Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 ஏப்ரல், 2018

கலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 40

கலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 40



சூரியக் கோவில் போன்ற அமைப்புக்கு என்ன தேவை ஏற்பட்டிருக்க வேண்டும் ? நாட்டின் பிற கோவில்கள் வேறு வகையிலும் வடிவத்திலும் இருக்கையில் கொனாரக் கோவில் அமைப்பின் சிறப்புத்தான் என்ன ? அங்கேதான் வியப்பிருக்கிறது. கொனாரக் கோவிலை விடிகாலை நேரத்தில் மேற்கிலிருந்து பார்க்க வேண்டும். பொழுது மறையும் மாலையில் கிழக்கிலிருந்து பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும்போதுதான் சூரியனோடு சேர்ந்துகொண்டு அக்கோவில் காட்டும் காட்சியெழிலை உயிர்ப்போடு உணர முடியும்.
Exploring Odhisha, travel series - 40
விடிகாலையில் கோவிலின் மேற்குப் பகுதியில் நிற்கும்போது அந்தத் தேரானது தன் முடியில் சூரியனை ஏந்திக்கொண்டு கடலிலிருந்து எழுவதுபோல் தோன்றும். கதிரவன் கிளம்புகின்ற விரைவுக்கேற்ப காலத்தின் பெருங்கடலிலிருந்து மெல்ல எழுந்து பாய்ந்து வருகின்ற தோற்ற மயக்கத்தை அடைவோம். அதற்கேற்பவே கோவிலானது கறுப்புக் கற்களால் செதுக்கப்பட்டிருக்கின்றன. போர்த்துக்கீசியர்கள் கொனாரக் கோவிலைக் 'கறுப்பு பகோடா' என்றுதான் அழைத்திருக்கிறார்கள். கன்னக்கரேல் என்ற தேரின்மீது தகத்தகாய சூரியன் கடலடியிலிருந்து எழுந்து வருகிறான். அதைப்போலவே மாலை நேரத்தில் கடற்கரையிலிருந்தபடி கொனாரக் கோவிலைப் பார்க்கையில் சூரியனோடு சேர்ந்து தேரும் இருட்டில் மறைந்துவிடும். எழுஞாயிற்றையும் படிஞாயிற்றையும் இந்நிலையில் காண்பது மட்டுமன்றி, கோவிலுக்குள் நுழையும் சூரியக் கதிர்கள் விளைவிக்கும் திருக்கோலங்களும் நிறையவே இருந்திருக்கின்றன. நினைத்தாலே மெய்ச்சிலிர்ப்பு.

Exploring Odhisha, travel series - 40


சூரியனை இழுக்கும் ஏழு குதிரைகளுக்கும் பெயர்கள் இருக்கின்றன. காயத்திரி, பிரகதி, உசனி, சகதி, திரிசதுபை, அனுசதுபை, பங்கதி என்பவை அப்பெயர்கள். சூரிய தேவனார் தம் இருகைகளிலும் தாமரைப்பூக்களை ஏந்தியிருக்கிறார். சூரியனைக் கண்டதும் மலரும் பூமியின் கண்களே தாமரைப் பூக்கள் ! தற்போது இடிந்து விழுந்து காணாமல் போய்விட்ட கருவறையின் வடிவமைப்பைக்கூட தாமரை மொக்கு வடிவத்தில் இருந்தது எனலாம். தேர்ப்பாகனுக்கு அருணன் என்னும் பெயர். பன்னிரண்டு இணைகளாலான தேர்க்கால்களும் ஆண்டின் பன்னிரண்டு திங்கள்களைக் குறிக்கின்றனவாம். இணைத் தேர்ச்சக்கரங்கள் வளர்பிறை, தேய்பிறை என்னும் திங்களின் இருபகுப்புகளைக் குறிக்கும்.

Exploring Odhisha, travel series - 40
கோவிலின் பல்வேறு பகுதிகளை ஒடிய மொழியில் 'தெயல' (deula) என்று அழைக்கிறார்கள். கருவறையின் மேலே ஏறியமர்ந்திருக்கும் கோபுரப் பகுதிக்கு 'இரேக தெயல' என்று பெயர். அதற்கு முன்னால் உள்ள மண்டபத்திற்குப் 'பத்திர தெயல' என்பது பெயர். கோவிலைச் சுற்றியுள்ள பீடம்போன்ற சுற்றுப்பகுதிக்குச் 'பீட தெயல' என்று பெயர். கொனாரக் கோவில் வடிவக்கணக்கீடுகளின் முழுத்துல்லியத்துடன் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு இன்றைய அறிஞர்கள் வாயைப் பிளக்கிறார்கள். வட்டமும் சதுரமும் செவ்வகமும் கனசதுரமும் கூம்பும் உருளையுமாய் ஆயிரம் கணக்கீடுகளின் செம்மையைக் கோருகின்ற பெரும்படைப்பு ஆயிறே! கோவிலை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கான ஒடிய இலக்கண நூல் 'சில்பசரினி'. கொனாரக் கோவில் மட்டுமில்லை, ஒடியத்தின் அனைத்துக் கோவில்களுமே சில்பசரினியில் உள்ளபடி செம்மையாகக் கட்டப்பட்டிருக்கின்றன.

Exploring Odhisha, travel series - 40
கோவிலைச் சுற்றியபடி இப்போது பின்னே வந்துவிட்டோம். மாலை நேரம் என்பதால் பொன்வெய்யிலில் கோவிலின் அழகு துலக்கமாகத் தெரிந்தது. இடிந்திருந்த கருவறைக் கோபுரத்தின் கற்கள் ஓரளவு ஒழுங்குசெய்து குவிக்கப்பட்டிருந்தன. மலைபோல் குவிந்திருந்த இடிபாட்டுக் கற்கள் அக்கோபுரத்தின் பேருருவைக் கற்பனையால் காணப் பணித்தன. கற்பனையில் கண்டதும் கண்கள் பனித்தன. அந்தக் கோபுரம் மட்டும் இடியாமல் இருந்திருந்தால் மனித முயற்சியால் செய்யப்பட்ட, காலத்தால் பழைமையான, மிகப்பெரிய, தனியொரு கலைப்பெருங்கோவில் கொனாரக் கோவிலாகத்தான் இருந்திருக்கும். இன்றைக்கும் கொனாரக் கோவில் அளவுக்கு நேர்நிகர் கூறுவதற்கு வேறொரு பெருங்கலைக்கோவில் இல்லைதான். கொனாரக் கோவிலைவிடவும் பெரிய கோவில்கள் இருக்கின்றனதாம், அவை அளவில் மட்டுமே பெரியவை. ஒரு விரற்கடை அளவுகூட வெற்றிடமில்லாதபடி தன் உடலெங்கும் ஆயிரமாயிரம் சிற்பங்களைத் தாங்கி நிற்கும் தனிப்பெருங்கற்கலையகம் கொனாரக் கோவில்தான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக