இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
காலையில் எட்டரை மணிக்கு பள்ளியின்
மெயின் கேட் திறக்கப்படும். ஒன்றிரண்டு மாணவர்கள்தான் நுழைந்தது போல் இருக்கும்.
ஒன்பதேகாலுக்குள் எழுநூறு, எண்ணூறு மாணவ-மாணவியர் பள்ளி வளாகத்திற்குள்
வந்துவிடுவார்கள். எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளி இது. பெருமையாக பேசுகிற
அளவுக்கு பெரிய பெரிய வகுப்பறைக் கட்டிடங்கள் இல்லாவிட்டாலும், குறைகூற முடியாத
அளவுக்கு போதுமான வகுப்பறை வசதிகள் நிறைந்த பள்ளிதான். எல் வடிவில் பள்ளிக்
கட்டிடங்கள். அதை 'ப" வடிவமாக்க முயற்சிப்பது போல் பள்ளியின் அலுவலக அறை,
அதோடு இணைந்து கலைநிகழ்ச்சிகள், பள்ளி விழாக்கள் நடத்த வசதியான ஒரு மேடை. இதற்கு
மத்தியில் மாணவர்கள் விளையாடுவதற்கு போதுமான இடவசதி.
காலை நேரம் சில மாணவர்கள், முந்தைய
நாள் வீட்டுப்பாடத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். சிலர் தாங்கள் விளையாடிய
புதிய வீடியோ கேம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். சில மாணவர்கள் வகுப்பறைக்குள்ளும்,
வெளியேயும் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வகுப்பறையில் குடி தண்ணீர் வைப்பதற்கு,
தண்ணீர் பிடித்து கொண்டும், இரண்டிரண்டு பேராக வகுப்பறைக்கு தண்ணீர் தூக்கிக்
கொண்டும் போய் கொண்டிருந்தனர். மொத்தத்தில் பார்ப்பதற்கு ஒழுங்கீனத்தனமாக
தெரிந்தாலும் அவரவர் வேலையை பொறுப்பாக செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தான்
அந்த பெரும் சத்தமும், சிறு கூட்டமும் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது.
வகுப்பறைக்குள் இருந்த மாணவர்கள் வெளியே ஓடி வந்தனர். வெளியே நின்றிருந்த
மாணவர்கள் வகுப்பறைக்குள் ஓடினர்.
நான்காம் வகுப்பு, ஜந்தாம் வகுப்பு
படிக்கிற மாணவர்கள் மூன்று பேரும், கையில் விளக்குமாருடன் நான்கைந்து பெண்களும்,
விறகுகம்பு மற்றும் உருட்டுக் கட்டையுடன் நான்கைந்து ஆண்களும் ஆவேசமாக உள்ளே
வந்தனர். மூன்று மாணவர்களின் பெற்றோரும், உற்றார் உறவினர்களும் தான் அந்த
பெரியவர்கள்.
யாருடா அந்த வாத்தியார். ஆளக்காட்டு,
யாரு பய, எங்கவந்து எங்க புள்ளைகளத் தண்டிக்கிறது.” கோபத்தில, சும்மா சத்தமே
பலமாக இருக்கும். உருவத்தை பார்த்தா யாருக்குத்தான் பயம் இருக்காது..
ஒன்றிரண்டு ஆசிரியர்கள்
வகுப்பறைக்குள்ளும் பள்ளி அலுவலகத்திலும் நின்றிருந்தனர். மொத்தம் பதினைந்து பேர்
பணி செய்கிற பள்ளி. இன்னும் சிலர் வராத நிலை.
கையில் உருட்டுக் கட்டையுடன்
வந்திருந்த ஒருவர் யாருடா, எந்த வாத்தியார்டா ஆளக்காட்டு. அதோ அவரா, என்று
வகுப்பறை வாசலில் நின்றிருந்த மஞ்சக்கலர் சட்டை போட்டிருந்த ஆசிரியரைக் காட்டி
கேட்டார். அந்தப் பையன் இல்லப்பா என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆசிரியர்
வகுப்பறைக்குள் சென்று விட்டார். வந்த வேலை முடிந்து இவர்கள் வெளியே போகும் முன்
மஞ்சக்கலர் சட்டை வாத்தியார் வெளியே எக்காரணம் கொண்டும் வரமாட்டார் என்பது உறுதி.
பள்ளி அலுவலகத்தில் தலைமை ஆசிரியர்
அன்றாட அலுவல்களுக்காக பதிவேடுகளை தயார் செய்து கொண்டிருந்தவர் பெரும்
சத்தத்தையும் கூச்சலையும் கேட்டு பயத்தோடும், பதற்றத்தோடும் வெளியே வந்தார்.
வந்தவுடன், யார் நீங்க, என்ன வேணும், என்ன தைரியம் இருந்தா ஒரு பள்ளிக்கூடத்தில்
வந்து தகராறு பண்ணுவீங்க என்று தைரியமா கேக்கணும் என்று தான் நினைத்திருப்பார்.
ஆனால் வந்தவர்களின் கையில் இருந்த கட்டையைப் பார்த்தவுடன் இவர் மட்டையாக
நின்றுவிட்டார்.
விளக்குமாறு வைத்திருந்த பெண்
ஒருத்தி, பள்ளிக்கூடமாயா நடத்துறீங்க பள்ளிக்கூடம். பெத்த வயிறு பத்திக்கிட்டு
எரியுது. அந்த வாத்தியாரை இந்த விளக்குமாத்தால நாலு சாத்து சாத்தாம விட மாட்டேன்.
ஏல ராசா, யார்ல அந்த வாத்தியார், ஆளக் காட்டுல என்று ஆவேசமாகக் கத்தினாள்.
தலைமை ஆசிரியர் அதிராத குரலில்,
என்னம்மா என்னான்னு விவரமா சொல்லுங்க. என்ன நடந்தது என்று கேட்டார்.
என்ன நடந்ததா, வந்தவர்களில் ஒருவர்
சொன்னார். யோவ் வாத்தி பள்ளிக்கூடத்துலப் பிள்ளைகள அடிக்கக்கூடாது, தண்டிக்க
கூடாதுன்னு உமக்கும் இங்குள்ள வாத்தியாருக்கும் தெரியாதா?
நேற்று இந்த மூன்று பையன்களையும்
முக்கால் மணி நேரம் முழங்கால் போடச் சொல்லி அடித்திருக்கிறார். மூட்டு வலி தாங்காம
ராத்திரி தூங்காம கிடந்து தவிச்சிருக்காங்க. மூணு பேரும் பக்கத்து பக்கத்து
வீட்டுகாறங்க. அப்படி என்னையா அந்த வாத்தியாருக்கு ஆத்திரம், இந்தப் பச்சப்
பிள்ளைங்க மேல.
இவருக்கிட்ட என்ன வழவழன்னு பேசிக்கிட்டு
இருக்க. ஆளாளுக்கு கத்திப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. நான்
உங்க பையன் கிட்ட பேசுறேன். தயவுசெய்து கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க. கண்டிப்பாக
தவறு செய்தது எந்த ஆசிரியராக இருந்தாலும், கல்வி அதிகரியை வரவழைத்து, தகுந்த
தண்டனை வாங்கிக் கொடுப்பது என் பொறுப்பு. கொஞ்சம் அமைதியா இருங்க, என்று தலைமை
ஆசிரியர் அவர்களிடம் பேசிக் கொண்டே, டேய் குமார் என்னப்பா நடந்தது நீ சொல்லு என்று
அவர்களுடன் நின்றிருந்த ஒரு மாணவனிடம் கேட்டார்.
அப்போது ஆசிரியர் மோகனபாரதி கையில்
லஞ்ச் பேக்குடன் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தார். நடப்பது என்னவென்று அவருக்கு
தெரியாது.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவன்,
அதோ வருகிறாரே அந்த வாத்தியார்தான் என்று ஆசிரியர் மோகனபாரதியைப் பார்த்து கையை
நீட்டினான்.
ஆசிரியர் மோகனபாரதியைப் பார்த்தவுடன்
பாதிக்கப்பட்ட பையன் குமாரின் தாயார் மாரியம்மாள் கண்கள் விரிய, வாய் திறக்க,
கையில் இருந்த விளக்குமாற்றை தரையில் வீசிவிட்டு அவரை அடிச்சிறாதீங்க என்று
கத்தினார்.
இரண்டு மாதத்திற்கு முன்பு...
ஆறாம் வகுப்பு. ஆறாம் வகுப்பு என்றாலே
அங்கு எப்போதும் சந்தோசமும், உற்சாகமுமாகத்தான் இருக்கும். மாணவர்கள் பாடத்தை
மட்டுமல்ல, நாட்டு நடப்பில் இருந்து, நாட்டுவைத்தியம் வரை தெரிந்து கொள்ளும்
வாய்ப்பு அங்கிருந்தது. ஏனென்றால் இது ஆசிரியர் மோகனபாரதியின் வகுப்பு.
மாணவர்கள் அவரை ஓர் ஆசிரியராக மட்டும்
பார்ப்பதில்லை. ஒரு கோணத்தில் பார்த்தால் அண்ணனாகவும், மற்றொரு கோணத்தில் ஆலோசனை
வழங்கும் தந்தையாக பார்த்தனர். ஆசிரியர் மோகனபாரதி பாடம் நடத்தும் போது மாணவர்கள்
அமைதியாகக் கவனிப்பார்கள். இவர் பாடம் நடத்தும் போது, டேய் பேசாத, அமைதியாக இரு
என்று சொல்வதே இல்லை. இவருடைய பார்வை ஒவ்வொருவர் மீதும் விழும். ஒவ்வொருவரையும்
பெயர் சொல்லி அழைப்பார்.
நான் இப்போது நடத்த போகும் பாடத்தை
நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும். அதற்கு முன்பாக உங்களிடம் ஒரு கேள்வி என்று
பாடத்தை தொடங்கினார் ஆசிரியர் மோகனபாரதி.
சார் எங்கிட்ட கேளுங்க, சார் எங்கிட்ட
கேளுங்க என்று ஒவ்வொருவரும் கையைத் தூக்கினர்.
நான் எல்லோரிடமும் கேள்வி கேட்பேன்.
ஆனால் எல்லோரிடமும் கேட்பது ஒரே கேள்வி தான் என்றதும் மாணவர்களுக்கு ஆர்வம்
அதிகமாயிற்று.
மூர்த்தி நீ சொல்லு, உனக்கு பிடித்த
ஹீரோ யார்? சார் எனக்கு பிடித்த ஹீரோ விஜய் என்றான் மூர்த்தி.
ஆசிரியர் முகத்தில் எந்த சலனமும்
இல்லை. ஆனால் மூர்த்தியின் முகத்தில் அவனுடைய ஹீரோ பெயரை எல்லோர் முன்னிலையிலும்
சொல்லும் போது அவனது முகத்தில் ஒரு மகிழ்ச்சியும் பெருமையும் வெளிப்பட்டதை மட்டும்
ஆசிரியர் ரசித்தார். அடுத்து மகேஷ்வரி சொல்லு உனக்கு பிடித்த ஹீரோ அல்லது ஹீரோயின்
யார்? என்று கேட்டார்.
அதற்கு மகேஷ்வரி, சார் எனக்குப்
பிடித்த ஹீரோ சூப்பர் ஸ்டார் என்று தலையை ஒரு வெட்டு வெட்டி முடியை ஸ்டைலாக கோதி
விடுவது போல் பாவனை செய்து கொண்டாள். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடிகரின்
பெயரையும், நடிகையின் பெயரையும் சொல்லிக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டனர்.
அனைத்தையும் ரசித்த ஆசிரியர், நான்
எதிர்பார்த்த பதிலை மட்டும் யாருமே சொல்லவில்லை. யாராவது நான் எதிர்பார்த்த
ஹீரோவின் பெயரைச் சொன்னால் அவர்களுக்கு ஒரு ஹீரோ பேனா பரிசாக தருகிறேன் என்றார்.
அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு
உள்;ர் முதல் உலக கதாநாயகர்கள் வரை அனைவரின் பெயர்களையும் சொன்னார்கள்.
ஆனால் ஆசிரியர் மோகனபாரதி உதட்டைப்
பிதுக்கியவாறே இல்லை என்பது போல் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
உடனே மகேஷ்வரி சார்…சார்...சார்..
இந்த சினிமா நடிகர்களை விட சிறந்த ஹீரோ எனக்கு யார் தெரியுமா, எங்க அப்பா தான்
சார் என்றாள்.
அதைக் கேட்டதும் ஆசிரியருக்கு இருந்த
மகிழ்ச்சி, ஆனந்தம் அவரது முகத்தில் தெரிந்தது. ஆசிரியர் மகேஷ்வரியைப் பார்த்து
வெரிகுட் என்று சொல்லி, அவளை அழைத்து ஹீரோ பேனா பரிசளித்தார். எல்லோரும்
கைதட்டினர். அதுமட்டுமல்ல எனக்கும் எங்க அப்பா தான் ஹீரோ, எங்க அம்மா தான்
ஹீரோயின் என்று வகுப்பறையே தங்களுடைய ஹீரோ, ஹீரோயினாக தங்களது பெற்றோரை உற்சாகமாக
வாழ்த்தினர்.
ஆனால் மாணவி அமுதவள்ளி மட்டும்
உற்சாகம் குறைந்து, முகத்தில் சோர்வுடன் இருந்தாள். இதைக் கண்ட ஆசிரியர்
அமுதவள்ளியைப் பார்த்து என்னம்மா வள்ளி உனக்கு உடம்புக்கு முடியலையா? ஏன் மிகவும்
சோர்வாக இருக்கிற என்று கேட்டார்.
அதற்கு அமுதவள்ளி ஒன்றுமில்லை சார்
என்று சொன்னாலும் முகம் காட்டியது உடல் சோர்வை. அருகில் இருந்த மகேஷ்வரி எழுந்து,
சார் அவங்க வீட்ல சோறு இல்லையாம் சார். அதான் காலையில ஒன்னுமே சாப்பிடாம பள்ளிக்
கூடத்துக்கு வந்துட்டா. அவங்க அம்மா வேலை பார்க்கிற வீட்டுகாரங்க வெளியூர்
போயிட்டாங்களாம். அதனால சம்பளம் கிடைக்காம சமையல் செய்யலையாம். நேத்து ராத்திரி
காய்ச்சிய கஞ்சியில இருந்த மிச்சத்த இவளோட தம்பிக்கும் ரெண்டு தங்கச்சிக்கும்
இவளுடைய அம்மா கொடுத்தாங்களாம். இவளுக்கு ஒரு டம்ளர்ல கொடுத்த கஞ்சிய, இவளுடைய
தம்பிக்கு கொடுத்துட்டு வந்துட்டாளாம் சார்.
ஆசிரியர் மோகனபாரதியின் கண்கள் அவரை
அறியாமல் லேசாக கலங்கத்தான் செய்தது. ஆனால் அதை மாணவர்கள் அறியாமல் பார்த்துக்
கொண்டார்.
என்னம்மா வள்ளி, எங்கிட்ட ஏன் சொல்லல,
ஏமா மகேஷ்வரி நீயாவது எங்கிட்ட சொல்லியிருக்க கூடாது… சரி, சரி ரெண்டு பேரும் இங்க
வாங்கம்மா என்று முன்னால் அழைத்தார், ஆசிரியர்.
பசி தாங்காமல் வாடிய அமுதவள்ளியை மகேஷ்வரி
ஆசிரியருக்கருகில் அழைத்து வந்தாள். தனது லஞ்ச் பேக்கை எடுத்து அமுதவள்ளியிடம்
கொடுத்து, வெளியே வராண்டாவிலே உட்கார்ந்து முழுவதையும் சாப்பிட்டுவிட்டுதான் உள்ளே
வர வேண்டும் என்று கூறினார், ஆசிரியர் மோகனபாரதி.
ஆனால் அமுதவள்ளி, வேண்டாம் சார் என்று
மறுத்தாலும், ஆசிரியர், நான் யார், உங்களுக்கெல்லாம் அப்பா மாதிரி. உங்க அப்பா
கொடுத்தால் சாப்பிடுவியா, மாட்டியா, என்று கூறி சாப்பாட்டை கையில் கொடுத்து
சாப்பிடுமாறு அனுப்பிவிட்டார். மகேஷ்வரியின் துணையோடு அமுதவள்ளி வகுப்பறைக்கு
வெளியில் வராண்டாவில் அமர்ந்து பசியைப் போக்கிக் கொண்டிருந்தாள்.
பெற்ற வயிறு சும்மா இருக்குமா.
அமுதவள்ளியின் தாயார் மாரியம்மாள் பக்கத்து வீட்டில் இரண்டு ரூபாய் கடன் வாங்கி
பால் இல்லாத கடுங்காப்பியுடன் நாளு பன்னும் வாங்கிக் கொண்டு, மகளின் பசியைப் போக்க
அமுதவள்ளியின் வகுப்பறையை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
இங்கு அமுதவள்ளி, சாம்பார், ரசம்,
தயிர், பொறியல், உறுகாயுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அதற்குள் அருகில் வந்து விட்ட தாயார்,
பல தட்டுகளைப் பரப்பி வைத்து மகள் சாப்பிடுவதைப் பார்த்தாள். பார்த்தவளுக்கு
ஒன்றுமே பேச முடியவில்லை. அருகில் இருந்த மகேஷ்வரியை பார்த்தாள்.
வேகமாக எழுந்து மகேஷ்வரி,
அமுதவள்ளியின் தாயார் அருகில் சென்று நடந்ததைக் கூறினாள். ஆசிரியர் தனது மதியச்
சாப்பாட்டை கொடுத்து சாப்பிடச் சொன்னதைக் கேட்டதும் அமுதவள்ளியின் தாயாருக்கு
கண்ணீர் பொங்கி வழிந்ததை தனது இரு கையாலும் கும்பிடுவது போல் வைத்துக் கொண்டு
கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
நீயும் சாப்பிடுதியாம்மா என்று
அமுதவள்ளியின் குரலைக் கேட்டுத் திரும்பிய தாயார், அணையை உடைத்து வரும் வெள்ளம்
போல் வந்த விம்மலை அடக்கிக் கொண்டு, நீ சாப்பிடுமா. அம்மா இப்பத்தான் சாப்பிட்டேன்
என்று சமாளித்து குழந்தைக்கு எங்கே தெரிய போகிறது பாவம்.
வெளியே நடந்த இந்த தொப்புள் கொடி
உறவுகளின் உணர்வுகள் உள்ளே வகுப்பறையில் இருந்த யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
தனது குழந்தைக்கு கொடும் பசிக்கு
உணவளித்த அந்த தெய்வத்தை பார்க்க வேண்டி, எதையோ எடுக்க போவதை போல், வகுப்பறையின்
வாசலைத் தாண்டி சென்று கீழே கிடந்த ஒரு வேப்பங்குச்சியை எடுத்து பல் குத்துவது
போல் பாசாங்கு செய்து, ஆசிரியர் மோகனபாரதியைப் பார்த்து விட்டு விறு விறுவென்று
வீடு நோக்கி போய் விட்டார்.
அவரை அடிச்சிறாதீங்க என்று
அமுதவள்ளியின் தாயார் கத்தினாலும், அதற்குள் ஒன்றிரண்டு அடி அவர் மேல்
விழுந்துவிட்டது.
என்ன நடக்கிறது என்று யூகிக்க கூட
முடியாத நிலையில் ஆசிரியர் திகைக்க... மாரியம்மாள் ஜயோ இந்தத் தெய்வத்தையா அடிக்க
நான் வந்தேன். எனக்கு மன்னிப்பே கிடையாது. ஜயா என்னை மன்னிச்சிடுங்க என்று
ஆசிரியர் மோகனபாரதியின் காலில் விழுந்து எழுந்தார். குமாரின் அக்காள் அமுதவள்ளி
அப்போதுதான் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தாள். தனது ஆசிரியர் மோகனபாரதியின்
அருகில் நின்று கொண்டாள்.
கூட வந்தவர்கள் ஆசிரியரைத்
திட்டியதற்காக வெட்கித்துப் போனார்கள். காரணம் கூட வந்தவர்களுக்குத் தெரியாது.
ஆனால் மாரியம்மாளின் உணர்வுகளையும் ஆசிரியர் மோகனபாரதியின் சலனமில்லாத நிலையையும்
கண்டு மனம் மாறி ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.
தலைமை ஆசிரியர் ஏன் முழங்கால் போடச்
சொன்னீர்கள் என்று விபரம் கேட்டார் மோகனபாரதியிடம்.
அதற்குள் மாரியம்மாள் ஜயா இதற்கு மேல்
அந்த சாரிடம் எதுவும் கேட்காதீர்கள் சரியான காரணம் இல்லாமல் அவர் தண்டிக்க
மாட்டார்.
ஆனால் ஆசிரியர் மோகனபாரதி, இனி மேல்
இந்த மாணவர்கள் அந்தத் தப்ப செய்ய மாட்டார்கள். அதனால அத இத்தோட விட்டு விடுவோம்.
வகுப்புக்கு போகச் சொல்லுங்க.
அருகில் நின்ற மகேஷ்வரி தலைமை
ஆசிரியரை நோக்கி, சார் எனக்கு தெரியும். இந்த மூனு பேரும் சேர்ந்து டெய்லி
பிராந்தி காலிப் பாட்டிலைப் பொறுக்கி அதில இருக்கிற பிராந்திய சொட்டு சொட்டாக ஒரு
பாட்டல்ல நிறைச்சி குடிப்பாங்களே என்று முடிப்பதற்குள் ஆசிரியர் மோகனபாரதி
மகேஷ்வரி என்றார். உடனே மகேஷ்வரி நிறுத்திக் கொண்டாள். அமைதியாக அந்தக் கூட்டம்
கலைந்து போய் விட்டது.
கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக