூட ஆறடி மனுஷனுக்கு இல்லையே?"
500 கோடி, 1000 கோடின்னு பணம் சம்பாதிச்சு என்னதான் பண்ணுவாங்க? காலையில நாலு இட்லிக்கு மேல் சாப்பிட்டா நம்ம வயிறு அதுக்கு மேல் சாப்பிடாதே நான் தாங்க மாட்டேன்னு 'நோ எண்ட்ரி' போர்டு போட்டுடுது. ஒரு சாண் வயித்துக்கு இருக்கிற அறிவு கூட ஆறடி மனுஷனுக்கு இல்லையே?"
"விஷ்ணு...! அவங்க கோடிக் கணக்கில் கொள்ளை அடிச்சது கூட எனக்கு ஒரு அதிச்சிகரமான விஷயமாய் தெரியலை. ஆனா ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சந்தர்ப்பவசத்தால் குற்றங்களைப் பண்ணிட்டு சீர்த்திருத்த சிறைச்சாலைக்கு வர்ற சிறுவர்களை விடுதியிலிருந்து தப்பிக்க வைக்கிறதும், அப்படி தப்பிச்சவங்களையே கடத்திகிட்டு போய் மூளைச் சலவை பண்ணி தனக்கு வேண்டாத நபர்கள் மேல் ஏவி விட்டு கொலை செய்ய வைக்கிறதும், அதுக்குப் பிறகு அந்த சிறுவர்களை எரிச்சு கொல்றதும் எவ்வளவு கொடூரமான செயல், இதுக்கு காரணமானவங்க யாராய் இருந்தாலும் சரி, கண்டுபிடிச்சு நெஞ்சில ஏறி கொண்டு மிதி மிதி மிதிக்கணும்..."
"பாஸ்... அந்த ஆள் யார்ன்னு எப்படி கண்டுபிடிக்கப் போறோம்..?"
"விஷ்ணு! இந்த சுடர்கொடி கேஸ்ல நாம தொண்ணூறு சதவீதம் க்ராஸ் பண்ணி வந்துட்டோம். இன்னும் பத்து சதவீதம்தான் குற்றவாளிக்குப் பக்கத்துல வந்துட்டோம்.....!"
"எனக்குத் தெரியலையே பாஸ்..."
"கூடிய சீக்கிரம் தெரியும்", விவேக் சொல்லிக் கொண்டே அந்த ஆசிர்வாதம் ஹாஸ்பிடலின் காம்பெளண்ட் கேட்டுக்குள் நுழைந்து 'Way to Parking' என்று இண்டக்ஸ் போர்டு வழிகாட்டிய சிமெண்ட் பாதையில் சென்று ஒரு மரத்துக் கீழே நிறுத்தினான்.
இருவரும் இறங்கி நடந்தார்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான அந்த ஹாஸ்பிடல் நவீனமாக முயன்று தோற்றுப் போயிருந்தது.
"பாஸ்.... இந்த ஆசீர்வாதம் ஹாஸ்பிடலைப் பார்த்தா ஏதோ ஒரு இங்கிலீஷ் படத்துல வர்ற சர்ச் மாதிரி தெரியுது"
"1942க்கு முன்னாடி வரைக்கும் இது ஒரு சர்ச்தான். அதுக்கப்புறமாய்த்தான் இதை ஹாஸ்பிடலாய் கன்வர்ட் பண்ணியிருக்காங்க....!"
"இதெல்லாம் எப்படி பாஸ் உங்களுக்குத் தெரியுது. நானும் உங்க கூடவேதான் இருக்கேன். இந்த விபரத்தை உங்களுக்கு யாரும் சொன்ன மாதிரி தெரியலையே."
"நீ உச்சா அடிக்க டாய்லட் போயிருந்தப்ப நான் கூகுள்ள போய் 'ஆசீர்வாதம்' ஹாஸ்பிடலோட சரித்திரத்தைப் படிச்சுட்டேன்"
"நான் எல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் பாஸ்...."
"பேசாமே வாடா....."
இருவரும் ஹாஸ்பிடலின் பிரதான வாசல்படி ஏறி உள்ளே போய் ரிசப்ஷன் செண்டரில் இருந்த பெண்ணை நெருங்கினார்கள்.
"ஃபாதர் ஞானகடாட்சத்தைப் பார்க்கணும்"
"நீங்க..?"
"போலீஸ்....?"
"என்ன விஷயமாய் அவரை பார்க்கணும்?"
"அதை அவர்கிட்டதான் சொல்லணும்"
"ஒரு நிமிஷம்," சொன்ன அந்த பெண் இண்டர்காம் போனின் ரிஸீவரை எடுத்த விநாடி பின்பக்கம் குரல் கேட்டது.
"அயாம் ஃபாதர் ஞானகடாட்சம்," அபாரமான உயரத்தில் திடகாத்ர உடம்போடு வெள்ளை அங்கியில் நின்றிருந்தார். சுத்தமாய் மழிக்கப்பட்ட முகம். முன் மண்டையில் ரோமம் கொட்டியிருந்தது.
விவேக் அவரை நெருங்கி தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவருடைய இரண்டு புருவங்களுமே சில மில்லி மீட்டர் உயரத்துக்கு மேலேறின.
"போலீஸ் க்ரைம் ப்ராஞ்ச் ?"
"எஸ்"
"என்னிடம் என்ன விசாரணை ?"
"ஒரு அரைமணி நேரம் ஒரு அறையில் உட்கார்ந்து நிதானமாய் பேச வேண்டிய விஷயம் ஃபாதர்....!"
"ப்ளீஸ்.... கம் வித் மீ...," சொன்ன ஞானகடாட்சம் அந்த நீளமான வராந்தாவில் நடக்க ஆரம்பித்துவிட விவேக்கும் விஷ்ணுவும் பின் தொடர்ந்தார்கள்.
"பாஸ்" விவேக்கின் காதருகே கிசுகிசுத்தான்.
"என்ன?"
"கவனிச்சீங்களா?"
"எதை ?"
"ஃபாதர்க்கு ஜிம் பாடி...."
ஃபாதர் ஞானகடாட்சத்தின் அறை.
மெலிதான ஏ.சி. காற்றை சுவாசித்துக் கொண்டே விவேக்கும், விஷ்ணுவும் மாறி மாறி சொன்னதைக் கேட்ட ஃபாதர் அவ்வப்போது லேசாய் முகம் மாறி வியப்புகளை வெளிப்படுத்தினார். எல்லாவற்றையும் செவிமடுத்து விட்டு நிதானமான குரலில் கேட்டார்.
"இப்ப நான் உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்னு நினைக்கறீங்க?"
"ஃபாதர் ! ஜெபமாலை சுய உணர்வை இழப்பதற்கு முன்னால் சொன்ன மூணு வார்த்தைகளில் ஒன்னு இந்த ஹாஸ்பிடலோட பெயரான ஆசீர்வாதம். ஸோ இந்த ஹாஸ்பிடலுக்கும், வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டி கொலை செய்யப்பட்ட சுடர் கொடிக்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருக்கு. உங்களுக்கு சுடர்கொடியத் தெரியுமா?"
"தெரியாது.... அந்தப் பொண்ணை நான் பார்த்தது கூட இல்லை. டி.வி.யில் செய்தி வெளிவந்தபோதுதான் சுடர்கொடி என்கிற பேரே எனக்குத் தெரியும். ஆனா ஜெபமாலையை எனக்கு நல்லாத் தெரியும். வாரந்தோறும் சில குறிப்பிட்ட நாட்கள் கூர்நோக்கு இல்லத்துக்குப் போய் அங்கே இருக்கிற குற்றவாளிச் சிறுவர்களுக்கு ஜெபமாலை கவுன்ஸிலிங் பண்றதும் எனக்கு தெரியும்."
"இட்ஸ் ஓ.கே.... இன்னொரு விஷயம் ஃபாதர்"
"எஸ்"
"கூர்நோக்கு இல்லத்தில் இருக்கிற குற்றவாளிச் சிறுவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏதாவது ஏற்பட்டால் இந்த ஹாஸ்பிடலுக்குத்தான் ட்ரீட்மெண்ட்டுக்கு வர்றதாய் அப்சர்வேடிவ் ஆபீஸர் சச்சிதானந்தம் சொன்னார். அது உண்மையா ?"
"உண்மைதான். ஜி. ஹெச்.சில் சில வசதிகள் இல்லாதபோது அந்த சிறுவர்கள் இங்கே வருவாங்க..."
"கடந்த ரெண்டு வருட காலத்துல அந்த கூர்நோக்கு இல்லத்திலிருந்து எத்தனை பேர் ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தாங்க என்கிற விபரங்களை எனக்குத் தர முடியுமா ஃபாதர்?"
"உங்களுக்கு எதுக்காக அந்த விபரங்கள் ?"
"ஃபாதர் ! நான் உங்ககிட்டே ஏற்கனவே சொன்னது போல் சமீபகாலங்களில் கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பித்து போகிற சிறுவர்கள் போலீஸாரால் திரும்பவும் பிடிபடுவது இல்லை. அவர்கள் கடத்தப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டு சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது உளவுத்துறையின் செய்தி. இந்தச் செய்தி உண்மை என்று நிரூபிக்கும் வகையில் அந்த விடுதியிலிருந்து தப்பிய அன்பரசன் என்கிற சிறுவன் மும்பையில் ஒரு கோயிலின் வாசலில் அனிஷ் மெஹ்ரா என்கிற ஒரு கோடீஸ்வர இளைஞனைக் குத்தி கொலை செய்த சம்பவம் ஒரு வீடியோ ஆதாரமாக கிடைத்து இருக்கிறது."
"ஃபாதர் குறுக்கிட்டார். 'அந்தச் சிறுவன் அன்பரசன் இந்த ஹாஸ்பிடலுக்கு சமீபத்துல ஏதாவது ட்ரீட்மெண்டுக்கு வந்திருக்கானான்னு தெரிஞ்சுக்க விரும்பறீங்க இல்லையா ?"
"எஸ்.... ஃபாதர் .... அந்தச் சிறுவன் அன்பரசனுக்கூ எது மாதிரியான நோய் இருந்தது. அந்த நோய்க்கு எது மாதிரியான ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டது என்கிற விபரம் எனக்கு வேணும்."
"நோ... ப்ராப்ளம் பத்து நிமிஷத்துல அந்தத் தகவல்கள் கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன்"
ஃபாதர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விஷ்ணு மெல்ல நெளிந்தபடி, "எக்ஸ்க்யூஸ்மீ ஃபாதர்" என்றான்.
"எஸ்...."
"இங்கே ரெஸ்ட் ரூம் எங்கேயிருக்கு ?"
"வெளியே லெஃப்ட் சைட்ல இருக்கு. போய்ட்டு வாங்க...!"
விஷ்ணு எழுந்தான்.
விவேக்கை ஒரு சின்னப் புன்னகையால் நனைத்து விட்டு கதவை நோக்கி போனான்.
விஷ்ணுவின் நடத்தையைப் பார்த்த விவேக்கின் மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ் அடித்தது. "இந்த ஆசீர்வாதம் ஹாஸ்பிடலில் விஷ்ணுவுக்கு ஏதோ 'க்ளூ' கிடைத்து விட்டது...!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக