Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 மார்ச், 2019

பதினான்காவது சர்க்கம் - அசோக வனத்தில் தேடுதல் வேட்டை

Image result for அசோக வனத்தில் தேடுதல் வேட்டை

வல்லமை படைத்த ஹனுமான் இது போன்ற சிந்தனைகளுக்குப் பிறகு, சீதையை மனதில் தியானித்து விட்டு, ராவணனின் அரண்மனையின் முன்புறச் சுவர் மீது தாவிக் குதித்தார்.

அந்தச் சுவற்றின் மீது நின்றபடி அவர் பூத்துக் குலுங்கிய, பழங்கள் நிறைந்த சாலா, சம்பகா, அசோகா, உத்தாலகா, நாகா, மா போன்ற மரங்களைப் பார்த்து உடல் சிலிர்த்தார்.   பல்வகைக் கொடிகளால் சூழப்பட்ட அந்த மரங்களை நோக்கி அவர் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல் பாய்ந்தார்.

அந்தத் தோட்டத்தில் உதய சூரியனின் நிறம் கொண்ட மரங்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்று ஒளிர்ந்தன.அவற்றின் கிளைகளில்  பல்வேறு பறவைகள் அமர்ந்து குரல் கொடுத்தக் கொண்டிருந்தன. மான்கள் கூட்டமாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன. ஆங்காங்கே அழகாக வடிவமைக்கப்பட்ட சிறிய தோட்டங்கள்  காணப்பட்டன.

மரங்கள்  பூக்களாலும் பழங்களாலும் நிறைந்திருந்தன. குதூகலம் நிறைந்த குயில்கள், தேனீக்கள், போதை கொண்ட மயில்கள் மற்றும் பல்வேறு பறவைகள் அங்கே நிறைந்து காணப்பட்டன.

இத்தகைய சூழலில்தான் ஹனுமான் அங்கே நுழைந்தார். எழில்மிகு சீதையைத் தேடி அவர் அந்த அசோக வனத்துக்குள் நுழைந்தபோது உறங்கிக்கொண்டிருந்த பல பறவைகள் விழித்துக்கொண்டன. மரங்களுக்கு மேலே பறந்த பறவைகளின் இறகுகளிலிருந்து வந்த தென்றல் காற்றில்  அசைந்த மரங்கள், பல வண்ணங்கள் கொண்ட பூக்களை  உதிர்த்தன.

மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள் ஹனுமானின் உடல் முழுவதும் விழுந்திருந்ததால் அவர் ஒரு மலர் மலை போல் காணப்பட்டார். இந்தக் கோலத்தில் அவர் மரங்களுக்கு இடையே உலவுவதைப் பார்த்த மிருகங்கள் வசந்த காலமே ஒரு உருவம் எடுத்து வந்து விட்டதோ என்று நினைத்தன.

மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்களால் நிறைந்திருந்த பூமி பல்வகை ஆபரணங்களை அணிந்த ஒரு பெண்ணைப்போல் தோற்றமளித்தது.

ஹனுமானின் வலுவான கைகளினால் அசைக்கப்பட்ட மரங்கள் மேலும் மலர்களை உதிர்த்தன. இலைகளும், சிறு கிளைகளும் உதிர்ந்து விட்டதால் பூக்களும் பழங்களும் இல்லாமல் காணப்பட்ட மரங்கள், தனது ஆபரணங்களையும், நகைகளையும் கூடப் பணயம் வைத்துத் தோற்று விட்ட சூதாடியைப்போல் தோற்றம் அளித்தன.

புயலால் வீழ்த்தப்பட்டது போல் அழிக்கப்பட்டிருந்த மரங்களை விட்டுப் பறவைகள் வெளியேறின.  மரங்களின் அடிப்பாகம் மட்டும்தான் மிஞ்சி இருந்ததால் பறவைகளால் அங்கே வசிக்க முடியவில்லை.

ஹனுமானின் வாலினாலும், கைகளினாலும், கால்களினாலும் அடித்துத்  தூக்கி  எறியப்பட்டதால் அடிப்பாகம் கன்றிப்போய், கிளைகள் முறிக்கப்பட்ட மரங்கள், காமக்களியாட்டங்களினால் சோர்வடைந்து தலை கலைந்து,  பூசிய சந்தனம் களையப்பட்டு, உதடுகள் வெளிறி, உடல் முழுவதும் நகங்கள் மற்றும்  பற்களின் அடையாளங்கள் பதிந்த பெண்ணைப்போல் காட்சி அளித்தன.

மழைக்காலத்தில் விந்திய மலை மீது படிந்திருக்கும் மேகங்களைக் காற்று அலைக்கழித்து போல் தன்னைச் சுற்றிக்கொண்ட பெரிய கொடிகளை ஹனுமான் அறுத்துக் கீழே தள்ளினார்.

தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட பல கட்டடங்கல் சுற்றிலும் நிறைந்திருந்தந்தை அவர் பார்த்தார். நீர் நிறைந்த பல குளங்களின் படிக்கட்டுகளில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

அந்தக் குளங்களின் அடியில் முத்துக்களும், பவழங்களும் நிறைந்து காணப்பட்டன. குளங்களுக்கு நடுவே படிகக் கற்களால் ஆன மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. குளங்களின் நீர்ப்பரப்பு முழுவதும்  முழுவதும் சிவப்பு மற்றும் பச்சைத் தாமரைகள் நிறைந்திருந்தன.

சக்கரவாகம், அன்னம், கொக்கு போன்ற பறவைகள் அங்கே குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. வெந்நீர் ஊற்றுக்களிலிருந்து தெளிவான நீர்  கொண்ட நீரோட்டங்கள் அந்தக் குளங்களுக்குள் பாய்ந்து கொண்டிருந்தன.

குளங்களுக்கு அருகே பல தோட்டங்கள் இருந்தன. தோட்டங்களை சுற்றிக்  கரவீரச்செடிகள் வேலியாக அமைந்திருந்தன.

அங்கே மேகம் போல் காட்சியளித்த, ஒரு அழகான  உயர்ந்த சிகரத்தைக்கொண்ட ஒரு மலையை ஹனுமான் பார்த்தார்.

காவலர்களால் பாதுகாக்கப்பட்ட அந்த மலையில் இருந்த வீடுகள் கிரானைட் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அந்த மலையைச் சுற்றிலும் பல்வகை மரங்களுள் அழகிய கொடிகளும் இருந்தன.

அந்த மலையிலிருந்து ஒரு ஆறு கீழே இறங்கி வந்த காட்சி ஒரு பெண் தன் காதலனின் மாடியிலிருந்து இறங்கி வருவது போல் இருந்தது. அந்த மலையில் இருந்த மரங்கள் ஆற்று நீரில் சாய்ந்தபடி நீரைத் தடுத்து நீரோட்டத்தை எதிர்த்திசையில் செலுத்திக் கொண்டிருந்தன. அந்தக் காட்சி தன காதலனுடன் ஊடல் கொண்டு விலகிச் சென்ற பெண், தோழிகளால் சமாதானப் படுத்தப்பட்டு மீண்டும் காதலனிடம் திரும்பி வருவது போல் இருந்தது.

அந்த நதிக்குப் பக்கத்தில் பறவைகள் நிறைந்திருந்த தாமரைக் குளங்கள் இருந்தன. கைகளினால் வெட்டப்பட்ட குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு ஏரியும் இருந்தது.

அதன் படிகள் விலையுயர்ந்த கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்பகுதியில் முத்துக்களும், பவழங்களும் நிறைந்திருந்தன. அந்த ஏரியைச் சுற்றிலும் அழகிய மான்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. பல அழகிய பூந்தோட்டங்களும் அங்கே இருந்தன. அதன் நுழைவாயில் விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டிருந்தது.

தோட்டத்திலிருந்த மரங்களில் பூக்களும், பழங்களும் நிறைந்திருந்தன. அந்தத் தோட்டத்தில் பல அலங்காரப் பதாகைகள் இருந்தன. தங்கப்படிகள் கொண்ட பல மேடைகள் இருந்தன.

அங்கே ஒரு தங்க நிற சிம்ஸுபா மரத்தை ஹனுமான் பார்த்தார். அதைச் சுற்றிலும் கிளைகளும், இலைகளும் நிறைந்த கொடிகள் இருந்தன. அதைச் சுற்றிலும் தங்க மேடைகள் இருந்தன.அங்கே பல நீரூற்றுகள் இருந்தன. அருகே தங்க நிற மரங்கள் நிறைந்த சமவெளிகளும் இருந்தன. மேரு மலை போன்ற தோற்றம் கொண்ட அந்த மரங்களின் ஒளி ஹனுமான் மேல் பட்டு அவரும் தங்க நிறம் கொண்டவராகத் திகழ்ந்தார்.

தங்க நிறக் கிளைகளும், காற்றில் அசைந்து மணி போல் ஒலித்த இலைகளையும் கொண்ட அந்த சிம்ஸுபா மரத்தைப் பார்த்து ஹனுமான் வியந்தார்.

இலைகள் அடர்ந்த, பூக்களும், மொட்டுக்களும் மிகுந்த அந்த சிம்ஸுபா மரத்தின் உச்சியில் தாவி ஏறினார் ஹனுமான்.

"ஒருவேளை, சோகமே உருவானவராகவும், ராமபிரானை மீண்டும் எப்போது சிந்திப்போம்  என்ற சிந்தனையோடும் இருக்கும்  விதேஹ அரசரின் மகளை (சீதையை) நான் இங்கே காணலாம். தீயவனான ராவணனின் இந்த அசோகவனம் சந்தன மரங்களாலும், சம்பக மரங்களாலும் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது.அங்கே இருக்கும் தாமரைக்குளம் அழகாகவும் பறவைகள் நிறைந்தும் காணப்படுகிறது.

"அரசகுலத்தில் பிறந்தவரான சீதை இந்தக் குளத்துக்கு  வரக்கூடும். அவர் ஒரு அரசியாக இருந்தாலும், காட்டில் வசிக்கும் அனுபவம் பெற்றிருக்கிறார். ஜனகரின் மகளும், ராமபிரானின் மனைவியும், குற்றமற்றவருமான சீதை நிச்சயம் இங்கே வருவார்.

"மானின் கண்களைப் போன்ற கண்களைப் பெற்றவரும், ராமரையே நினைத்து நினைத்து உடல் மெலிந்தவரும், காட்டு வாழ்க்கையின் கடுமைக்குப் பழகியவருமான அந்த தேவி இங்கே வர வாய்ப்பு உள்ளது. காட்டு வாழ்க்க்கையினால் ஈர்க்கப்பட்டிருக்கக் கூடிய அந்த அழகிய சீதை, ராமரைப் பிரிந்ததால் தளர்ந்து போனவராக, இங்கே தினமும் வரக்கூடும்.

ராமருக்குப் பிரியமானவரும், குற்றமற்றவரும், இளவயதினருமான ஜானகிக்குக் காட்டில் வாழும் உயிர்களிடம்  அன்பு ஏற்பட்டிருக்கும். தன்  மாலைக்கடன்களைச் செய்வதற்காக அவர் சூரியன் மறையும் தருவாயில் தூய நீர் நிறைந்த இந்த நீர்நிலைக்கு வரக்கூடும். இந்த அசோக வானம் சீதை வசிப்பதற்கு மிகவும் ஏற்ற இடம். நிலவுமுகம் கொண்ட சீதை இன்னமும் உயிருடன் இருப்பார் என்றால், இந்தத் தூய நீர் நிலையை நாடி நிச்சயம் வருவார்."

இவ்வாறு நினைத்த மகாத்மாவான ஹனுமான் சீதையைக் காண வேண்டும் என்ற துடிப்பு மிகுந்தவராக, ஒரு அடர்த்தியான புதருக்குள் மறைந்து நின்றபடி, பூக்கள் நிறைந்த அந்த அசோக வனத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கவனிக்க ஆரம்பித்தார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக