Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 மார்ச், 2019

பதினேழாவது சர்க்கம் - அரக்கிகளின் தோற்றம்

Image result for அரக்கிகளின் தோற்றம்



அப்போது, ஏரியின் நீல நிறத் தண்ணீரில் ஒரு அன்னம் தோன்றுவது போல்,  தாமரை நிறம் கொண்ட, இயற்கையிலேயே தூய்மையான சந்திரன்,  தெளிந்த வானத்தில் எழுந்தது. வாயுபுத்திரருக்கு உதவி செய்வது போல், தன்  குளிர்ந்த ஒளிமிகுந்த கிரணங்களை வீசியது.

அதிக எடை ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று அதைக் கரையேற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தபின் கைவிடப்பட்டது போன்ற தோற்றத்துடன், துயரினால் அழுத்தப்பட்டு விரக்தியான மன நிலையில் அமர்ந்திருந்த சீதையின் முகத்தை அந்த ஒளியில் ஹனுமானால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

அப்போது சீதைக்கு அருகில் அமர்ந்திருந்த பல்வகையான கொடூரத் தோற்றங்களுடன் காட்சியளித்த அரக்கிகளை ஹனுமான் பார்த்தார்.

சிலர்  ஒரு கண்ணுடனும், சிலர் ஒரு காதுடனும், சிலர் கொம்பு போன்ற காதுடனும், சிலர் காதே இல்லாமலும், சிலர் பாதிக் காதுடனும் இருந்தனர்.

சிலரது மூக்குத் துவாரம் அவர்கள் தலையில் இருந்தது. சிலருக்கு மிகப்பெரிய தலையும், உருவமும் இருந்தன. சிலர் மெலிந்த உடலுடனும், உயரமாகவும், கழுத்து மெலிந்தும் காணப்பட்டனர்.

சிலர் உடலில் அடர்த்தியான ரோமம் இருந்தது. சிலர் உடலில் ரோமமே இல்லை. சிலர் உடலில் கம்பளி போன்ற ரோமம் இருந்தது,

சிலரது நெற்றிகளும், காதுகளும் சாய்ந்திருந்தன. சிலரது வயிறுகளும், மார்பகங்களும், சாய்ந்திருந்தன. சிலரது உதடுகள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. சிலரது முகங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.  சிலரது முழங்கால் முட்டிகள் தொங்கியபடி காணப்பட்டன.

சிலர் குள்ளமாகவும், பருமனாகவும் இருந்தனர். சிலரது முதுகில் கூன் விழுந்திருந்தது. சிலர் உடல் பருத்தும், சிலர் உடல் சிறுத்தும் காணப்பட்டனர். சிலரது அவயவங்கள் உடைந்திருந்தன. சிலரது கண்கள் மஞ்சளாக இருந்தன. சிலரது முகங்கள் விகாரமாக இருந்தன. சிலரது தோற்றம் அச்சமூட்டுவதாக இருந்தது.

வேறு பல விகாரமான தோற்றங்களையும் அவர் கண்டார். சிலர் மஞ்சள் நிறம் கொண்டவர்களாகவும், சிலர் கருப்பு நிறம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

சிலர் கோபம் கொண்டவர்களாகவும், சிலர் சண்டை போடும் இயல்புடையவர்களாகவும் காணப்பட்டனர். சிலர் கையில் சூலம் வைத்திருந்தனர். சிலர் கையில் சுத்தியல்களையும், சிலர் கட்டைகளையும் வைத்திருந்தனர்.

பன்றி, மான், புலி, எருமை, ஆடு, நரி போன்ற பலவகை மிருகங்களின் முகத்தோற்றங்களைக் கொண்டவர்கள் அங்கே இருந்தனர். யானை, ஒட்டகம், குதிரை போன்ற மிருகங்களின் கால்களைப் போன்ற கால்களைக் கொண்டவர்கள் அங்கே இருந்தனர்.

சிலரது உடலுக்கு மேல் கழுத்தே இல்லாமல் தோள்களுக்கு மேல் தலை அமர்ந்திருந்த தோற்றத்துடன் இருந்தனர். சிலருக்கு ஒரு கை  மட்டும் இருந்தது, சிலருக்கு ஒரு கால் மட்டும் இருந்தது.  சிலரது காதுகள் கழுதை, நாய், பசு, யானை, சிங்கம் போன்ற மிருகங்களின் காதுகளை  ஒத்திருந்தன.

சிலர் மூக்கே இல்லாமலும், சிலர் நீண்ட மூக்குடனும், சிலர் குறுக்கு வாட்டில் அமைந்த மூக்குடனும் இருந்தனர்.  யானையின் தும்பிக்கை போன்று மூக்கு அமைந்தவர்கள் சிலரும், நெற்றியில் மூக்கு அமைந்த சிலரும் அங்கே இருந்தனர்.

யானையின் பாதம் போன்றும், பசுவின் குளம்பு போன்றும் பாதங்கள் அமைந்தவர்களும் இருந்தனர். சிலருக்குக்  கால்களில் நீளமாக முடி வளர்ந்திருந்தது.

சிலர் பெரிய கழுத்துடனும், பெரிய தலையுடனும் இருந்தனர். சிலரது மார்புகளும், வயிறுகளும் பெருத்திருந்தன. சிலரது கண்களும், வாயும் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. சிலருக்கு நீண்ட நாக்கும், நீண்ட நகங்களும் இருந்தன.

ஆடு, யானை, பசு, காட்டுப்பன்றி, குதிரை, ஒட்டகம், கழுதை போன்ற முகம் கொண்டவர்களும் அங்கே இருந்தனர். சிலரது கைகளில் சூலம், கம்பு போன்ற  ஆயுதங்கள் இருந்தன.

சிலர் எளிதில் கோபப்படுவார்கள், சிலர் சண்டை போடும் இயல்புடையவர்கள். சிலருக்கு ரம்பம் போன்ற  பற்கள் இருந்தன. சிலருக்குச் செப்பு நிறத்தில் நீண்ட முடி இருந்தது.

சிலர் மாமிசம் உண்பதிலும், மது அருந்துவதிலும் ஆர்வம் மிகுந்தவர்கள். சிலரது உடல்களில் ரத்தமும், சதைத் துணுக்குகளும் பதிந்திருந்தன, சிலர் மாமிசமும் மதுவும் மட்டுமே அருந்துபவர்கள்.

சிலரது தோற்றம் பார்ப்பவர்களை மயிர்க்கூச்செரியச் செய்யும் அளவுக்கு பயங்கரமாக இருந்தது. சிலருக்கு தந்தம் போல் நீளமான பற்கள் இருந்தன.

அந்த மரத்தைச் சுற்றிலும் இருந்த அரக்கிகள் இது போன்று பல்வகைத் தோற்றங்களுடன் இருந்ததை ஹனுமான் பார்த்தார்.

அந்த அசோக வனத்தின்  நடுவில் சீதை அமர்ந்திருந்ததை ஹனுமான்  பார்த்தார். குற்றமற்ற அந்த ஜானகி ஒளி இழந்து துயரின் அழுத்தத்தினால் துவண்டு போயிருந்தார்.

வாரப்படாமல் புழுதி படர்ந்த தலையுடன் இருந்த அவர் தோற்றம், தன் புண்ணிய காலம் முடிந்த ஒரு நட்சத்திரம்  பூமியில் விழுந்தது போல் இருந்தது.

பதிவிரதையான அவர் இப்போது தன கணவரைச் சந்திக்க வழியில்லாதவராக, பெரும் துயரில் ஆழ்ந்திருந்தார். விலையுயர்ந்த ஆபரணங்கள் ஏதும் அணிந்திராத அவருக்கு, பதிபக்தி ஒன்றே ஆபரணமாக அமைந்திருந்தது. உறவினர்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து, இப்போது அவர் அரக்கர் தலைவனான ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்தார்.

தன கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஒரு சிங்கத்தின் பிடியில் சிக்கிக்கொண்ட யானைக்குட்டியின் நிலை போன்றிருந்தது அவர் நிலை. மழைக்காலம் முடிந்து இலையுதிர் காலம் துவங்கும் சமயம், மேகங்களுக்கு இடையே மங்கலாகத் தோன்றும் இளம்பிறை போல்  காணப்பட்டார் அவர்.

நீராடாததால் அவர் சருமம் மங்கலாகி இருந்தது. தந்திகள் அறுக்கப்பட்ட வீணை போன்று தோற்றமளித்தார் அவர். முன்பு தன்  கணவருடன் இணைந்திருந்த அவர், இப்போது அரக்கிகளுடன் இருக்கும் நிலையைத் தாங்க முடியாமல்  துயரக்கடலில் ஆழ்ந்திருந்தார்.

பூத்துக்குலுங்கும்  கொடி போன்ற தோற்றமுடைய அவர், அரக்கர்களால் சூழப்பட்டிருந்த நிலையில், தீமை விளைவிக்கும் கிரகங்களினால் சூழப்பட்ட ரோகிணி நட்சத்திரம் போல் இருந்தார்.

அலங்காரம் ஏதும் இல்லாமலே இயல்பாகவே அழகான தோற்றமுடைய அவர்   சேறு படிந்த தாமரை மலர் அழகாக இருந்தாலும் பிரகாசமாக இல்லாதது போல் தோன்றினார்.

அவர்  கசங்கிய, அழுக்கடைந்த ஒற்றை ஆடை அணிந்திருந்தார். அவரது மான் விழிகள் மங்கலாக இருந்தாலும் ஒளியை  இழக்கவில்லை. தன் கணவரின் ஆற்றலைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்த அவருக்கு கற்பு மட்டும்தான்  காவலாக இருந்தது.

சீதையைக் கண்டதில் தன் முயற்சிகள் பலன் அடைந்து விட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார் வாயுபுத்திரர். மிரண்டு போன மானைப்போல்  இங்கும் இங்கும் தன பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த சீதையின்  மூச்சுக்காற்றின் உஷ்ணம் அந்த வனத்திலிருந்த எல்லா மரங்களின் இலைகளையும் வாடி விடச் செய்யும் அளவுக்குக் கடுமையாக இருந்தது.

ஆபரணங்கள் ஏதும் அணியாத நிலையிலும் அழகாகவும், அங்கங்கள் அனைத்தும் அவர் உடல் அளவுக்கு ஏற்ற விதத்தில் அளவாக அமைந்தும் இருந்த அவர் எல்லாவிதமான துயரங்களும் மொத்தமாக ஒரு வடிவம் எடுத்தது போல் தோற்றமளித்தார்.

சீதையைக்கண்டதில் ஆனந்தக் கண்ணீர் வடித்த ஹனுமான் தன் மனதுக்குள் ராமரை வணங்கினார். சீதையைக் கண்டதால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்த அந்த வீரர் தன் மனதில் ராமரையும் லக்ஷ்மணரையும் வணங்கியபடி அந்த மரத்தின் மீது மறைத்தபடி அமர்ந்திருந்தார். 

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக