மேகக்கூட்டங்களுக்கு நடுவே தோன்றும் மின்னலைப்போல அந்த உயர்ந்த கட்டிடத்தின் சுவரை வேகமாகத் தாண்டிக் குதித்தார் அந்த வானரத் தலைவர். ராவணனின் மாளிகை முழுதும் தேடியும் ஜனகரின் மகளான சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் ஹனுமானின் சிந்தனை இவ்வாறு ஓடியது:
"ராமபிரானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இலங்கை முழுவதும் தேடி விட்டேன். ஆயினும் என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏரிகள், குளங்கள், ஆறுகள், முகத்துவாரங்கள், கோட்டைகள், மலைகள் என்று ஒரு இடம் கூட விடாமல் தேடி விட்டேன். ஆயினும் சீதையைக் காணவில்லை. கழுகு அரசர் சம்பாதி சீதை ராவணனின் மாளிகையில்தான் இருக்கிறார் என்ற தகவலை அளித்தார். ஆனால் சீதையை இங்கே என்னால் காண முடியவில்லை.
"சீதை ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்லர். விதேஹ அரசர் ஜனகரால் மிதிலை என்னும் உயர் பண்பாட்டு நகரில் வளர்க்கப்பட்ட அவர் வேறு வழியில்லாமல் ராவணனின் விருப்பத்துக்கு இணங்கி இருப்பார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ராமபிரானின் அம்புகள் தன் மீது பாயுமோ என்ற அச்சத்துடன் சீதையைத் தூக்கிக்கொண்டு வானத்தில் ராவணன் பறந்தபோது ஒருவேளை சீதை அவன் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து இறந்திருப்பாரோ என்று ஐயமாக இருக்கிறது.
அல்லது கடலுக்கு மேல் சித்தர்கள் செல்லும் பாதையில் ராவணன் சீதையைத் துக்கிக்கொண்டு பறந்தபோது கீழே தெரிந்த கடலைப் பார்த்து அவருக்கு மூச்சு நின்றிருக்கலாம். அல்லது ராவணன் பறந்து சென்ற வேகத்தில் கூட சீதைக்கு மூச்சு நின்று போயிருக்கலாம். அல்லது ராவணனின் பிடியிலிருந்து விடுபட அவர் முயன்றபோது கடலில் விழுந்து கூட இறந்திருக்கலாம்.
"சீதை தனது கற்பு நெறியில் உறுதியாக இருந்ததால் ராவணன் ஆத்திரமடைந்து அவரைத் தின்றிருக்கலாம். அல்லது ராவணனின் மனைவிகள் கூட அவரைத் தின்றிருக்கலாம். அல்லது வேறு வழியில்லாமல், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட, முழுநிலவு போன்ற இராமபிரானின் திருமுகத்தை மனதில் தியானித்தபடியே சீதாப் பிராட்டி உயிர் நீத்திருக்கலாம்.
மிதிலை தேசத்து அரசரின் மகள் தனது விதியை நொந்தபடி, 'ராமா! லக்ஷ்மணா! அயோத்தி மாநகரே!" என்றெல்லாம் புலம்பிக்கொண்டே தன உயிரை விட்டிருக்கலாம். அல்லது ராவணனின் ஏதாவது ஒரு சிறையில் அவர் ஒரு கூண்டுப் பறவை போல் சிறை வைக்கப்பட்டிருக்கலாம். ராமபிரானை மணமுடித்தவரும், ஜனகரின் அரண்மனையில் வளர்ந்தவரும், அழகுக்கும் பண்புக்கும் பெயர் பெற்றவருமான சீதை எப்படி ராவணனுக்கு அடி பணிவார்?
"சீதையிடம் ராமபிரான் அளவற்ற அன்பு வைத்திருக்கும்போது அவரிடம் சீதை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றோ, துயரத்தினால் அவர் இறந்து விட்டார் என்றோ தெரிவிப்பது சரியாக இருக்காது. உண்மையைச் சொல்வதிலும் ஆபத்து இருக்கிறது, சொல்லாமல் இருப்பதிலும் ஆபத்து இருக்கிறது. இந்த நிலையில் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் எது சரியான வழி? எது நிலைமைக்குஏற்றதாக இருக்கும்? எது எல்லாருக்கும் பயனளிப்பதாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும்?" இது போன்று திரும்பத் திரும்பச் சிந்தித்து மனம் குழம்பினார் ஹனுமான்.
அவரது சிந்தனை தொடர்ந்து ஓடியது? "சீதையைக் கண்டு பிடிக்காமல் வானர அரசனிடம் நான் திரும்பச் சென்றால் அதனால் என்ன பயன் இருக்கும்? நான் கடலைத தாண்டி இ லங்கைக்குள் நுழைந்து அரக்கர்களைப பார்த்ததெல்லாம் வீணாகி விடாதா? இந்த நிலைமையில் நான் திரும்பிப் போனால் கிஷ்கிந்தாவில் உள்ள சுக்ரீவன், என் வானர நண்பர்கள், தசரத புத்திரர்கள் ஆகியோர் என்னிடம் என்ன சொல்வார்கள்?
நான் திரும்பிப் போய் காகுஸ்த குடும்பத்தில் பிறந்த ராமனிடம், 'என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை' என்று சொன்னால், இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அவர் உடனே உயிரை விட்டு விடலாம். சீதையைப் பற்றிய மனதைப் பிளக்கும் துயரச் செய்தியை நான் சொல்லக் கேட்டு அதிர்ச்சியினால் அவர் உடனே இறந்து விடலாம். தன் அண்னன் துயரத்தினால் இறந்து போவதைப் பார்த்து அவரது அன்புத் தம்பி லக்ஷ்மணனும் உயிரைத் துறந்து விடலாம். தனது இரண்டு சகோதரர்களும் இறந்த செய்தியைக் கேட்டு பரதனும் இறந்து விடுவார். அவரைத் தொடர்ந்து சத்ருக்னனும் இறந்து விடுவார். தங்கள் பிள்ளைகள் இறந்ததை அறிந்ததும் கௌசல்யா, கைகேயி, சுமித்திரை ஆகியோரும் உயிரை விட்டு விடுவார்கள்.
ராமரை இந்த நிலையில் பார்த்ததும், நன்றிக்கும், உண்மைக்கும் பெயர் பெற்ற சுக்ரீவனும் தன் உயிரை விட்டு விடுவார். தனது கணவன் இறந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் அவர் மனைவி ருமையும் இறந்து விடுவார். சுக்ரீவன் இறந்து போனால், ஏற்கெனவே வாலியின் மரணத்தினால் துயரடைந்து எலும்பாகத் தேய்ந்து போயிருக்கும் தாரை இந்த இன்னொரு துயரத்தையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் இறந்து விடுவார்.
தனது பெற்றோர் இறந்த துயரத்தைத் தாங்கிக்கொண்டு அங்கதனால் மட்டும் எப்படி உயிர் வாழ முடியும்? தங்கள் தலைவன் இறந்த துயரத்தைத் தாங்க முடியாமல் வானரர்களும் தங்கள் தலைகளை முஷ்டிகளால் அடித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வார்கள். புகழ் பெற்றவனும், பரந்த மனப்பான்மை உடையவனும், இனிமையாகப் பேசும் குணம் உடையவனுமான வானரத் தலைவன் சுக்ரீவன் இதுவரை வானரர்களைப பாதுகாத்து வந்திருப்பதால். அவர் இறந்த பிறகு உயிர் வாழ்வதை விட மடிந்து போவதையே வானரர்கள் விரும்புவார்கள்.
இந்த அற்புதமான வானரர்கள் இனிமேல் விளையாட்டுப் போட்டிகளுக்காக கிராமங்களில் கூட மாட்டார்கள். அவர்களின் இருப்பிடமான மலைகளுக்கோ, காடுகளுக்கோ போக மாட்டார்கள். தங்களுக்கென ஒரு குடும்பம் இருப்பவர்கள், தங்கள் தலைவனின் மரணத்தின் வழியைத் தாங்க முடியாமல் மலைகளிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி அடையாவிட்டால், அவர்கள் விஷம் குடித்தோ, பட்டினி கிடந்தோ, தீயில் குதித்தோ அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்தியோ தற்கொலை செய்து கொள்வார்கள்.
"இந்தத் தோல்வியோடு நான் திரும்பப் போனால் இக்ஷ்வாகு வம்சத்துக்கும், வானரர்களுக்கும் பெரும் துயரம் நேரிடும். அதனால், இந்தத் துயரங்களுக்குக் காரணமாக விளங்கப் போகிற நான் கிஷ்கிந்தாவுக்கே போகப்போவதில்லை. மிதிலா தேசத்து அரசரின் திருமகளைக் கண்டுபிடிக்காமல் சுக்ரீவனைச் சந்திப்பது எனக்கு இயலாத காரியம். நான் இங்கிருந்து போகாவிட்டால், இந்த இரு உத்தமமான வீரர்களும் என்னுடைய முயற்சி வெற்றி அடையும் என்று எதிர்பார்த்து உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வானரர்களும் இந்த எதிர்பார்ப்போடு உயிர் வாழ்வார்கள்.
"என்னால் ஜனகரின் மகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால், நான் காட்டுக்குள் இருந்துகொண்டு ஏதோ ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தபடி, என் ஐம்புலன்களையும் கட்டுப் படுத்திக்கொண்டு என் கையிலோ, வாயிலோ எந்த உணவுப் பொருள் வந்து விழுகிறதோ அதை உண்டு ஒரு துறவி போல் வாழ்வேன். அல்லது கடற்கரையில், மரங்கள் அடர்ந்திருக்கும் இடத்தில் தீயை மூட்டி அதில் குதித்து உயிரை விட்டு விடுவேன். அல்லது பட்டினி கிடந்து உயிர் விட்டு என் உடலைக் காக்கைகளுக்கும் மற்ற பறவைகளுக்கும் இரையாக்குவேன். இது போன்ற மரணம் உயர்ந்த முனிவர்களால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஜனகரின் மகளை என்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், நான் நீரில் மூழ்கி இறந்து போவேன். நல்ல சகுனங்களுடனும், சாதகமான நிகழ்வுகளுடனும் தொடங்கிய இந்த நீண்ட இரவு முடிவதற்குள் சீதையை நான் கண்டுபிடிக்காவிட்டால் இது எனக்கு ஒரு வீணான இரவாக முடிந்து விடும். புலன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு மரத்தடியில் அமர்ந்து நான் ஒரு துறவியாக ஆகப்போவதுதான் அதன் விளைவாக இருக்கும். அழகிய வடிவம் கொண்ட சீதையைக் கண்டுபிடிக்காமல் நான் இங்கிருந்து போகப்போவதில்லை. அவரைக் காணாமல் நான் திரும்பப் போனால் மற்ற வானரர்களுடன் சேர்ந்து அங்கதனும் மடிந்து போவான். இறந்து போவதில் பல இழப்புகளும் இருக்கலாம். ஆனால் உயிருடன் இருப்பவனால் பல விஷயங்களைச் சாதிக்க முடியும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது உயிருடன் இருப்பதே நல்லது."
இது போன்று பல விஷயங்களைச் சிந்தித்த பிறகும், ஹனுமானின் துயரம் குறையவில்லை. அவர் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார். "ராமபிரானின் பத்தினிக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற சிந்தனையை மறந்து விட்டு, பத்து தலைகள் கொண்ட ராவணன் என்ற அரக்கனை நான் கொல்லப் போகிறேன். அப்படிச் செய்தால்தான் பழி வாங்கிய திருப்தி எனக்கு ஏற்படும். அல்லது அவனைக் கடலுக்கு மேலே தூக்கிச் சென்று, நெருப்புக்கு மிருகத்தைப் பலி கொடுப்பது போல் ராமருக்கு அர்ப்பணிப்பேன்."
துயரத்தால் பீடிக்கப்பட்டும், கனவு நிலையில் ஆழ்ந்தும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார் ஹனுமான். "உயர்ந்த குணங்களுக்குப் பெயர் பெற்ற சீதையைக் கண்டுபிடிக்கும் வரையில் நான் இந்த இலங்கை முழுவதும் தேடிக்கொண்டே இருப்பேன். சம்பாதியின் வார்த்தைகளை நம்பி நான் ராமரை இங்கே அழைத்து வந்திருந்தால், சீதையைக் கண்டு பிடிக்க முடியாத கோபத்தில் அவர் எல்லா வானரர்களையும் கொன்றிருப்பார். என் புலன்களைக் கட்டுப்படுத்தி, சிறிதளவே உணவு உட்கொண்டு நான் இங்கேயே இருக்கப் போகிறேன். இப்படிச் செய்வதால் என்னால் அந்த மனிதர்களுக்கும், வானரர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
"அதோ அசோக மரங்கள் நிறைந்த ஒரு பெறிய தோட்டம் தெரிகிறது.நான் இன்னும் அங்கே சென்று பார்க்கவில்லை. இப்போதே அந்த அசோக வனத்துக்குள் நுழைகிறேன்."
இவ்வாறு சொல்லிக்கொண்டே ஹனுமான் எட்டு வசுக்களையும், பதினோரு ருத்ரர்களையும், ஆதித்யர்களையும், அஸ்வினி தேவர்களையும், ஏழு மருத்களையும் வணங்கி விட்டு "இந்த அரக்கர்களுக்கு நான் பெரும் நாசத்தை விளைவிப்பேன்" என்று உறுதி எடுத்துக் கொண்டார்.
"இந்த அரக்கர்களை அழித்து, சீதையை எடுத்துச் சென்று இக்ஷ்வாகு வம்சத்து வழித் தோன்றலான ராமனிடம், தவத்தின் பயனை அளிப்பது போல் சீதையை அளிப்பேன்."
இவ்வறு நினைத்துச் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்ட பின் சக்தி வாய்ந்த ஹனுமான் வருத்தம் என்ற தளையிலிருந்து விடுபட்டு, தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தார்.
"ராம லட்சுமணர்களுக்கு வணக்கம். ஜனகரின் மகளான சீதைக்கும் வணக்கம். ருத்ரன், இந்திரன், யமன், வாயு, சந்திரன், சூரியன், மருத்கணங்கள் ஆகியோருக்கும் வணக்கம்" என்று எல்லாரையும் மனத்துக்குள் வணங்கி விட்டு, சுக்ரீவனையும் வணங்கி விட்டு, அசோக வனத்துக்குச் செல்லும் எல்லாப் பாதைகளையும் உற்று நோக்கினார்.
தனது நோக்கம் நிறைவேறுவதற்கு அசோகவனம்தான் வழி காட்டப் போகிறது என்று கருதி தாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார். "மரங்கள் அடர்ந்ததும், அரக்கர்களால் நிறைந்திருப்பதும் கலை உணர்வுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதுமான அசோக வனத்துக்கு உடனே சென்று சீதையைத் தேடப் போகிறேன்.
"மரங்களுக்குப் பக்கத்தில் காவலர்கள் நிற்கிறார்கள். காற்றும் மெதுவாகத்தான் வீசுகிறது. ராவணன் மற்றும் அவன் வீரர்களின் கண்களுக்குப் புலப்படாமல் என் உடலைச் சுருக்கிக் கொள்வேன். ராமரின் நோக்கம் நிறைவேறும் பொருட்டு முனிவர்களும் தேவர்களும் என் முயற்சி வெற்றி பெற என்னை வாழ்த்தட்டும்.
"தானே தோன்றிய பிரமன், மற்ற தேவர்கள், அக்னி, வாயு, வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் ஆகியோர் என் முயற்சி வெற்றி அடைய வாழ்த்தட்டும். பாசக்கயிற்றை ஆயுதமாகக் கொண்ட வருணன், சூரியன், சந்திரன், அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள், கணங்களுக்குத் தலைவரான பரமேஸ்வரன், மற்ற தேவதைகள், நான் செல்லும் வழியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் ஆகியோர் என் முயற்சிகளுக்கு முழு வெற்றி அளிக்கட்டும்.
"நீண்ட நாசியும், வெண்மையான பற்களும், மயக்கும் புன்சிரிப்பும், தாமரை இதழ் போன்ற கபடமற்ற கண்களும் கொண்ட சீதையின் முழுநிலவு போன்ற முகத்தை நான் எப்போது பார்க்கப் போகிறேன்? நல்லவன் போல் வேஷமிட்டு வந்த கொடூர குணம் படைத்த அரக்கனான ராவணனால் கடத்தப்பட்டு, எந்த உதவியும் இல்லாமல் இருக்கும் சீதை என் கண்களுக்கு எந்தத் தோற்றத்தில் காட்சி அளிக்கப் போகிறாரோ!"
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக