Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 ஏப்ரல், 2018

குட்டி கதைகள்



 தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக