புதன், 29 ஜூலை, 2020

அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோவில், திருமழிசை

 அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் ...
ஜெகந்நாத விமானம், ஐந்து அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் மற்றும் பிரகாரத்தில் ஜெகந்நாதர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், மணவாள மாமுனி சன்னதிகள் உள்ள அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோவில் திருவள்ள ர் மாவட்டம் திருமழிசை எனும் ஊரில் அமைந்துள்ளது.

மூலவர் : ஜெகந்நாதப்பெருமாள்

அம்மன் : திருமங்கைவல்லி

தல விருட்சம் : பாரிஜாதம்

தீர்த்தம் : பிருகு புஷ்கரிணி

ஆகமம் : வைகாநஸம்

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர் : திருமழிசை

மாவட்டம் :திருவள்ளூர் 

தல வரலாறு:

அத்திரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் பிரம்மனிடம் சென்று பூலோகத்தில் தாங்கள் தவம் செய்ய விரும்புவதாகவும், அதற்கு தகுந்த இடத்தை காட்டுமாறும் வேண்டினர்.

பிரம்மன், தேவசிற்பியை அழைத்து ஒரு தராசைக் கொடுத்து அதன் ஒரு பக்கத்தில் திருமழிசை தலத்தையும், மறுபக்கத்தில் பூமியில் உள்ள பிற புண்ணிய தலங்களையும் வைத்தார். அப்போது, திருமழிசைத்தலம் இருந்த தட்டு கனமாக கீழே இழுத்தபடியும், பிற தலங்கள் இருந்த தட்டு மேலெழும்பியும் இருந்தது.

இக்காட்சியைக் கண்டு வியந்த பிரம்மரிஷிகள் திருமழிசைத் தலத்தின் மேன்மையை அறிந்து, பிரம்மனிடம் ஆசி பெற்று இங்கு வந்து தவமிருந்தனர். அவர்களுக்கு பெருமாள், அமர்ந்த கோலத்தில் ஜெகந்நாதராக காட்சி தந்தருளினார்.

தல பெருமை :

ஒருமுறை பரமசிவனும், பார்வதியும் ஆகாயத்தில் ரிஷப வாகனத்தில் சென்ற போது, ஆழ்வாருடன் வார்த்தை விளையாட்டை ஆரம்பித்தார் சிவ பெருமான், முடிவில் அவர்களுக்கு இடையேயான பேச்சு வாதத்தில் முடிந்தது. ஆழ்வாரின் சொல்வன்மையை கண்டு வியந்த சிவன் அவருக்கு, 'பக்திசாரர்" என சிறப்பு பெயர் சூட்டினார்.

சைவம் மற்றும் வைணவம் என இரு மதத்திலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றிய இவர் நான்காம் ஆழ்வார் ஆவார். கால் கட்டைவிரல் நகத்தில் ஞானக்கண்ணைப்பெற்ற இவர் அவதரித்த இத்தலத்தில் இவருக்கு தனிச்சன்னதி உள்ளது.

கருவறை சுற்றுச்சுவரில் உள்ள விநாயகர், தனது வயிற்றில் ராகுவும், கேதுவும் பின்னியுள்ளபடி காட்சி தருகிறார். இவரை வணங்கிட ராகு, கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

மார்க்கண்டேய மகரிஷிகளுக்காக சுவாமி இவ்விடத்தில் காட்சி தந்ததால், அவர்களிருவரும் கருவறையில், தவக்கோலத்தில் சுவாமியை வணங்கியபடி உள்ளனர்.

பூமியிலுள்ள புண்ணிய தலங்கள் அனைத்தின் மகிமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள தலமென்பதால், இத்தலம் 'மகீசாரம்" என அழைக்கப்படுகிறது. இங்கு பிறந்தவர்களுக்கும், இத்தலத்து பெருமாளை வணங்கியவர்களுக்கும் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

கலியுகத்தின் தொடக்கத்தில் கலியுக வெங்கடேசப் பெருமாளாக இத்தலத்தில் பிரம்மனுக்கு காட்சி தந்ததாக வரலாறு.

பிராத்தனை :

இங்குள்ள பிருகு தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் பாவங்கள் விலகும், அம்பாளை வணங்கிட குழந்தை பாக்கியம், ஐஸ்வர்யம் பெருகும், சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் வைஷ்ணவிக்கு மாலை சாத்தி வழிபட தடைபட்ட திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்