இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
கலைத்துறையில்
சிறந்து விளங்குபவர்களை பொதுவாக 'கலைவல்லுநர்கள்' என்றழைக்கிறோம். அதற்கும் ஒருபடி
மேலே சென்று ஒரு தலைமுறை மாற்றத்தையோ, அல்லது ஒரு பிரெளயத்தையோ ஏற்படுத்தும் ஒரு
சிலரைத்தான் 'கலையுலக பிரம்மாக்கள்' என்றழைக்கிறோம். ஓவியத்துறையை பொருத்தமட்டிலும்
ஆரம்பத்தில் இரண்டு பரிணாம (Two Dimension) ஓவியங்கள்தான் வரையப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் உதித்த மைக்கலாஞ்சலோவும், லியொனார்டோ டாவின்சியும்
அந்த இரண்டு பரிணாம வரையறையைத் தகர்த்து முப்பரிணாம ஓவியங்களை வரைந்து உலகை
அசத்தினர், ஓவியத்துறைக்கு இன்னொரு முகத்தை கொடுத்தனர்.
அவர்கள் மறைந்த
பிறகு பல நூற்றாண்டுகள் வரை ஓவியத்துறைக்கு எவராலும் வேறு ஒரு புதிய பரிணாமத்தைத் தர
முடியவில்லை. கேமரா மற்றும் புகைப்படங்களின் வரவு வேறு ஓவியக்கலையை சற்று
பின்னுக்குத் தள்ள ஆரம்பித்தது. ஓவியர்கள் எவ்வுளவுதான் தத்ரூபமாக வரைந்தாலும்
அந்தப் படைப்புகளால் ஒரு புகைப்படத்தின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
ஓவியக்கலை கிட்டதட்ட மரணித்துப்போகுமோ? என்று அச்சம் முளைவிடத் தொடங்கிய அந்தத்
தருணத்தில் உதித்தார் ஓர் அற்புத ஓவியர். அவர்தான் 'கியூபிசம்' (cubism) என்ற
புதிய ஓவிய பாணியை உலகுக்குத் தந்ததன் மூலம் 'நவீன ஓவியங்களின் பிரம்மா' என்ற
புகழைப் பெற்றிருக்கும் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso).
1881-ஆம் ஆண்டு அக்டோபர்
25-ஆம் நாள் ஸ்பெயினில் பிறந்தார் பிக்காஸோ. அவர் உயிர் பிழைத்ததே ஆச்சரியம் என்கிறது
ஒரு வரலாற்றுக்குறிப்பு. குழந்தை இறந்தே பிறந்து விட்டது என்று எண்ணிய தாதி குழந்தையை
மேசையில் வைத்துவிட்டு சென்று விட்டார். அதனைக்கண்ட அவருடைய மாமா ஓடிப்போய் உடனடியாக மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை
வழங்கியதால்தான் உயிர் பிழைத்தார் பிக்காஸோ. பேசத் தொடங்கும் முன்பே கையில் பென்சிலை
வைத்துக்கொண்டு வட்டம் வட்டமாக கிறுக்கிக்கொண்டிருப்பாராம் பிக்காஸோ. அவருடைய தந்தை
ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும்
இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தினார். Malaga கடற்கரையில் மணலில்கூட
ஓவியம் தீட்டுவாராம் பிக்காஸோ. பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும்
நன்கு கற்றுக்கொண்டார்.
1904-ஆம் ஆண்டு தனது
23-ஆவது வயதில் கலைகளின் தலைநகரம் என்றழைக்கப்படும் பாரிஸூக்கு வந்தார் பிக்காஸோ. அன்றிலிருந்து
மரணம் வரை அவர் பிரான்சில்தான் வாழ்ந்தார். அவரது திறமையையும், புகழையும் கண்ட பிரெஞ்சு
அரசாங்கம் எத்தனையோ முறை பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டும்
அவர் தனது ஸ்பானிய குடியுரிமையை விட்டுக்கொடுக்கவில்லை. பாரிஸூக்கு வந்த மூன்று ஆண்டுகளில்
அவர் வரைந்த 'Les
Demoiselles d'Avignon' என்ற ஓவியம் உலகை ஸ்தம்பிக்க வைத்தது. அதில் ஐந்து பெண்களை
அவர் வரைந்திருந்த வித்தியாசமான பாணி அவருடைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல நவீன ஓவியத்துறைக்கே
ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. வளைவுகள் அதிகமின்றி நேர்க்கோடுகளும், முக்கோண வடிவங்களும்
கொண்டு அது வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியம்தான் 'கியூபிசம்' என்ற ஓவிய பாணியைத் தொடங்கி
வைத்தது.
அதன்பின் பலர் அந்த
ஓவிய பாணியை பின்பற்றத் தொடங்கினர். உலகம் முழுவதிலிருந்த ஓவிய விற்பன்னர்களின் மரியாதையை
பெற தொடங்கினார் பிக்காஸோ. இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டைன் பிக்காஸோவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறுவயதிலிருந்தே
ஓவியனாக வரவேண்டும் என்ற நிறைவேறா கனவுகளோடு வளர்ந்த கொடுங்கோலன் ஹிட்லரோ பிக்காஸோவின்
ஓவியங்களை ஒரு பைத்தியக்காரன் கிறுக்கியது என்று சொல்லி அந்த படைப்புகளை ஜெர்மனியில்
தடை செய்தார். இருப்பினும் ஜெர்மனி பிரான்சின் மீது ஆதிக்கம் செலுத்தியபோதுகூட பிக்காஸோவை
பகைத்துக்கொள்ள ஜெர்மன் படைகள் தயங்கின. அந்தளவுக்கு பிக்காஸோ உலகப்புகழ் பெற்றிருந்ததே
காரணம்.
1936-ஆம் ஆண்டு பிக்காஸோவின் தாய்நாடான
ஸ்பெயினில் உள்நாட்டு போர் மூண்டது. அப்போது ஹிட்லரின் நாசிப்படைகள் 'Guernica' என்ற
நகரின் மீது கடுமையான ஆகாயத்தாக்குதல் மேற்கொண்டன. அந்த தாக்குதலில் Guernica நகர்
சின்னாபின்னமாக சிதைந்தது. மரண ஓலம் ஒலித்த அந்த நகரின் வேதனை பிக்காஸோவின் நெஞ்சை
பிழிந்தது. தனது உணர்வுகளை அவர் கேன்வஸ் துணியில் ஓவியமாகத் தீட்டி அதற்கு
'Guernica' என்று பெயர் சூட்டினார். தனது நாட்டில் இறந்து போனவர்களுக்காக அவர் தீட்டிய
அந்த அதீத ஓவியம் இறவாப்புகழ் பெற்றது. ஹிட்லரின் நாசி ஆட்சியை எதிர்க்கும் சின்னமாக
அந்த ஓவியம் கருதப்பட்டது. அந்த சின்னத்தை மட்டுமல்ல உலகிற்கு இன்னும் ஓர் அற்புத சின்னத்தையும்
வழங்கினார் பிக்காஸோ.
கம்யூனிச கொள்கைகளால்
கவரப்பட்ட அவர் பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அமைதி தொடர்பாக அந்த
கட்சி ஏற்பாடு செய்த பல அனைத்துலக கூட்டங்களில் கலந்து கொண்டார். அவ்வாறு 1950-ஆம்
ஆண்டு நடைபெற்ற அமைதி மாநாட்டுக்காக அவர் ஓர் ஓவியம் வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தில்
அவர் அமைதியை ஓர் வெள்ளைப்புறாவாக உருவகப்படுத்தி வரைந்திருந்தார். அற்புதமாக அமைந்திருந்த
அந்த ஓவியத்தையே அமைதியின் சின்னமாக ஏற்றுக்கொண்டது உலகம். சீனா ஒருபடி மேலே சென்று
அந்த ஓவிய சின்னத்தை தன் தபால் முத்திரையில் பதித்துக் கொண்டது. ஓவியக்கலையில் மட்டுமின்றி
ஆடை வடிவமப்பதிலும் திறமைக் காட்டினார் பிக்காஸோ. ரஷ்யாவின் புகழ்பெற்ற பேலெ நடனக்குழுவுக்கு
அவர் ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தார். அந்த நடனக்குழுவில் இடம்பெற்றிருந்த Olga
Khokhlova என்பவரை பிக்காஸோ மணந்துகொண்டார்.
ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி
சிற்பங்கள் செய்வதிலும் வல்லவராக திகழ்ந்தார் பிக்காஸோ. அவர் புனைந்த சில கவிதைகள்கூட
மிகச்சிறந்தவை என்று சமகால கவிஞர்களால் பாராட்டப்பட்டன. 78-ஆண்டுகளில் அவர் உலகிற்கு
வழங்கிய படைப்புகளின் எண்ணிக்கை எவ்வுளவு தெரியுமா? சுமார் 13500 ஓவியங்கள், சுமார்
34000 illustration எனப்படும் விளக்கப்படங்கள், சுமார் 400 சிற்பங்கள். அவரது ஒட்டுமொத்த
படைப்புகளின் தற்போதைய மதிப்பு சுமார் 500 மில்லியன் பவுண்டுகள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நூற்றாண்டுகளுக்குப்
பிறகு ஓவியக்கலைக்கு ஓர் புது உற்சாகத்தைக் கொடுத்த அந்த அற்புத ஓவியன் 1973-ஆம் ஆண்டு
ஏப்ரல் 8-ஆம் தேதி தமது 92-ஆவது வயதில் பிரான்சில் காலமானார். தனது படைப்புகளில் பிக்காஸோ
பின்பற்றிய சித்தாந்தம் என்ன தெரியுமா? அதனை அவரே ஒருமுறை கூறினார் இவ்வாறு....
"ஒரு
காட்சியை நமது கண்கள் எப்படி பார்க்கின்றனவோ அதை அப்படியே ஓவியமாக வரைவதில் என்ன புதுமை
இருக்க முடியும்? அந்தக் காட்சி நம் மனத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை பிரதிப்பலிப்பதாக
இருக்க வேண்டுமே தவிர, அந்தக்காட்சியின் அசல் பிரதிப்பலிப்பாக
இருக்கக்கூடாது".
இப்படி
'Thinking out of the box' எனப்படும் வித்தியாசமாக சிந்தித்து செயல்படும் முறையை பின்பற்றியதால்தான்
பிக்காஸோவால் உலகப்புகழ் பெற முடிந்திருக்கிறது. 'நவீன ஓவியம்' என்ற வானத்தையும் வசப்படுத்த
முடிந்திருக்கிறது. பிக்காஸோவைப் போலவே எதனையும் புதுமையாக சிந்தித்து வித்தியாசமாக
செயல்பட வேண்டும் என்று எண்ணுவோருக்கும், எண்ணித்துணிவோருக்கும், துணிந்து செயல்படுவோருக்கும்
அவர்கள் விரும்பிய வானமும் நிச்சயம் வசப்படும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக