Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 ஏப்ரல், 2018

கலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 41

கலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 41


சூரியக் கோவிலின் பின்பக்கமிருந்து பார்க்கையில் அதன் பேருரு கண்மயக்குகிறது. தென்மேற்கு மூலையில் மாயாதேவி கோவில் ஒன்றிருக்கிறது. நிழலைக் குறிக்கும் தன்மையுடையது அப்பெயர். சுவர்ப்பூச்சு உதிர்ந்து மேற்கூரையற்று இருக்கும் அதன் நிழலில் அமர்ந்தபடி சூரியக்கோவிலைச் சிறிது நேரம் பார்த்தேன். கோவிற்பணிகள் நடந்தபோது அங்கே எத்தனை கலைஞர்கள் நடமாடித் திரிந்திருப்பர் என்ற கற்பனை தோன்றியது. நீர்ப்பானைகளும் மோர்ப்பானைகளும் குறுக்கும் நெடுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு சோற்றுருண்டைகளும் இனிக்கும் மாவுருண்டைகளும் எல்லார்க்கும் வழங்கப்பட்டு நகைப்பும் களிப்புமாய்க் கலையெழுதிய காலம் கண்முன்னே உருத்திரண்டது.

Exploring Odhisha, travel series - 41
அங்கிருந்து நகர்ந்து இனி வெளியேற வேண்டும். தென்புறத்தின் பன்னிரண்டு தேர்ச்சக்கரங்களையும் பார்த்தபடியே வந்தேன். கருவறைப் பகுதியைத் தாண்டி மக்கள் மண்டபத்தருகே வருகையில் ஒரு படிக்கட்டு வரிசை இருக்கிறது. வடக்குப் பகுதியில் அதே வகையிலான படிக்கட்டு வரிசை உண்டு. அதன்மீது சற்றே அமர்ந்திருந்தேன். அப்படிக்கட்டில் எந்நினைவுமற்று ஒரு நாய் உறங்கிக்கொண்டிருந்தது.
அக்பருடைய ஆட்சிக் காலத்தில் கொனாரக் கோவிலுக்கு வந்த அபுல்பசல் தம்முடைய நூலான 'அயினி அக்பரி'யில் எழுதியுள்ள குறிப்பு இஃது : "படிக்கட்டுகளைத் தாண்டி மேலேறி வந்தால் மிகப்பெரிய கூடமொன்று இருக்கிறது. கல்வளைவுக்கு அப்பால் சூரியனை நடுவாகக் கொண்டு எல்லாக் கோள்களுக்குமான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றைக் குனிந்தும் நின்றும் அமர்ந்தும் சிரித்தும் களித்தும் பல்வேறு நிலைகளில் எண்ணற்றவர்கள் வணங்குகின்றனர். கோவிலெங்கும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் உள்ள பல உருவங்கள் இயற்கையில் இல்லையெனினும் கற்பனையில் உயிர்பெற்று வாழ்கின்றன."
கிபி 1803ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கப்பல் பிரிவினர் வங்காள ஆளுநர்க்கு எழுதிய கடிதத்தில் சூரியக்கோவிலைக் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தார்கள். அக்கடிதத்தின் பின்னரே கோவிலின் சிதைவுகள் களவாடப்படாமல் இருக்க காவல் போடப்பட்டது. ஆனாலும் அப்பகுதி அரசரின் நடவடிக்கையால் பல சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. கருவறைக் கோபுரத்தின் விழாமலிருந்த சிறு பகுதியும் 1848ஆம் ஆண்டு வீசிய புயலில் விழுந்துவிட்டது. அன்னாசிப் பழத்தின் ஒரு கீற்றைப்போல் அந்தப் பகுதிமட்டும் நெடுநாள்களாக வீழாமல் தொக்கியிருந்தது. பிறகு கொல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்திற்குக் கொனாரக் கோவில் சிலைகள் பல எடுத்துச் செல்லப்பட்டன. பிறகுதான் ஜனமோகனம் எனப்படும் மக்கள் மண்டபத்திற்குள் முழுக்க முழுக்க மணலால் நிரப்பி இழுத்து மூடினர். உள்ளே மணற்குவியல் தாங்கிப் பிடித்திருப்பதால்தான் இப்போது நாம் காண்கின்ற மீத வடிவம் எஞ்சியிருக்கிறது. கோவிலின்மீது மணற்புயலடித்து சிற்பங்களைச் சிதைக்காதிருக்கும்பொருட்டு கடற்கரையில் மரங்கள் நட்டனர். கோவில் வளாகத்தைச் சீர்படுத்தும் நடவடிக்கைகளில்தான் மாயாதேவி ஆலயம், மால் ஆலயம், சமையற்கூடம் ஆகிய மணலிற் புதைந்திருந்த பகுதிகளை அகழ்ந்தெடுத்தனர். காலத்தின் எல்லாக் குலைவுகளையும் தாங்கிக்கொண்டு கடைசி எச்சமாய் நம்முன் நிற்கின்றது கொனாரக் சூரியக்க்கோவில்
சுற்றி வந்து மக்கள் மண்டபத்தின் வாயிலருகில் நின்றேன். உடைந்து விழாதவாறு கருங்கல் தூண்கொண்டு முட்டு கொடுக்கப்பட்டிருந்தது. அண்ணாந்து நோக்கினால் அப்படியே நிலைத்துப் பார்க்கும்படியான கலைத்தாண்டவம். உருவில் பாதியாய் இருக்கும் இந்த மண்டபமே இத்தனை பேரழகுடன் இருக்கிறதென்றால் கருவறைப் பெருங்கோபுரத்தின் பேரழகு என்னே தகைமையோடு இருந்திருக்க வேண்டும் !
மனத்தில் சொல்லவொண்ணாத இறுக்கம் பரவியது. இப்போது சூரியன் மேற்கில் இறங்கியிருந்தான். தான் ஓட்டிச் செல்ல வேண்டிய கருந்தேரினைக் கடற்கரையொன்றில் காலச்சிதைவில் தவிக்கவிட்டு வானில் ஊர்ந்து சென்றுவிட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக