Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 மார்ச், 2019

செங்கம்மா முனியப்பன்


Image result for ஸ்ரீசெங்கம்மா முனியப்பன்
''பெட்டிக்கடையோ, பெரிசா வேற எந்தத் தொழிலோ... செங்கம்மா முனியப்பன் சந்நிதிக்கு வந்து, 'துணையா இருந்து வழி நடத்துய்யா’ன்னு மனசார வேண்டிக்கிட்டு ஆரம்பிச்சா, தொழில்ல ஒரு குறையும் இல்லாம ஓஹோன்னு ஜெயிச்சுடலாம்!''

நாமக்கல் மாவட்டம், பல்லக்கா பாளையத்தில் கோயில் கொண்டிருக்கும் தங்களின் காவல் தெய்வம் ஸ்ரீசெங்கம்மா முனியப்பன் மீது, இந்தப் பகுதி மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை இது.

செங்கம் புதர்கள் நிறைந்திருந்த இந்தப் பகுதி, சுமார் 400 வருடங்களுக்கு முன் பஞ்சத்தில் சிக்கித் தவித்தது. ஒருமுறை, பசு ஒன்று குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்று தானாகவே பால் சொரிந்தது.

அடுத்தடுத்து மூன்று நாட்களும் பசு பால் சொரிவது தொடர, மக்கள் அந்த இடத்தை ஆராய்ந்தனர். அப்போது ஓர் அசரீரி, 'நான் முனியப்பன். பஞ்சத்தில் தவிக்கும் மக்களைக் காக்க வந்திருக்கிறேன். இனி, இவ்வூருக்கு நானே காவல்தெய்வம்'' என்று ஒலித்தது. ஊர் மக்கள் சிலிர்த்தனர். அந்த இடத்திலேயே சிறியதாக கோயில் கட்டியவர்கள், செங்கம் புதரில் தோன்றியதால் ஸ்வாமிக்கு 'செங்கம்மா முனியப்பன்’ என்று திருப்பெயர் சூட்டி, வழிபட ஆரம்பித்தனர். அதன் பிறகு பஞ்சம் நீங்கி, ஊர் செழித்தது.

அரசர்கள் பலரும் போருக்குப் புறப்படுமுன் இங்கு வந்து முனியப்பனை வழிபட்டு, போரில் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள்.பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் கோயிலை பெரிய அளவில் விரிவுபடுத்திக் கட்டியிருக்கிறார்கள். ஸ்வாமிக்கு ஆபரணங்களையும் வழங்கியிருக்கிறார்கள்.

இங்கு வந்து எலுமிச்சம்பழத்தை வேலில் சொருகி வைத்துப் பிரார்த்தித்தால், எண்ணிய காரியங்கள் நடந்தேறுமாம். வெளியூர், வெளி மாநில தொழிலதிபர்களும் தங்களின் வணிகம் செழிக்க, இங்கு வந்து செங்கம்மா முனியப்பனை வணங்கிச் செல்கிறார்கள். இந்தப் பகுதிக்கு வரும் அதிகாரிகளும் இங்கு வந்து ஸ்வாமியை வழிபட்ட பிறகே, தங்கள் பணிகளைத் தொடங்குவார்கள். அதேபோன்று, ஊருக்குள் வரும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இவரைத் தரிசித்துவிட்டே மறு காரியம் பார்ப்பார்கள்.

நெடுஞ்சாலையில் இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளதால், கோயிலைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், முனியப்பனைத் தவறாமல் வழிபட்டுச் செல்கிறார்கள். 'முனியப்பன் வழித்துணையாக வந்து காப்பார்’ என்பது அவர்களின் நம்பிக்கை. பிறந்த குழந்தைகளை ஸ்வாமியின் சந்நிதிக்கு எடுத்துவந்து பிரார்த்திக்கிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் தைரியமாகவும், ஆரோக்கியமாகவும், கல்வியறிவில் சிறந்தும் விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலில் அருளும் ஒண்டி முனியப்பன், காவல் முனியப்பன் ஆகிய தெய்வங்களும் சாந்நித்தியம் மிகுந்தவர்கள். ''இவர்கள் தினமும் இரவு நேரம் குதிரையில் வலம் வந்து, ஊரைக் காக்கிறார்கள். அதனால் இன்றுவரை இந்த ஊரில் எந்தத் திருட்டும், அசம்பாவித சம்பவங்களும் நடந்ததில்லை'' என்று பரவசமும் பூரிப்புமாக விவரிக்கிறார்கள் ஊர்மக்கள்.

மார்கழி மாதம் தேர்த்திருவிழாவும், புரட்டாசி நவராத்திரியின்போது விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அமாவாசை, பௌர்ணமி நாட்களும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை களும் இங்கே விசேஷம்! இந்த நாட்களில் இங்கு முனியப்பனை கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபட்டால், தடையில்லாத முன்னேற்றமும் குறையில்லாத வெற்றியும் நம்மை வந்தடையும் என்பது உறுதி.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக