Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 ஏப்ரல், 2018

கலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 39

கலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 39

கொனாரக் கோவிலில் நுழைந்ததும் நேராக மேல்தளத்திற்குச் செல்லக் கூடாது. கீழேயே சுற்று வட்டமாகச் செல்ல வேண்டும். மேடைத்தளத்தின் பக்கவாட்டுச் சுவர்களில்தாம் ஆயிரக்கணக்கான சிற்பங்கள் உள்ளன. சிற்பங்கள் ஒவ்வொன்றும் சுண்டு விரல் அளவு முதற்கொண்டு இடுப்பளவு, ஆளுயரம் வரையிலானவை. அவற்றில் பெரும்பாலானவை மூக்கு உடைந்தோ, முகஞ்சிதைந்தோ காணப்படுகின்றன. எந்தச் சிற்பமும் சிதைவில்லாமல் முழுமையான தன்மையோடு இருக்கவில்லை. ஆனால், காலம் தனக்குள் கரைத்துக்கொண்டது போக எஞ்சியிருக்கும் சிற்பங்களின் பேரழகுக்கே நம் மதி மயங்குகிறது.



Exploring Odhisha, travel series - 39
சிற்பத்திலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவர் எனில் அவர் தம் வாழ்வில் ஒருமுறையேனும் கொனாரக் கோவிலைக் கண்டுவிட வேண்டும். அதனால்தான் கொனாரக் கோவிலுக்கு உலகெங்கிலுமிருந்து சுற்றுலா மக்கள் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றனர். பண்டைப் பெருமை வாய்ந்த இந்திய இடங்களில் அஜந்தா, எல்லோரா, கொனாரக் ஆகியவைதாம் பாரெங்குமுள்ள நுண்கலை மாணவர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.


Exploring Odhisha, travel series - 39
கொனாரக் கோவில் சிற்பங்கள் பாலுறவுக் கலை விளக்கங்களாக இருக்கின்றன. செல்வமும் வளமும் அளவின்றிப் பெருகிய இடத்தில் இன்பத்தின் நாட்டமே முதன்மையாக இருந்ததில் வியப்பில்லை. கஜூராகோ சிற்பங்களைவிடவும் கொனாரக் கோவில் சிற்பங்களின் எண்ணிக்கையே மிகுதியாக இருக்க வேண்டும். சிற்பங்களை முழுமையாகப் பார்வையிட ஒருநாள் போதாது. ஆண்பெண் கலவிச் சிற்பங்களின் பெருந்தொகுதி ஒருபக்கம் என்றால் கண்களில் ஒற்றிக்கொள்ளும் தரத்தில் அமைந்த தேர்ச்சக்கரங்கள் மற்றொரு வியப்பு.


Exploring Odhisha, travel series - 39
முன்பு வெளியிடப்பட்ட சிவப்பு நிறத்திலான இருபது உரூபாய்த் தாள் நினைவிருக்கிறதா ? அதன் பின்பக்கம் கொனாரக் கோவிலின் தேர்ச்சக்கம்தான் அச்சிடப்பட்டிருந்தது. ஒடியா மாநிலத்தை நினைவூட்டக்கூடிய அடையாளப்பொறியாக கொனாரக் தேர்ச் சக்கரத்தையே பயன்படுத்துகிறார்கள். தேர்ச்சக்கரம் ஒவ்வொன்றும் ஒரே அளவினதாய் இருந்தாலும் ஒன்றுக்கொன்று நுண்ணிய வேறுபாடுகள் காட்டும். மொத்தம் பன்னிரண்டு இணைகள், எனில் இருபத்து நான்கு தேர்ச் சக்கரங்கள். தேர்ச்சக்கரங்களின் ஆரக்கால்களும் அச்சாணிகளும் நடுவிலமைந்த இருசுகளுமாய்த் தோன்றும் காட்சியில் எங்கே இது நகர்ந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.


Exploring Odhisha, travel series - 39
தேர்ச்சக்கரங்களையும் சிற்பங்களையும் தீண்டலாகாது என்னும் நோக்கில் அருகில் இரண்டடி இடைவெளி விட்டு ஒரு கம்பித் தடுப்பு அமைத்திருக்கிறார்கள். ஏழு சோடிக் குதிரைகளால் இழுக்கப்படுமாறு அமைக்கப்பட்டிருந்த அந்தக் கோவில் தேரமைப்பில் குதிரைச் சிற்பங்கள் பெருமளவு சிதைந்திருக்கின்றன. ஒடியர்களின் போர்ப்படையில் குதிரைகளும் யானைகளும் மிக்கிருந்திருக்கின்றன. சிற்பங்கள் முழுக்க யானைகளும் குதிரைகளும் அணியணியாய்த் திரண்டு செல்கின்றன.


Exploring Odhisha, travel series - 39
கொனாரக் கோவிலைச் சுற்றிலும் அழகிய புல்வெளியை அமைத்திருக்கிறார்கள். புல்வெளியிடையே ஆங்காங்கே பெருங்கற்களால் செதுக்கப்பட்ட தனிச்சிற்பங்களும் இருக்கின்றன. அடிபட்ட போர்வீரனைத் தன் தும்பிக்கையால் அள்ளி எடுத்துக்கொண்டு பதைபதைத்து ஓடிவரும் யானையின் சிற்பம் ஒன்றிருக்கிறது. போர்க்களத்தில் தன்னை ஆளும் வீரன் அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடந்தபோது அவனை அப்படியே தந்தத்தாலும் தும்பிக்கையாலும் தூக்கி எடுத்துக்கொண்டு மருத்துவப் பகுதியை நோக்கிச் செல்லும் யானையின் சிற்பம் அது. அவ்யானையின் கண்களில் தெரியும் மருட்சியைக் கண்டதும் அதைச் செதுக்கிய சிற்பிகளின் முன்னே மண்டியிட்டுத் தாள்பணிந்து வணங்கத் தோன்றியது. அன்றைய போர்க்களத்தில் அடிபட்டவர்களைத் தூக்கிவரும் பணியினைச் செய்யுமாறு யானைகள் பழக்கப்படுத்தப்பட்டிருந்தன என்றும் விளங்கிக்கொள்ளலாம்.


Exploring Odhisha, travel series - 39
ஒடியர்கள் தங்கள் மறத்தன்மையின் குறியீடாகவே சிங்கங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். யானைகளை ஏறியடக்கும் அரிமாக்களின் சிற்பங்களையும் அங்கங்கே பார்க்க முடிகிறது. கோவில் முகப்பிலேயே அத்தகையை பெருஞ்சிற்பங்கள்தாம் வரவேற்கின்றன. அப்படியே சுற்றிக்கொண்டு கோவிலின் பின்பக்கம் வந்து சேர்ந்தேன். இதுவரை கோவிலைக் கண்டது எதிர்வெய்யிலில்தான். இப்போது மாலைப் பொன்வெய்யில் கோவில்மீது மஞ்சள் வெளிச்சத்தைப் பரவச் செய்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக