Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 ஏப்ரல், 2018

ஒன் + ஒன் = ஜீரோ 34

அறையினின்றும் வெளிப்பட்ட விஷ்ணு நிதான நடை போட்டபடி ஹாஸ்பிடலின் ரிசப்ஷன் கெளண்டரை நோக்கிப் போனான்.
கெளண்டர்க்குள் உட்கார்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்த அந்த மஞ்சள் சுடிதார் அணிந்த பெண் விஷ்ணு வருவதைப் பார்த்துவிட்டு தயக்கமாய் எழுந்து நின்றாள்.
"ஸார்..."
"உன் பேர் என்ன....?"
"மரியா ஸார்"
"எத்தனை வருஷமாய் இங்கே வேலை பார்க்கிறே ?"
"அஞ்சு வருஷமாய்"
"இந்த ஹாஸ்பிடல்ல பேஷண்ட்ஸ் கூட்டம் அவ்வளவாக இல்லையே ஏன்....?"
"அது வந்து ஸார்.. இது ஒரு பழங்கால ஹாஸ்பிடல். மருத்துவ வசதிகள் அதிகம் இருக்காதுன்னு என்கிற எண்ணம் இந்த ஏரியாவில் இருக்கிற மக்கள் மனசுல இருக்கு..."
"அது மட்டும்தான் காரணமா ?"
"இன்னொரு காரணமும் இருக்கு ஸார்"
"என்ன...?"
"இங்கே வேலைக்கு வர்ற டாக்டர்ஸ் ஒரு ஆறுமாசம் ஒரு வருஷம்தான் வேலைப் பார்க்கிறாங்க... அப்புறம் ரிசைன் பண்ணிட்டுப் போயிருவாங்க. அதுக்கப்புறம் பேப்பர்ல விளம்பரம் பண்ணி இன்னொரு டாக்டர் வந்து வேலையில் ஜாய்ன் பண்ண மேற்கொண்டு ஒரு ஆறுமாத காலமாயிடும்... போதுமான டாக்டர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் அதிகமாய் வர்றது இல்லை....!"
"நோயாளிகள் யாரும் சரியானபடி வராத காரணத்தால டாக்டர்களும் இங்கே வேலை செய்ய விரும்பறது இல்லை... சரியா...?"
அந்த மரியா மென்மையாய் புன்னகைத்தாள்
"நீங்க சொல்றதும் சரிதான் ஸார்.."
"இப்ப இந்த ஹாஸ்பிடலில் எத்தனை டாக்டர்ஸ் வேலைப் பார்க்கிறாங்க ?"
"பதினாலு பேர் ஸார். அதுல மூணு பேர் லேடி டாக்டர்ஸ்....!"
விஷ்ணு சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு கேட்டான்.
"நோயாளிகள் அதிகம் வராததினால உனக்கும் இந்த ரிசப்ஷன் கெளண்டர்ல அதிக நேரம் உட்கார்ந்துட்டு இருக்கிறதும் போர்தான்."
"அது மாதிரியான சமயங்களில் நீ என்ன பண்ணுவே..."
"செல்போன் கையில் இருக்கும்போது என்ன ஸார் பிரச்சனை..? ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னு பார்த்தா டைம் பாஸாயிடும்"
"புத்தகம் படிக்கிறதுண்டா ?"
"உண்டு ஸார்"
"என்ன புத்தகம்...?"
"இந்த ஹாஸ்பிடலுக்கு வர்ற ஒரே புத்தகம் 'வளையோசைதான்'. அது பெண்கள் சம்பந்தப்பட்ட இதழ்..... இங்கே வேலை செய்யற எல்லா பெண்களும் படிப்பாங்க ஸார்"
"அந்த புத்தகத்தை மட்டும் வாங்கறதுக்கு என்ன காரணம்?"
"அந்த வளையோசைப் புத்தகத்தை நாங்க காசு குடுத்து வாங்கறது இல்லை ஸார்... அது காம்ப்ளிமெண்ட்ரி காப்பி. டாக்டர் ரஞ்சித்குமார்தான் எங்களுக்குக் கொண்டு வந்து கொடுப்பார்".
"டாக்டர் ரஞ்சித்குமாரா...?"
"எஸ்.... இந்த ஹாஸ்பிடலில் அவர் ஒரு சைக்யாட்ரிஸ்ட் டாக்டர்..."
"அவர் எதுக்காக ஒரு பெண்கள் வார இதழான வளையோசை பத்திரிக்கையை உங்களுக்கெல்லாம் கொண்டு வந்து தர்றார்?"
விஷ்ணு இப்படி கேட்டதும் முதல் முறையாக மரியா லேசாய் முகம் மாறினான்.
"ஸார்..... எதுக்காக இந்த விசாரணை தெரியலை.... நான் தெரிஞ்சிக்கலாமா ?"
"கண்டிப்பாய்......! இதோ பார் மரியா....! நானும் என்னோட பாஸும் இந்த ஹாஸ்பிடலுக்குள்ளே நுழைந்ததும் முதல் முதலாய் உன்னைத்தான் பார்த்தோம். உன்கிட்டதான் ஃபாதரைப் பத்தி விசாரிச்சோம் இல்லையா ?"
"ஆமா ஸார்..! நீங்க ஃபாதரைப் பற்றி விசாரிச்சுட்டு இருக்கும் போதே அவரே வந்து தன்னை உங்ககிட்டே அறிமுகப்படுத்திகிட்டு அவரோட ரூமுக்கு கூட்டிட்டுப் போனார்."
"கரெக்ட்..... நானும் என்னோட பாஸும் ஃபாதர் கூட உட்கார்ந்து அவரோட அறையில் பேசிட்டிருக்கும்போது அவர்க்குப் பின்னாடி இருந்த செல்ஃப்பில் சில 'வளையோசை' இதழ்களைப் பார்த்தேன். அப்பத்தான் என்னோட மூளைக்குள் ஒரு ப்ளாஷ் வெளிச்சம் அடிச்சது."
"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை ஸார்."
"புரியும்படியாவே சொல்றேன். நானும் பாஸும் உன்கிட்டே விசாரிக்க வரும்போது நீயும் உன்னோட கையில் வளையோசை புத்தகத்தை வெச்சுகிட்டு புரட்டிப் பார்த்துட்டிருந்த. ஆனா பத்திரிக்கையோட முழுபேரும் என்னோட பார்வைக்கு கிடைக்காமே கடைசி 'சை' மட்டுமே தெரிஞ்சுது. ஆனா ஃபாதரோட அறைக்குப் போன பின்னாடிதான் அவரோட அறையில் செல்ஃப்பில் இருந்த புத்தகங்களைப் பார்த்த பிறகுதான் நீ படிச்சுட்டு இருந்த புத்தகமும் 'வளையோசை'யாகத்தான் இருக்கனும்ன்னு நினைச்சு உன்னை விசாரிக்கிறதுக்காக வெளியே வந்தேன்."
"ஸார்.... நீங்க சொல்றதை பார்த்தா அந்த 'வளையோசை' புத்தகத்தைப் படிக்கிறதுல ஏதோ தப்பு இருக்கிற மாதிரி தெரியுது."
"தப்பு இருக்கா இல்லையான்னு இனிமேல்தான் கண்டுபிடிக்கனும். இந்த வளையோசை வார இதழ்களை காம்ப்ளிமெண்ட்டா கொண்டுவந்து கொடுத்து டாக்டர் ரஞ்சித்குமார்ன்னு சொன்னே இல்லையா ?"
"ஆமா.... ஸார்"
"அவர் எதுக்காக இந்த புத்தகத்தை காம்ப்ளிமெண்ட்டா கொண்டு வந்து உங்களுக்கெல்லாம் படிக்கக் கொடுக்கணும் ?"
"காரணம் இருக்கு ஸார்"
"என்ன காரணம் ?"
"டாக்டர் ரஞ்சித்குமார் அந்த வளையோசை பத்திரிக்கைக்கு ஆசிரியையாய் இருக்கிற மீனலோசனிக்கு தம்பி ஸார். ஒரு நாள் ஃபாதர் விளையாட்டாய் டாக்டர் ரஞ்சித்குமார்கிட்டே 'உங்க சிஸ்டரோட மேகஸீன்தானே...? நம்ம ஹாஸ்பிடலுக்கு வாரா வாரம் காம்ப்ளிமெண்ட் காப்பி தரக் கூடாதான்னு கேட்டுட்டார். டாக்டரும் அதை சீரியஸாய் எடுத்துகிட்டு வாராவாரம் அஞ்சு காப்பி கொண்டு வந்து ரிசப்ஷன்ல கொடுத்துடுவார். இந்த ஹாஸ்பிடல்ல வேலை செய்யற எல்லா ஸ்டாஃப்பும் வாங்கிப் படிப்பாங்க. ஃபாதரும் சில சமயங்களில் வாங்கிட்டுப் படிப்பார்...."
"வளையோசை பத்திரிக்கையின் ஆசிரியை மீனலோசனியை உனக்குத் தெரியுமா ?"
"தெரியாது ஸார்... நான் நேர்ல பார்த்தது இல்லை. ஆனா இந்த ஹாஸ்பிடலுக்கு ஒரு தடவை வந்துட்டுப் போயிருக்கிறதாய் கேள்விப்பட்டு இருக்கேன்."
"அவங்க எப்ப வந்தாங்க ?"
"ஆறு மாசத்துக்கு முன்னாடி"
"எதுக்கு வந்தாங்கன்னு தெரியுமா ?"
"தெரியாது ஸார்...."
விஷ்ணு மேற்கொண்டு மரியாவிடம் கேள்வி கேட்கும் முன்பு விவேக் ஃபாதரின் அறையிலிருந்து வெளிப்பட்டான். விஷ்ணுவைப் பார்த்து 'வா' என்பது போல கையசைத்தான்.
விஷ்ணு பக்கத்தில் வந்தான்.
"என்ன பாஸ் ?"
"வா... போலாம்.... ஃபாதர்கிட்டே விசாரணை முடிஞ்சுது."
விஷ்ணு குரலைத் தாழ்த்தினான்.
"ஒரு நிமிஷம் பாஸ்... அந்த ரிசப்ஷன் மரியாகிட்டே விசாரணை பண்ண வேண்டியிருக்கு"
"அந்த வளையோசைப் பத்திரிக்கையைப் பற்றியும் பத்திரிக்கை ஆசிரியை மீனலோசனியின் தம்பியான சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ரஞ்சித்குமாரைப் பற்றியும்தானே அந்த பொண்ணுகிட்டே கேட்கப்போறே...."
விஷ்ணுவின் வாய் அவனையும் அறியாமல் சில மில்லிமீட்டர் விட்டத்துக்கு பிளந்து கொண்டது.
"எ.....எ.... எப்படி பாஸ்.... நான் மரியா கிட்ட பேசிட்டிருந்த விஷயமெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ?"
விவேக் சின்னதாய் சிரிப்பொன்றை சிந்தியபடி சொன்னான். "ஃபாதரோட அறையில் நீயும் நானும் உட்கார்ந்து அவர்கிட்டே பேசிட்டிருக்கும்போதே அவர்க்குப் பின்னாடி செல்ஃப்பில் இருந்த 'வளையோசை' இதழ்களை நீ பார்த்த மாதிரியே நானும் பார்த்துட்டேன். ஆனா உன்னால அந்த இடத்துல உட்கார முடியலை. ஃபாதர்கிட்டே ரெஸ்ட் ரூம் எங்கே இருக்குன்னு கேட்டுகிட்டு நீ வெளியே போகும்போதே எனக்குத் தெரியும் நீ நேரா இந்த ரிசப்ஷனிஸ்ட் கிட்டேதான் போய் என்கொயர் பண்ணுவேன்னு..."
"பா....பாஸ்"
"நீ இங்கே ரிசப்னிஷ்டை 'என்கொயர்' பண்ணும் போதே நான் ஃபாதர்கிட்டே 'வளையோசை' பத்திரிக்கைப் பற்றியும், ஆசிரியை மீனலோசனியைப் பற்றியும் விசாரிச்சுட்டேன். மீனலோசனியின் தம்பியான சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ரஞ்சித்குமார் பற்றியும் சொன்னார். ஆனா...."
"ஆனா... என்ன பாஸ்...?"
"ரஞ்சித்குமார் கடந்த ஒரு வார காலமாய் ஹாஸ்பிடலுக்கு வர்றது இல்லை. எங்கே இருக்கார்ன்னும் தெரியலை. அவரோட செல்போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு. ரஞ்சித்குமாரோட அட்ரஸை ஃபாதர் கொடுத்து இருக்கார்."
"இப்ப அங்கதான் போகப் போறோமோ பாஸ்?"
"இல்ல"
"பின்னே..?"
"வேற ஒரு இடத்துக்கு...." சொன்ன விவேக வேகமாய் நடக்க ஆரம்பித்துவிட விஷ்ணு பிரமிப்பினின்றும் மீளாமல் விவேக்கை அதே வேகத்தோடு பின் தொடர்ந்தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக