கலிங்கம் காண்போம் - பகுதி 42 - பரவசமூட்டும் பயணத் தொடர்
இன்னும் சிறிது நேரத்தில் இருள் கவியப் போகிறது. மேற்கில் நன்கு இறங்கிவிட்ட பரிதிப்பொற்கதிர்கள் சூரியக் கோவிலில் பட்டுச் சிதறின. மாலை நேரத்தில் சுற்றுலாத் திரள் கூடிவிட்டது. கூட்டம் கூட்டமாக வந்தடைந்த மக்கள் கொனாரக் கோவிலைச் சுற்றி விளையாடத் தொடங்கினர். காண வேண்டிய இடத்திற்கு வந்தால் கண்ணால் காண்பதைவிடவும் கைப்பேசியிலும் படக்கருவியிலும் படமெடுப்பதே குறியாய் இருக்கிறார்கள். காண்பதற்கு முன்னால் படமெடுத்துவிடத் துடிக்கிறார்கள். படங்கள் மட்டும் இல்லையென்றால் நாம் சென்றதற்கும் கண்டதற்கும் எந்தச் சான்றும் இல்லாமல் போய்விடும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
கோவிலின் தென்புறத்திலுள்ள புல்வெளியில் என்னை மறந்து நடந்தேன். இப்போது தன்னந்தனியாக நின்றேன். மேற்கு கிழக்காகத் தெரிந்த கோவில் நீளத்தை மெய்ம்மறந்து பார்த்தேன். தென்புறத்திலிருந்து மண்டபத்திற்கு ஏறும் படியில் இரண்டு பெண்பிள்ளைகள் அமர்ந்து அதுவரை தாம் எடுத்திருந்த படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆயிரமாயிரம் சிற்பிகள் சேர்ந்துழைத்து ஆக்கிய திருக்கற்றளியின் கீழே இரண்டு கன்னியரின் களிப்பு தோன்றிவிட்டது என்னும்போதே அக்கோவில் முழுமை பெற்றுவிட்டது. புல்வெளியில் ஆங்காங்கே குழாய்நீர் கசிந்துகொண்டிருந்தது. ஒரு குழாயைப் பிடித்தெடுத்து தண்ணீர் குடித்தேன். சுவையான நீர் என்று சொல்வதற்கில்லை. அதன் சுவையற்ற சுவையை ஏற்றுக்கொண்டு குடித்தால் நீர்விடாய் தணிக்கக் கூடியதுதான்.
கொனாரக் கோவிலைத் தொலைவிலிருந்து காணும்போது பேருருவாகத் தெரிகிறது. அருகில் வந்து காணும்போது மேல்விளிம்புகளும் பக்கவாட்டுச் சுவர்களும் மறைந்து இதோ கண்டு முடித்துவிடலாம் என்பதுபோல் தென்படுகிறது. அருகிலும் தொலைவிலுமாய் அக்கோவிலைச் சுற்றிச் சுழன்று காண்கையில்தான் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.
தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டிருந்த உணவுக்கூடத்திற்கு வந்தேன். போஜனமண்டபம் என்று அழைக்கப்பட்ட அது முற்றாகச் சிதைந்துவிட்டது. அடித்தளப் பகுதி மட்டுமே மிச்சமிருக்கிறது. கோவிலைச் சுற்றிலும் குவிந்திருந்த மணற்குவியலை அகற்றித் தூய்மைப்படுத்தியபோதுதான் அந்த மண்டபத்தைக் கண்டுபிடித்தார்கள். சுவரும் கூரையும் இல்லாமல் அடித்தளப்பகுதி மட்டுமே இருக்கிறது. கோவிலின் பொற்காலத்தில் அங்கே எந்நேரமும் அடுப்பு எரிந்துகொண்டிருக்கும். கோவிலுக்கு வரும் அடியார்கள் அமுதுண்டு செல்ல வேண்டும். கோவிலுக்கு நெல்லும் பருப்புமாய் விளைமணிகளைக் கொணர்ந்து தருவோரும் அம்மண்டபத்தில்தான் தந்து செல்ல வேண்டும். கோவில் கட்டப்பட்டபோதே அது கட்டப்பட்டிருக்கவில்லை. பல பத்தாண்டுகள் கடந்து பிற்சேர்க்கையாகத்தான் அம்மண்டபம் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இப்போது கும்பல் கும்பலாய் மக்கள் வரத்தொடங்கிவிட்டனர். நான் ஜனமோகனம் எனப்படுகின்ற பெருமண்டபத்தின் மேலே ஏறிக்கொண்டேன். ஒவ்வொரு தூண்களையும் சிற்பங்களையும் ஆசைதீரப் பார்த்தேன். மணலேற்றி மூடப்பட்ட மண்டபத்தின் கதவுப் பகுதியில் கற்சுவர் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. நிரந்தர மூடல். உள்ளே பெருமணற்குவியல் இருக்கிறது. அதுதான் மீதமுள்ள கற்சுவர்கள் சரியாதபடி தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. கோவிலை அமைக்கும்போது எப்படி மணல்மூடி ஏற்றினார்களோ அதே முறைப்படி கோவிலின் சரிவும் தடுக்கப்பட்டிருக்கிறது.
கூட்டமாய் வருவோர் கோவிலில் கசமுச என்று பேசிக்கொண்டே அந்நாளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திச் செல்கின்றனர். தனியாய் வருகின்ற பலர் கோவிலில் உறைந்திருக்கும் எதையோ தம் அகமொழியில் அகழ்ந்தெடுப்பவரைப்போல் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்க்கின்றனர். அவர்களுடைய முனைப்பைக் காண்கையில்தான் நாம் வந்திருக்கும் இடத்தின் பெறுமதியை நினைவுக்குக் கொண்டுவருகிறோம். ஆங்காங்கே தென்படும் வெளிநாட்டினர் மூச்சுவிட்டால்கூடக் கேட்டுவிடுமோ என்னும் கவனத்தோடு ஒவ்வொரு நிலையாய்ப் படமெடுத்தும் பார்த்துக்கொண்டு வருகின்றனர். அவர்களை நாம் சிறுநகையோடு கடந்து செல்வது இனிமையாக இருக்கிறது. மீண்டும் நடன மண்டபத்தின் ஆயிரம் சிலைகளைப் பார்த்துக்கொண்டேன். கனமாகிப்போன உள்ளத்தோடு கோவிலைவிட்டு வெளியே வந்தேன். சூரியன் மேற்கில் மறைந்துவிட்டான். அவன் மறைந்தபின் வானத்தில் பாய்கின்ற ஒளிக்கதிர்களின் உதிரி வெளிச்சத்தில் நடந்தேன்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக