போரைக் காண்பதற்காக விண்ணுலகத்தவர்
வானில் வந்து தோன்றினர். அப்பொழுது இந்திரஜித் விபீஷணனிடம், நீ அரக்க குலத்தையே
கெடுக்க வந்தாயா? சிறிது கூட உனக்கு வம்ச ரத்தம் ஓடவில்லையா? நம் விரோதியே கதி
என்று இருக்கின்றாய்.
உனக்கென்ன மூளை மழுங்கிவிட்டதா? இன்று
உன் யோசனையால் தான் இந்த யாகம் தடைப்பட்டு விட்டது என்றான். விபீஷணன், நான் அரக்க
குணம் கொண்டவனல்ல. நேர்மையை விரும்புபவன். அதனால்தான் இவர்களோடு நட்பு கொண்டேன்.
நட்பு நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது. பிறர் பொருளைக் கவர்ந்தவன் என்றுமே
வாழ்க்கையில் உயரமாட்டான்.
நீ இராவணனுக்காக போர் புரிகிறாய்.
அதனால் நீயும் அழிய வேண்டியவன் தான் என்றான். இதைக்கேட்டு இந்திரஜித் மிகவும்
கோபம் கொண்டான்.
இலட்சுமணனை பார்த்து, நான் உன்னையும்,
உன் அண்ணனையும் நினைவிழக்கச் செய்தேனே. அதை நீ மறந்துவிட்டு இப்பொழுது என் கையால்
இறக்கவா வந்திருக்கின்றாய்? எனக் கேட்டான். இலட்சுமணன், வீரனே! இனி என்னை கொல்வது
என்பது முடியாத காரியம்.
அதனால் என்னிடம் வீண்பேச்சு பேசாதே.
மறைந்து தாக்குவது தான் வீரனின் பலமா? என்னுடன் வந்து நேருக்கு நேர் போர் புரிந்து
வென்றுக்காட்டு எனக் கூறினார். இருவருக்கும் போர் ஆரம்பமானது. இவர்களுக்கிடையில்
நீண்ட நேரம் போர் நடந்தது. இந்திரஜித்தால் இலட்சுமணனின் தாக்குதலைச் சமாளிக்க
முடியவில்லை.
விபீஷணன், வானரர்களே, அரக்கர்களை
அழியுங்கள். இராவணனுக்கு இந்த இந்திரஜித் ஒருவனே மாவீரன். இவனைக் இலட்சுமணன்
கொன்று விடுவார்.
நாம் இலட்சுமணனுக்கு உதவி புரியும்
வகையில் அரக்கர்களை அழிப்போம் என கூறினான். வானர வீரர்கள், அரக்கர்களை கொன்று
வீழ்த்தினர். இலட்சுமணன் இந்திரஜித்தின் தேர்ப்பாகனைக் கொன்றான். அதனால்
இந்திரஜித் தானே தேரை ஓட்டிக் கொண்டு போர் புரிந்தான். வானர வீரர்கள்
இந்திரஜித்தின் தேரைத் ஒடித்தெறிந்தனர். பிறகு இந்திரஜித் தரையில் நின்றுக் போர்
புரிந்தான்.
இலட்சுமணனின் தாக்குதலை தாக்கு பிடிக்க
முடியாமல் இந்திரஜித் சக்தி வாய்ந்த படைக்கலன்களை ஏவ ஆரம்பித்தான். இந்திரஜித்
இலட்சுமணன் மீது வாயுப்படையை ஏவினான். இலட்சுமணன் தன்னிடமிருந்த அக்னிப் படையை ஏவி
அதை அணைத்தார். இந்திரஜித் வருணாஸ்திரத்தை இலட்சுமணன் மீது ஏவினான். இலட்சுமணன்
தன்னிடமிருந்த வருணாஸ்திரத்தால் அதனைத் தூள்தூளாக்கினார்.
இந்திரஜித் ஏவும் படைக்கலனைக் அதே
படைக்கலனைக் கொண்டு அழித்தார். வெகு நேரம் போர் புரிந்ததால் இந்திரஜித் சோர்வை
உணர்ந்தான். அதனால் அவன் இலட்சுமணனை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரம்மாஸ்திரத்தை
இலட்சுமணன் மீது ஏவினான். இதைப் பார்த்த தேவர்கள் இலட்சுமணன் வீழ்வது உறுதி என
நினைத்து வருந்திக் கொண்டு இருந்தனர்.
உடனே இலட்சுமணன் தன்னிடமிருந்த சக்தி
வாய்ந்த பிரம்மாஸ்த்திரத்தை நாணில் பூட்டி, இந்திரஜித் தொடுத்த படைக்கலனை மட்டும்
அழிப்பாயாக. இந்திரஜித்தின் உயிரையும் ஏனைய உலகங்களையும் அழிக்காதே எனக் கூறி
ஏவினான். அதேபோல் இலட்சுமணன் ஏவிய பிரம்மாஸ்த்திரம், இந்திரஜித்தின் படைக்கலனை மட்டும்
அழித்தது. இதைக் கண்டு தேவர்கள் இலட்சுமணனை பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக