தகவல் அறிவியலின் பரபர வளர்ச்சி இன்றைக்கு
இளைஞர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதை நோக்கி பலர் தங்களுடைய பார்வையைத்
திருப்பியிருக்கின்றனர். இதையே வாய்ப்பாக வைத்துக் கொண்டு பலர் ஃபாஸ்ட் புட் போல
பயிற்சி நிலையங்களை உருவாக்கி தகவல் அறிவியல் கற்றுத் தருகிறேன் என வலை விரிக்கத்
துவங்கியிருக்கின்றனர். பயிற்சி நிலையம் சின்னதாக இருக்கிறதா ? பெரியதாக
இருக்கிறதா என்பதல்ல பிரச்சினை. சரியான விதத்தில், சரியானவர்களால், சரியானவைகளைக்
கற்றுத் தருகிறார்களா என்பதே முக்கியம்.
தகவல் அறிவியல் மீதான வசீகரம் இருப்பது நல்லது தான். நீச்சல்
தெரியாமல் குளத்தில் குதிப்பதைப் போலவோ, நீச்சலே பிடிக்காமல் குளத்தில்
குதிப்பதைப் போலவோ டேட்டா சயின்ஸ் துறையில் நுழைவது காலவிரயம் ! யாரெல்லாம் தகவல்
அறிவியலைக் கற்றுக் கொள்ளலாம் ?. அல்லது டேட்டா சயின்ஸைக் கற்றுக் கொள்ள
என்னென்ன திறமைகள் இருக்க வேண்டும் ? என்பதைப் பற்றிய ஒரு அடிப்படைப்
புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
இன்றைக்கு தகவல் அறிவியலைக் குறித்து பேசும் பலரும் பல விதமான
தகவல்களைத் தருகின்றனர். இதில் எது சரி, எது தவறு என்பதைப் புரிந்து கொள்வதில்
பலருக்கும் குழப்பம். ஹடூப், மெஷின் லேர்னிங், அனாலிடிக்ஸ், சயின்டிஸ்ட் போன்ற
வார்த்தைகள் தகவல் அறிவியல் துறையில் நுழைய விரும்பும் இளைஞர்களை குழப்பக் கூடும்.
எனவே தகவல் அறிவியல் குறித்து இதுவரை மற்றவர்கள் சொன்ன விஷயங்களை கொஞ்ச நேரம்
ஒதுக்கி வையுங்கள். தகவல் அறிவியலுக்குள் நுழைய அடிப்படையாக என்னென்ன தேவை என்பதை
மிக மிகச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.
முதலாவது, தகவல் அறிவியல் என்பது எண்களோடு விளையாடும் வேலை. புள்ளி
விவரங்கள், கூட்டல், கழித்தல், அல்காரிதம், கேல்குலஸ், நிகழ்தகவு போன்ற விஷயங்கள்
தகவல் அறிவியலின் முதுகெலும்பாக இயங்கக் கூடியவை. இவை எல்லாமே கணிதவியலின்
அடிப்படை விஷயங்கள். எனவே, தகவல் அறிவியல் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு
முதலில் இருக்க வேண்டிய தகுதி, கணிதவியலில் அறிவு.
அதற்காக கணிதவியலில் இளங்கலைப் பட்டமோ, முதுகலைப் பட்டமோ இருந்தால் தான்
தகவல் அறிவியலில் நுழைய முடியும் என்றில்லை. கணிதத்தின் மீது ஆர்வமும், அடிப்படை
அறிவும், கற்றுக் கொள்ளும் விருப்பமும் இருந்தால் போதும். கணிதம் என்றாலே காத
தூரம் ஓடுபவர்கள் தகவல் அறிவியல் பக்கம் வராமல் இருப்பது நல்லது
அப்படிப்பட்டவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தங்களை தகவல் அறிவியல் தரலாம்
தகவல் அறிவியல் துறைக்கு பல்வேறு நிலையிலுள்ள மக்களும் வருகின்றனர்.
இப்போது தான் படித்து முடித்த மாணவர்கள் முதல் பி.ஹைச்.டி முடித்த அறிவர்கள் வரை
இதில் அடக்கம். அதனால் சிலர், "பி.ஹைச்.டி படித்தால் தான் இதெல்லாம் புரியும்
போல !", என தவறாய் நினைப்பதுண்டு. அந்த நினைப்புகளையெல்லாம் முளையிலேயே
கிள்ளி எறியுங்கள்.
இரண்டாவது தேவை, கணினி அறிவு. மென்பொருள் எழுதத் தெரிந்திருக்க
வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. அட்வான்ஸ் மென்பொருட்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை.
அவற்றைப் படிப்படியாகக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அடிப்படை மென்பொருள் அறிவு
கண்டிப்பாகத் தேவை. தகவல்களை அல்காரிதங்களின் மூலமாய் தேவையான தகவல்களாக
மாற்றுவதற்கு மென்பொருள் அறிவு அவசியம்.
பைத்தான். ஆர் போன்ற மென்பொருட்கள் தெரிந்திருந்தால் மிக எளிது.
இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. அடிப்படை மென்பொருட்களான சி, சி++, ஜாவா போன்ற
மென்பொருட்களில் நல்ல பரிச்சயம் இருந்தாலே போதும். மென்பொருள் பற்றிய பரிச்சயம்
அறவே இல்லை என்பவர்களால் தகவல் அறிவியல் துறையில் நுழைய முடியாது. எனவே கொஞ்சம்
புரோகிராமிங் பக்கம் பார்வையை செலுத்துவது அவசியம்.
அதிலும், டேட்டா பேஸ் எனப்படும் தகவல் சேமிப்பு மென்பொருட்கள் பற்றிய
அறிவு நிச்சயம் இருக்கவேண்டும். எப்படியெல்லாம் தகவல்களை சேமிக்கலாம், அதை
எந்தெந்த வகையில் எடுக்கலாம், எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம், என்னென்ன கேள்விகள்
மூலம் தகவல்களைப் பிரித்தெடுக்கலாம் என்பதையெல்லாம் கற்றுக் கொள்ள எஸ்.க்யூ.எல்
அடிப்படை அறிவு இருப்பது தேவையானது ! இங்கும் கவனிக்க வேண்டிய விஷயம், இதிலெல்லாம்
சூப்பர் டூப்பர் ஆட்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான். ஆனால்
நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
டொமைன் ஸ்கில்ஸ் எனப்படும் கள அறிவு தகவல் அறிவியல் துறையில்
முக்கியமானது. ஆனால் இதை துவக்கத்திலேயே படித்து விட முடியாது. நாம் எந்த துறையில்
தகவல் அறிவியல் பணி செய்யப் போகிறோமோ அந்தத் துறை சார்ந்த விஷயங்களைக் கற்றுக்
கொள்வது தான் சரியானது. உதாரணமாக மருத்துவத் துறையில் தான் தகவல் அறிவியல் வேலை
செய்யப் போகிறீர்கள் என்றால், "ஹெல்த்கேர்' டொமைன் பற்றி நன்றாகத் தெரிந்து
வைத்திருப்பது அவசியம்.
தகவல் அறிவியல் கொண்டு வருகின்ற முடிவுகளை அலசவும், எப்படிப்பட்ட
முடிவுகள் பயன்படும் என்பதை முடிவு செய்யவும் டொமைன் ஸ்கில்ஸ் தேவை. மருந்துகளின்
தேவைகள் பற்றிய புள்ளிவிவரத்தை அதைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் படித்தால்
புரியாது இல்லையா ? அது தான் அடிப்படை விஷயம்.
வங்கித் துறை சார்ந்த தகவல் அறிவியல் எனில் பேங்கிங் டொமைன் கற்றுக்
கொள்ள வேண்டும். காப்பீடு துறை சார்ந்த டேட்டா சயின்ஸ் பணியெனில் 'இன்சூரன்ஸ்
டொமைன்' கற்றுக் கொள்ள வேண்டும். வணிகம் சார்ந்த ஏரியா எனில் 'ரிடெயில் டொமைன்'
தெரிந்திருக்க வேண்டும். இப்படி தேவையான ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். டொமைன்
ஸ்கில்ஸ் எனப்படுவதை ஒரே நாளிலோ, ஒரு படிப்பின் மூலமாகவோ கற்றுக் கொள்ள முடியாது.
அடிப்படை அறிவைப் பெற்றுக் கொண்டு பின்னர் படிப்படியாக அதை வளப்படுத்திக்
கொள்ளலாம்.
தகவலை விஷுவலைஸ் செய்து பார்ப்பது, அதாவது கற்பனை செய்து பார்ப்பது
என்பது இந்த படிப்புக்கு தேவையானது. ஒரு துப்பறிவாளன் கையில் கிடைக்கும் ஒரு சின்ன
பொருள் ஒரு பெரிய குற்றத்தைத் துப்பு துலக்க உதவுவது போல, தகவல் அறிவியலாளனின்
கையில் கிடைக்கின்ற தகவல்கள் மிகப்பெரிய மாற்றத்துக்குரிய விடையைத் தர முடியும்.
அதற்கு, 'இந்த தகவலை வைத்து என்ன செய்யலாம்' என கற்பனை செய்து பார்க்கும்
விஷுவலைசிங் திறமை அவசியம்.
அடிப்படையாக ஒரு பட்டப்படிப்பு இருப்பது ரொம்ப நல்லது. கணிதம்,
அறிவியல், காமர்ஸ் போன்ற பட்டப்படிப்பு இருந்தால் சிறப்பு ! பட்டப்படிப்பு
இந்தத் துறையில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் ஊக்கத்தைத் தரும்.
ஒருவேளை வேறு நிறுவனங்களில், துறைகளில் வேலைபார்த்த அனுபவம் உடையவர்கள்
பட்டப்படிப்பு இல்லாமலும் இந்த துறையில் நுழையலாம்.
கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப்படும் உரையாடல் திறனும் இந்த துறைக்கு
ரொம்பவே கை கொடுக்கும். தகவல்கள் எப்போதும் நமக்கு எளிதில் கிடைத்து விடுவதில்லை.
அதற்கு நமது உரையாடல்கள் தேவைப்படும். அதே போல, நாம் உருவாக்குகின்ற பணிகளை மிகத்
திறமையாக அடுத்தவர்களுக்கு எடுத்துரைக்கவும் கம்யூனிகேஷன் திறமை மிக அவசியம்.
எல்லாவற்றுக்கும் மேலாக இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள்
உற்சாகமும், புதுமையை விரும்பும் மனமும். தகவல்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்,
எப்படியெல்லாம் அலசலாம், எப்படிப்பட்ட வகைகளில் வகைப்படுத்தலாம் என்பதெல்லாம்
புதுமையை விரும்புபவர்களால் மட்டுமே முடிவு செய்ய முடியும். நூல் கண்டு போல
சுற்றிப் பிணைந்து கிடக்கின்ற தகவல்களை சிக்கலில்லாமல் பிரித்தெடுக்க, தேவையற்ற
தகவல்களை வெட்டி எறிய உற்சாக மனம் ரொம்ப முக்கியம். அடிப்படையாக, பிசினஸை
எப்படியெல்லாம் வளப்படுத்தலாம், வலுப்படுத்தலாம் எனும் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்க
வேண்டும். இவையெல்லாம் தான் ஒருவரை தகவல் அறிவியலில் சிறப்புற வைக்கும்.
சுருக்கமாக கணிதத்தில் பரிச்சயமும் ஆர்வமும் இருக்கிறதா ? ஓரளவு
மென்பொருள் பரிச்சயம் இருக்கிறதா ? புதுமை செய்யும் ஆர்வம் இருக்கிறதா ?
தகவல்களோடு விளையாடும் பொறுமை இருக்கிறதா ? எனில் நீங்கள் தைரியமாக இதில்
காலெடுத்து வைக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக