இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மாபெரும் தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், எப்படி தொழிலதிபர் ஆக வேண்டும் என்பதே எல்லோரின் கேள்விக்குறியாக உள்ளது.தொழிலதிபர் ஆக என்ன தகுதி வேண்டும்?.... பணக்காரராக இருக்க வேண்டுமா? இல்லை நன்றாக படித்திருக்க வேண்டுமா? இல்லை யாருடைய ஊக்கமாவது வேண்டுமா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா?
தொழிலதிபர் ஆக இவை எதுவுமே தேவையில்லை. என்ன தேவை தெரியுமா? உங்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, இலட்சியம் மற்றும் குறிக்கோள். இவை இருந்தாலே போதும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சாமானியர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டிய திருபாய் அம்பானி அவர்களை கூறலாம்.
சாதாரண மனிதர்களை மட்டுமின்றி உலகின் தலைசிறந்த தொழிலதிபர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர்தான் திருபாய் அம்பானி.
தற்போது மாபெரும் சாம்ராஜ்ஜியமாக உலா வரும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆணி வேறாக இருந்தவர், திருபாய் அம்பானி என்றால் அது மிகையாகாது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து உலகின் மிகச்சிறந்த ஜாம்பவானாக மாறிய திருபாய் அம்பானி, தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை... சந்தித்த சவால்களை இனி காண்போம்.
மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய திருபாய் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் நிறுவனத்தை உருவாக்கியவர். இவர் 'இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்" எனப் புகழ் பெற்றவர். இந்தியாவின் பொருளாதாரத்தை அளவிடக்கூடிய வகையில், தன்னுடைய வர்த்தகப் பங்குகளை உயர்த்தி, பங்குசந்தைகளின் 'முடிசூடா மன்னனாக" விளங்கியவர்.
இந்தியத் தொழிலதிபர் திருபாய் அம்பானி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள சோர்வாத் அருகிலுள்ள குகஸ்வாடாவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி. இவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
தன் 16வது வயதில் ஏமனுக்கு சென்ற திருபாய் அம்பானி, பெட்ரோல் பங்கில் 300 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஏமனில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த திருபாய் அம்பானிக்கு, சொந்தமாக தொழில் நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
ஏமன் நாட்டின் நாணயம் ரியால். சுத்த வெள்ளித் தயாரிப்பு. இந்த நாணயத்தின் மதிப்பைவிட அதில் இருந்த வெள்ளியின் மதிப்பு அதிகம் என்பதை கண்டுபிடித்த திருபாய் அம்பானி, ரியால் நாணயங்களைச் சேமித்து அதனை உருக்கினார். வெள்ளியை நகை வியாபாரிகளுக்கு விற்றார். இதை கண்டுபிடித்த அரசாங்கம் ரியாலை உருக்குவதற்குத் தடை விதித்தது.
அதன்பின் ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தரராக சேர்ந்தார். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த அம்பானி, என்ன தொழில் செய்வது என்பதில் மிக குழப்பமாக இருந்தார். முதலில் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை வாங்கி விற்க தொடங்கினார். இதில் லாபம், நஷ்டம் என மாறி மாறி வந்துக்கொண்டு இருந்தது. இப்படி இருக்கையில், திருபாய் அம்பானிக்கு சர்க்கரை ஏற்றி வந்த கப்பல் விபத்துக்குள்ளானது. இதனால் திருபாய் அம்பானி பண நெருக்கடிக்கு ஆளானார். அப்பொழுது திருபாய் அம்பானியுடன் பணிபுரிந்த நண்பர் இவரின் பண நெருக்கடிக்கு உதவினார்.

பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பிய திருபாய் அம்பானிக்கு, 1954ஆம் ஆண்டு தனது சொந்த ஊரை சேர்ந்த கோகிலா பட்டேலுடன் திருமணம் நடந்தது. அதன் பின் தனது மனைவியுடன் ஏமனுக்கு மீண்டும் திரும்பி சென்றார். அங்கு மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 1957ஆம் ஆண்டு இத்தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர்தான் தற்போது ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
1958ஆம் ஆண்டில் ஏமனில் நடந்த உள்நாட்டு விவகாரங்களால் திருபாய் அம்பானியின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியா திரும்பினார்.

இந்தியாவிற்கு திரும்பிய பின்னர், தன்னுடன் ஏமனில் வேலைப்பார்த்து வந்த சம்பக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ஜவுளி வியாபாரத்தை தொடங்கினார். அகமதாபாத்தில் மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா என்ற இடத்தில் தனது முதல் நிறுவனத்தை துவங்கினார். 350 SQft மட்டுமே கொண்ட ஒரு அறையே அவரது முதல் நிறுவனமாகும். அங்கு ஒரு மேஜை, மூன்று நாற்காலிகள் மற்றும் ஒரு தொலைபேசி மட்டுமே இருந்தது. இந்த புதிய கம்பெனிக்கு அவர் வைத்த பெயர் Reliance Commercial Corporation
ஜவுளித்தொழில் லாபகரமாக சென்றாலும் திருபாய் அம்பானிக்கு அது போதுமானதாக இல்லை. ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு, சம்பக்லால் தமானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாகப் பிரிந்தார். அப்போது சம்பக்லாலின் சு Reliance பங்குகளை 6 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினார், திருபாய் அம்பானி.
மற்றவர்களிடம் ஏன் துணி வாங்கி, விற்க வேண்டும். நாமே இந்த துணிகளை தயாரித்தால் என்ன? என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. 1967ஆம் ஆண்டு தன்னுடைய முதல் நூற்பாலையை குஜராத்தில் கட்டினார். இதில் தன்னுடன் ஏமனில் பணிபுரிந்த நண்பர்களையும் இணைத்துக்கொண்டார். திருபாய் அம்பானியை போட்டியாக நினைத்த மற்ற பெருமுதலாளிகள் அவரிடம் ஜவுளிகளை வாங்கக்கூடாது என மொத்த விற்பனையாளர்களிடம் கட்டளையிட்டனர்.
அதனால் திருபாய் அம்பானியின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனாலும், மனம் தளராத இவர் மொத்த வியாபாரிகளை விட்டுவிட்டு சில்லறை வியாபாரிகளிடம் முன்பணம் ஏதும் வாங்காமல் தனது பொருட்களை விற்றார். இதனால் சில நாட்களிலேயே அவருக்கு பல லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.
ஆலை ஆரம்பித்து ஒரு வருடத்தில் 90 லட்சம் ரூபாய்க்கு ஜவுளிகள் விற்பனையானது. அடுத்த பத்தாண்டில் Reliance -ன் மொத்த வியாபாரம் 600 மடங்கு உயர்ந்தது. அதற்குபின் திருபாய் அம்பானியின் வாழ்க்கை ஏறுமுகமாக அமைந்தது. அதேவேளையில் திருபாய் அம்பானி-கோகிலா தம்பதியினருக்கு முகேஷ் அம்பானியை தொடர்ந்து தீப்தி, ரீனா என இரண்டு மகள்களும், அனில் என்ற ஒரு மகனும் பிறந்தனர்.
பின் Reliance நிறுவனத்தின் சார்பாக 'விமல்" என்ற Brand உருவாக்கப்பட்டது. தூய்மை என அர்த்தம் கொண்ட விமல் அனைவரிடமும் பிரபலமடைந்தது. மிகப் பரந்த சந்தைப்படுத்தலின் காரணமாக 'விமல்" வீட்டுக்கு வீடு அறிந்த பெயரானது. அதன்மூலம் இந்தியாவில் 400 கடைகள் ஆரம்பிக்கப்பட்டு லட்சக்கணக்கில் விமல் Brand விற்பனை செய்யப்பட்டது.
இதனால், 1977ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 58,000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள், ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப்பங்கு வெளியீட்டை வாங்கினர். இதனால், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது. குறிப்பாக சொல்லப்போனால், 1982ஆம் ஆண்டிற்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி, 'பங்கு சந்தைகளின் முடிசூடா மன்னனாக" விளங்கினார்.
திருபாய் அம்பானி, தான் மட்டும் உயர வேண்டும் என்று நினைத்தவரல்ல. தன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் முதல் பணிபுரியும் ஊழியர்கள் வரை அனைவருக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தவர். 1986ல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்கு, உலகமே வியக்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரம்மிக்க வைத்தனர்.
1990-களுக்குப் பிறகு ரிலையன்ஸ் அசுர வளர்ச்சி கண்டது. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லறை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்கு போக்குவரத்து என பல்வேறு துறைகளில் கால்பதித்து இன்று உலகின் மிகப்பெரிய சாம்சாஜ்ஜியமாய் ரிலையன்ஸ் நிறுவனம் திகழ்கிறது.
பாம்பே டையிங் நிறுவனத்தின் நஸ்லி வாடியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாளராக திகழ்ந்தார். நஸ்லி வாடியா மற்றும் திருபாய் அம்பானி இருவருமே அரசியல் வட்டங்களில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தனர். மேலும், மிகக் கடினமான உரிமங்களை பெறும் திறனிற்கு நாடறிந்தவர்களாக இருந்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, அகலத்தாள் நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு எதிராக, தொடர்ச்சியான பல கட்டுரைகளை வெளியிட துவங்கியது.
இதனிடையில் திருபாய் அம்பானி கூடுதலான அங்கீகாரத்தையும், புகழையும் பெற்றுக் கொண்டிருந்தார். திருபாய் அம்பானியின் வணிக நுட்பத்தையும், அமைப்பினையும் தனது விருப்பத்திற்கேற்ற வகையில் பயன்படுத்திக்கொள்ளும் அவரது திறனையும் பொதுமக்களில் பலர் போற்றத் துவங்கினர்.
இவர்களுக்கிடையேயான மோதல்கள் நீண்ட நாட்களுக்கு நீடித்தது. திருபாய் அம்பானி முடக்குவாத நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகே இந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிக்கைகள், செய்தித்தாள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவற்றின்; உதவிகள் மற்றும் எதிர்ப்புடனும் திருபாய் அம்பானி தனது நிறுவனத்தை உலகெங்கும் அறியச் செய்தார். திருபாய் அம்பானியின் வளர்ச்சி இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது.
இந்தியாவின் தற்போதைய பங்குச்சந்தை வளர்ச்சிக்கு மேடை அமைத்துக் கொடுத்த அத்தனை பெருமையும், ரிலையன்ஸ் நிறுவனத்தையே சாரும்.
உலக வணிகச் சந்தையில் மாபெரும் இடம்பிடித்த ரிலையன்ஸ் நிறுவனத்தை தனது மூளையால் செதுக்கிய திருபாய் அம்பானி, 2002-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி தனது 69வது வயதில் மறைந்தார்.
எதிர்ப்புகள் பல வந்தபோதிலும் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியால் வெற்றி பெற்றவர், திருபாய் அம்பானி. இவரைப்போல நாமும் தோல்விகள், எதிர்ப்புகள் வந்தாலும் அதை அனைத்தையும் தாண்டி சாதிக்க வேண்டும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக