ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்
(வெற்றியின் ரகசியங்கள்)
ஆங்கிலத்தில் எழுதியவர் , மால்கம் கிளேட்வெல்
அற்புதமான தமிழில் மொழிபெயர்த்து எழுதியவர் சித்தார்த்தன் சுந்தரம்.
விகடன் வெளியீடு.
கடந்த ஆறேழு மாதங்களாக வார இதழ்கள் வாசிப்பை முழுமையாகவே நிறுத்தி விட்டேன். வேறு வழியே இல்லாமல் திருப்பூருக்குள் நடக்கும் உள்ளுர் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தினசரி பத்திரிக்கைகள் வாசித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். மற்றபடி செய்திகளை அறிந்து கொள்ள அவ்வப்போது இணையத்தின் மூலம் தெரிந்து கொள்கிறேன்.
தமிழில் அக்கிரமம் என்று ஒரு வார்த்தை உண்டு. அதற்கு இப்போது எனக்குத் தெரிந்து முதன்மையான இடத்தில் இருப்பது ஊடகத்துறை.
தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைத் துறை என்று பாரபட்சமில்லாமல் இரண்டும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றது. ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் பலவிதமான எதிர்மறையான தாக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. வாட்ஸ்அப் என்பது நம்பகத்தன்மை இல்லாத புரளிகளை அடிப்படையாக் கொண்டு அலைபேசி என்ற சின்னதிரை வழியாக உங்களை வந்து அடைவது.
அதுவே பெரிய திரை என்றால் தற்போதைய தொலைக்காட்சி.
ஒரு மணி நேரம் முழுமையாக ஒரு தொலைக்காட்சியை நீங்கள் பார்க்க நேரிட்டால் உங்களுக்கு இல்லாத நோய்கள் உங்களுக்குள் வந்து விட்டது போலப் பிரமை உருவாகும். கட்சி, மதம், சாதி என்ற ஆதரவில் தங்கள் லாபவேட்டைக்கு மனிதர்களை விலங்குகள் போலவே மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
முழுமையாகப் புறக்கணிக்க முடியாது என்றாலும் நாம் இவற்றைப் புறக்கணித்தால் நம் வாழ்க்கை ஒன்று மாறிப்போய் விடாது என்பதனை சமீப கால அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்.
தற்போதைய ஊடகங்கள் அவரவர் வாழ்க்கையில் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைகளைச் சீர்குலைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பது முற்றிலும் உண்மை.
பொதுவாகப் போட்டிகள் அதிகமாகும் போது தனிப்பட்ட மனிதர்களும், நிறுவனங்களும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளத் தங்கள் திறமையை அதிகபட்சமாக வெளிக்காட்டி தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள் என்பதே உலக நியதி. ஆனால் குறுக்குவழிகளில் செல்வது என்பது மற்றொரு வழி. இரண்டாவது வழியைத்தான் பெரும்பாலான தற்போதைய பத்திரிக்கைகள் (ஊடகத்துறை) கடைபிடிக்கின்றன. போட்டிகள் அதிகமானதால் எது செய்தி? எது செய்தியில்லை என்ற பாரபட்சமின்றிக் கலந்து கட்டிக் கொடுக்கின்றார்கள்.
மனசாட்சி என்பதே இல்லாமல் துணுக்குச் செய்திகளை, பத்துப் பைசாவிற்கு மதிக்க முடியாத நிகழ்வுகளை , சுயநல அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியுடன் பயமுறுத்தும் இசையுடன் உங்கள் வீட்டுக்குள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. பத்திரிக்கை உலகத்திற்கென்று லாபம் என்பதற்கு அப்பாற்பட்டு சில தனியான கொள்கைகள் இருந்தன. ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கும் சில குறிப்பிட்ட நபர்களின் வழிகாட்டலின்படி நடந்தது. ஆனால் தற்போது எவ்வித முன் அனுபவமின்றிக் கத்துக்குட்டிகளை வைத்து, ஒப்பந்த அடிப்படையில் லாபம் என்பதனை மட்டுமே குறியாகச் செயல்படும் பத்திரிக்கை உலகத்தை இனி நாம் பேசத் தேவையில்லை.
புறக்கணிப்பது தான் சிறந்த வழி என்ற நோக்கத்தில் புத்தக வாசிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன்.
பொருட்களின் தரத்தை விட அந்தப் பொருளுக்குச் செய்யப்படும் விளம்பரமே முக்கியம் என்ற நிலையில் சமூகத்தை ஊடகத்துறை மாற்றியுள்ளனர். இதன் மூலம் மட்டுமே மக்களின் மனதை மாற்ற முடியும் என்ற அதீத நம்பிக்கையில் இப்போது ஒவ்வொரு துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு துறையிலும் தெளிவான, அழகான, நாகரிகமான பொய்களுடன் ரசிக்கக்கூடிய அளவில் விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. தங்கள் பொருட்களுக்கு விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையைத் தங்கள் பொருட்களின் மேல் காட்டுவதில்லை என்பது தான் எதார்த்த உண்மை. மக்கள் இதனைத்தான் விரும்புகின்றார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு.
தரம் குறைந்த பொருட்களை விலை அதிகமாகக் கொடுத்து வாங்கும் புதிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. நாம் தான் சுயபுத்தியுடன் செயல்பட வேண்டும்.
வயதாகும் போது எல்லாவற்றையும் குறையாகவே பார்ப்பது என்ற நோக்கத்தையும் கடந்து பலவற்றையும் யோசிக்க வைத்த புத்தகங்களை வாசிக்கத் துவங்கி உள்ளேன். இனி வாசிப்புப் பழக்கம் இல்லாமல் போய்விடுமோ என்ற சூழலில் தான் ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம் என்ற புத்தகம் எனக்கு அறிமுகமானது.
பள்ளிப்பருவம் முதல் நேற்று வரை நாம் எத்தனையோ புத்தகங்கள் படித்து வந்திருப்போம். சில புத்தகங்கள் மட்டும் தான் ஆச்சரியத்தையும் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத அளவிற்குத் தாக்கத்தை உருவாக்கி நமக்குப் புதிய பாதையை அடையாளம் காட்டும். நான் சமீபத்தில் வாசித்த இந்தப் புத்தகத்தை வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள்.
இந்தப் புத்தகத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஒரு தொழிலில் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவன் என்ற முறையில் நான் இதுவரையிலும் நான் இருக்கும் துறையில் பெற்ற அனுபவங்கள் மூலம் எவையெல்லாம் சாதகம்? எவையெல்லாம் பாதகம் என்று என் மனதில் பட்டியலிட்டு வைத்திருந்தேனோ அதனை இந்தப் புத்தகத்தில் படம் வரைந்து மிக அழகாகப் பாகம் குறித்துப் புரிய வைத்துள்ளார்கள்.
இங்கு வெற்றி பெற்றவர்கள் சிறிய விசயத்தைச் செய்தாலும், பேசினாலும் அது பெரிதாகப் பேசப்படும் பார்க்கப்படும். அதுவே பொருளாதார ரீதியாக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர்கள் பேசக்கூடிய எந்தக் கருத்துக்கும் முக்கியத்துவம் கிடைப்பது அரிது.
இங்கே வெற்றியாளர்கள் எவரும் தங்களுடைய வெற்றிக்கான கதையை முழுமையாகச் சொல்லிவிட மாட்டார்கள். காரணம் அதற்குள் இருக்கும் அசிங்கங்களை வெற்றி பெற்றதும் நாம் வாழும் சமூகம் சிங்கமாக மாற்றிவிடும்.
இந்தப் புத்தகத்தில் உலகப் பணக்காரர்கள் பலரையும் பற்றிப் பேசியுள்ளார்கள்.
பில்கேட்ஸ் தொடங்கிப் பல்வேறு உலக அளவில் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற பலரின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து இருக்கின்றார் நூலாசிரியர். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வளரும் போது அவர்களுக்குக் கிடைத்த தனிப்பட்ட வாய்ப்பு, அவர்கள் பயன்படுத்திய விதம், அவர்களுக்கு மட்டுமே அமைந்த சூழல் என்று தொடங்கி நாம் இதுவரையிலும் யோசித்துப் பார்க்க முடியாத அனைத்துக் கோணங்களிலும் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசியுள்ளார்.
வெற்றி என்பது வெறும் உழைப்பினால், திறமையினால் மட்டும் வருவதில்லை. புறக்காரணிகள் பலவுண்டு. அதனை எவரும் எந்த இடத்திலும் சொல்வதில்லை. அதனைப் பற்றித்தான் இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளனர்.
நீங்கள் வென்றவர்கள் என்ற முறையில் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். வெல்வதற்கான காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர் என்றால் காரணக் காரியங்களைக் கோர்த்துப் பார்க்க முடியும். எந்த வகையில் பார்த்தாலும் உங்கள் மனம் சார்ந்த செயல்பாடுகளில் இந்தப் புத்தகம் முக்கியமான தாக்கத்தை உடனே உருவாக்கும் வல்லமை கொண்டது.
நிச்சயம் தமிழில் மிக அழகாக நேர்த்தியாக எழுதிய நண்பர் சித்தார்த்தன் சுந்தரம் பாராட்டுக்குரியவர். அவர் எழுதிய எழுத்தைப் போலவே அவரும் உரையாடும் போது நமக்கு நம்பிக்கையூட்டக்கூடியவராக இருக்கின்றார்.
இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் என் மனம் சார்ந்த செயல்பாடுகளில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அது குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் எழுதி வைக்க விரும்புகின்றேன்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக