இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
எந்தவொரு நாட்டின் அல்லது நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தக விருத்திக்கும் மிக முக்கியமான தேவை நல்ல போக்குவரத்து முறை.
நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரை வழியாக கொண்டு செல்ல இப்போது பல வகையான பொது போக்குவரத்து வழிகள் உண்டு.
தனிநபர் போக்குவரத்துக்கான வாகனங்களுள் முக்கியமான ஒன்று கார். அதனை பெருமளவில் பிரபலப்படுத்தி கற்காலம், பொற்காலம் என்பதுபோல் உலகுக்கு கார் காலத்தை அறிமுகம் செய்த கார் ஜாம்பவான் ஹென்றி ஃபோர்டு.
இவர்தான் அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி தனது பெயரிலேயே உன்னதமான கார்களை உலகுக்கு தந்த தொழில் பிரம்மா...!!
அப்பா பரிசாக வழங்கிய பாக்கெட் வாட்ச்-யை அக்குவேறு ஆணிவேராக பிரித்துப் போட்டு சேர்த்ததில் தொடங்கிய இவரின் இயந்திரக் காதல், தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
ஒரு காலத்தில் கார் என்றாலே ஃபோர்டு என்கிற நிலைமைதான் அமெரிக்காவில் இருந்தது. சரித்திரச் சாலையில் ஹென்றி ஃபோர்டு பதித்த அளவுக்கு, சாதனை தடங்களை வேறு யாராலும் பதித்திருக்க முடியாது.
ஹென்றி ஃபோர்டு சவால்களை மட்டுமே விரும்பியவர். செய்யும் தவறுகள் கூடப் பெரிய சாதனைகள் செய்வதற்கு அவசியத் தேவைகளாக இருக்கலாம் என்பது ஹென்றி ஃபோர்டின் வேதவாக்கு.
இவர் வெறும் கார் கம்பெனி முதலாளி இல்லை. ஒரு 'கார்"கால கதாநாயகன். ஹென்றி ஃபோர்டின் வாழ்க்கை, இவரது கண்டுபிடிப்பை போலவே வேகமும், விறுவிறுப்பும் நிரம்பியது.
ஹென்றி ஃபோர்டு 1863ஆம் ஆண்டு ஜுலை 30ஆம் தேதி, அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள கிரீன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் ஒரு பண்ணையில் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் ஃபோர்டு. இவரது தாயார் மேரி ஃபோர்டு. இவர்களின் பூர்வீகம் இங்கிலாந்து.
ஆறு பிள்ளைகளில் ஹென்றி ஃபோர்டே மூத்தவர். இவரின் உடன்பிறப்புகள்
ஜான் ஃபோர்டு
மார்க்ரெட் ஃபோர்டு
ஜேன் ஃபோர்டு
வில்லியம் ஃபோர்டு மற்றும்
ராபர்ட் ஃபோர்டு.
ஹென்றி ஃபோர்டு குடும்பத்திற்கென்று பெரிய பண்ணை ஒன்று இருந்தது. ஹென்றி ஃபோர்டு தனது இளமைக்காலத்தில் அவரது பண்ணையில் பல்வேறு வேலைகளைச் செய்தார்.
ஹென்றி ஃபோர்டின் இளம் பருவத்தில் அவரது தந்தை அவருக்கு சட்டைப்பையில் வைக்கக்கூடிய ஒரு கடிகாரம் கொடுத்தார். 15 வயதில், ஹென்றி ஃபோர்டு அதன் பாகங்களை தனித்தனியாக பிரிக்கவும் பின்பு மறுபடியும் ஒன்று சேர்க்கவும் என சுயமாக பழுதுபார்க்கும் முறையை கற்றுக்கொண்டார்.
இதன்மூலம் தனது நண்பர்கள், அண்டை வீட்டார் ஆகியோரின் கடிகாரங்களை பலமுறை பழுதுபார்த்து தந்திருக்கிறார். இதன்மூலம் கடிகாரம் பழுதுபார்க்கும் புகழைப் பெற்றார்.
1876ஆம் ஆண்டில் ஹென்றி ஃபோர்டின் தாயார் இறந்தார். அந்த நிகழ்வு ஃபோர்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது தந்தை, ஹென்றி ஃபோர்டு குடும்ப பண்ணையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஹென்றி ஃபோர்டு பண்ணை வேலைகளை வெறுத்தார். மேலும் அவர் 'நான் பண்ணையில் வேலை செய்வதை எப்போதும் விரும்பியதில்லை. ஆனால், அந்த பண்ணையை பார்த்துக்கொண்டிருந்த எனது அம்மாவை தான் நான் விரும்பினேன்" என்று கூறினார்.
அந்த சமயத்தில் நகரும் பாகங்களைக் கொண்ட பொருட்களின்மேல் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒருமுறை பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது நீராவியால் இயங்கிய ஒரு டிராக்டர் வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்வதை கவனித்தார். அந்த கணம்தான் போக்குவரத்து வரலாற்றை மாற்றப்போகும் கணமாக அமைந்தது. ஏனெனில் அப்போதே ஃபோர்டின் மனதில் பயணிகள் வாகனம் உதித்தது.
ஹென்றி ஃபோர்டின் தொழில் வாழ்க்கை :
1879ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் ஹென்றி ஃபோர்டு குடும்பத்தை விட்டு வெளியேறி டெட்ராய்ட் நகரில் ஒரு கனரக தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவர் மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற்றப் பிறகு மீண்டும் மிச்சிகன் திரும்பினார்.
அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த நீராவி இயந்திரங்களின்மீது இவருக்கு ஈர்ப்பு ஏற்படவே அந்த இயந்திரங்களை இயக்குவதிலும், அதனை கழற்றி பழுது பார்ப்பதிலும் நேரத்தை செலவிட்டார். அதேநேரம் பண்ணைகளில் பயன்படுத்தக்கூடிய எரிவாயுவில் இயங்கும் பல்வேறு இயந்திரங்களை உருவாக்கினார்.
திருமண வாழ்க்கை மற்றும் குடும்பம் :
ஹென்றி ஃபோர்டு 1888ஆம் ஆண்டு, கிளாரா ஜேன் பிரையண்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொழில் வாழ்க்கை :
ஃபோர்டுக்கு 30 வயதானபோது சிக்காக்கோவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கிய தண்ணீர் பம்ப் ஒன்றைக் கண்டார். அதை ஏன் ஒரு வண்டியில் பொருத்திப் பார்க்கக்கூடாது? என்ற சிந்தனை அவருக்கு தோன்றியது. 1891ல் ஹென்றி ஃபோர்டு, எடிசன் இலுமினேட்டிங் கம்பெனியில் ஒரு பொறியியலாளர் ஆனார். 1893ஆம் ஆண்டில் தலைமை பொறியாளர் பதவி உயர்வும், நூறு டாலர் சம்பள உயர்வும் வந்த பிறகு, இவர் பெட்ரோல் என்ஜின்கள் பற்றிய தனது சொந்த பரிசோதனையை கவனத்தில் எடுத்துக் கொண்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஹென்றி ஃபோர்டு, பெட்ரோலில் இயங்கும் ஒரு காரை உருவாக்க அயராது உழைத்தார். 1896ஆம் ஆண்டில் பல்வேறு உதிரிப் பாகங்களையும், பழைய உலோகங்களையும் கொண்டு தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் தனது வாகனத்தை வடிவமைத்தார்.
மணிக்கு 10 மைல், மணிக்கு 20 மைல் என்று இரண்டு வேகங்களை தரக்கூடிய இருவேறு வார்பட்டைகளை வடிவமைத்து பொருத்தினார். ஆனால், இந்த வாகனத்திற்கு பிரேக் கிடையாது. இதனை பின்னோக்கியும் செலுத்த முடியாது. இதற்கு ஹென்றி ஃபோர்டு, 'Quadricycle" என்று பெயரிட்டார். பார்ப்பதற்கு சைக்கிள் போன்று இருக்கும் ஆனால் நான்கு சக்கரங்களும் ஓர் இருக்கையும் கொண்டிருக்கும். ஆர்வமாக அதை ஓட்டிப்பார்க்கலாம் என்று முற்பட்டபோதுதான் கூடாரத்தின் கதவு சிறியதாக இருந்ததை ஹென்றி ஃபோர்ட் உணர்ந்தார்.
ஃபோர்டின் மோட்டார் நிறுவனம்..!!
ஹென்றி ஃபோர்டு, தன் கண்டுபிடிப்பை உடனே சோதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கோடாரியை எடுத்து செங்கல் கூடாரத்தை இடித்துவிட்டு அவர் வடிவமைத்த வாகனத்தை வெளியே கொண்டு வந்தார். இவரது வாகனம் சாலையில் வலம் வந்தது. ஹென்றி ஃபோர்டோ அகம் மகிழ்ந்து போனார்.
தொழில் உலகில் இது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. பல்வேறு சோதனை இயக்கங்களுக்கு பிறகு ஹென்றி ஃபோர்டு Quadricycle-லை மேம்படுத்துவதற்கான வழிகளை அறிமுகப்படுத்தினார்.
1896ஆம் ஆண்டில், எடிசன் நிர்வாகிகள் கூட்டத்தில் ஹென்றி ஃபோர்டு கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் தாமஸ் எடிசன் இவரை அறிமுகப்படுத்தினார். மேலும் எடிசன், ஃபோர்டு வாகன சோதனைக்கு ஒப்புதல் அளித்தார். எடிசன் அளித்த ஊக்கத்தால் ஹென்றி ஃபோர்டு 1898ஆம் ஆண்டில், இரண்டாவது வாகனத்தை வடிவமைத்தார்.
அதன்பின், எடிசன் கம்பெனியை விட்டு ஃபோர்டு பதவி விலகினார். 1899ஆம் ஆண்டில் டெட்ராய்ட் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இருப்பினும், இவருடைய நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள், ஹென்றி ஃபோர்டு எதிர்பார்த்ததை விட குறைந்த தரம் மற்றும் அதிக விலை கொண்டவையாக இருந்தது. இறுதியில், இந்த நிறுவனம் வெற்றிபெறாமல் ஜனவரி மாதத்தில் மூடப்பட்டது.
ஃபோர்டு மோட்டார் நிறுவனம் :
இதன் பிறகு ஹென்றி ஃபோர்டு, 1903ஆம் ஆண்டு மிச்சிகனில் 'Ford Motor Company" என்ற நிறுவனத்தை தொடங்கினார். இக்கம்பெனியில், ஃபோர்டு மற்றும் மால்கம்சன், டாட்ஜ் சகோதரர்கள், மால்கம்சனின் மாமா ஜான் எஸ்.கிரே, மால்கம்சனின் செயலாளர் ஜேம்ஸ் கோஜென்ஸ் மற்றும் மால்கம்சனின் வழக்கறிஞர்கள் இருவர் ஜான் டபிள்யூ.ஆண்டர்சன் மற்றும் ஹோரஸ் ராக்ஹாம் அடங்கிய குழு முதலீட்டாளர்களாக இருந்தனர்.
ஹென்றி ஃபோர்டின் Model T :
ஹென்றி ஃபோர்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட காரை சோதனை ஓட்டம் செய்து ஒரு புதிய சாதனை புரிந்தார். 39.4 வினாடிகளில் 1 மைல் (1.6 கி.மீ) தொலைவை ஓட்டிக் கடந்தார். ஒரு மணி நேரத்திற்கு 91.3 மைல்கள் (அதாவது ஒரு மணி நேரத்திற்கு 146.9 கிலோமீட்டர்) வேகத்தை எட்டி மேலும் ஒரு புதிய நில வேக சாதனையை படைத்தார்.
ஹென்றி ஃபோர்டின் இந்த சாதனைக்கு, பந்தய கார் ஓட்டுனர் பார்னி ஓல்டுஃபீல்டு, இந்த புதிய ஃபோர்டு மாடலை '999" என்று அழைத்தார். இதே காரில் பார்னி ஓல்டுஃபீல்டு, அமெரிக்கா முழுவதும் ஓட்டிச் சென்று ஃபோர்டு பிராண்டை பிரபலப்படுத்தினார்.
Model T :
ஒரு காலத்தில் கார்களின் தேவை நிச்சயம் அதிகரிக்கும் என்று நம்பிய ஹென்றி ஃபோர்டு கடுமையாக உழைத்து 1908ஆம் ஆண்டு Model T என்ற காரை உருவாக்கினார். செல்வந்தர்கள் மட்டுமல்ல, சாமானியர்களும்கூட காரை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ஹென்றி ஃபோர்டின் அடிப்படை விருப்பமாக இருந்தது. அதனால் காரின் விலையை மிகக் குறைவாக வைத்திருக்க தயாரிப்புச் செலவுகளை கவனமாக பார்த்துக்கொண்டார்.
Model T கார் ஓட்டுவதற்கு மிகவும் எளிதானது மற்றும் மலிவான விலையில் எளிதாக சரி செய்ய முடியும். இந்த கார் 1908ல் 825 டாலர் விலை கொண்டதாகவும், மிகவும் மலிவானதாகவும் இருந்தது. 1920-களில், பெரும்பாலான அமெரிக்க டிரைவர்கள் Model T காரை ஓட்ட கற்றுக்கொண்டனர்.
பத்திரிக்கைகளில் தனது புதிய தயாரிப்பு பற்றிய கதைகள் மற்றும் விளம்பரங்களை இடம்பெறுவதை உறுதி செய்த ஃபோர்டு ஒரு பெரிய கார் ஒன்றை விளம்பரத்திற்காக உருவாக்கினார்.
ஹென்றி ஃபோர்டின் புரட்சி !!
1913ல் ஹென்றி ஃபோர்டு தனது தொழிற்;சாலையில் நகரும் பாகங்களை பொருத்தும் பெல்ட்களை அறிமுகப்படுத்தினார். இது உற்பத்தியை மகத்தான அளவுக்கு அதிகரிக்கச் செய்ய உதவியது.
தற்போதைய நவீன கார்களின் முன்னோடியான Model T வாகனம் ஆயிரக்கணக்கில் விற்பனையாக தொடங்கியது. சில ஆண்டுகளிலேயே 15 மில்லியன் கார்களை விற்றது ஹென்றி ஃபோர்டு நிறுவனம். ஹென்றி ஃபோர்டின் தொலைநோக்குமிக்க தலைமையின்கீழ் அந்த நிறுவனம் அபார வளர்ச்சிகண்டு உலகின் மிகப்பெரிய செல்வம் கொழிக்கும் தொழிலதிபராக அவரை உயர்த்தியது.
ஹென்றி ஃபோர்டு செய்த புரட்சி :
ஹென்றி ஃபோர்டு புரட்சிகரமான செயலையும் செய்துள்ளார். ஊழியர்களின் நலனை பெரிதாக மதித்ததால் அவர் சம்பளங்களைக் கூட்டி, வேலை நேரத்தைக் குறைத்தார்.
அப்போது 9 மணிநேரம் வேலை, இரண்டு டாலர் 34 காசு சம்பளம். ஹென்றி ஃபோர்டு இதில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். இருந்த சம்பளத்தை இரட்டிப்பாக்கி ஒருநாளைக்கு குறைந்தபட்ச சம்பளம் 5 டாலர் என்று அறிவித்தார். மேலும் வேலை நேரத்தை 1 மணிநேரம் குறைத்து 8 மணிநேர வேலையாக்கினார்.
பல பொருளியல் நிபுணர்கள் அவரது அந்த நடவடிக்கையை எள்ளி நகையாடினர். ஆனால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்ததால் உற்பத்தித் திறன் பெருகி நிறுவனம் அபார வளர்ச்சி கண்டது.
வாழ்வில் செல்வம் கொழித்த அளவுக்கு அவரது மனதில் கருணையும் ஊற்றெடுத்தது. மேலும், பல்வேறு சமூகநல பணிகளுக்காக தன் சொத்தில் பெரும் பங்கை செலவழித்தார்.
ஃபோர்டு பவுண்டேஷன் !!
1936ஆம் ஆண்டு தனது மகன் எட்சல் ஃபோர்டின் தலைமையில் 'ஃபோர்ட் பவுண்டேஷன்" என்ற உன்னத அறநிறுவனத்தை தோற்றுவித்தார் ஹென்றி ஃபோர்டு. அந்த அறநிறுவனம் உலகம் போற்றும் பல உன்னத அறப்பணிகளை மேற்கொண்டது.
1943ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக மகன் எட்சல் ஃபோர்டு இறந்து போனதால் அறநிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஹென்றி ஃபோர்டு ஏற்றுக் கொண்டார். 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஹென்றி ஃபோர்டு தனது 84 வயதில் காலமானபோது 'ஃபோர்ட் பவுண்டேஷன்" எனப்படும் உலகின் மிகப்பெரிய அறநிறுவனத்தை விட்டுச் சென்றார்.
வாழ்வில் செல்வம் சேரும்போது சுயநலமும் சேர்ந்துகொள்வதை பலமுறை சந்தித்திருக்கிறது வரலாறு. ஆனால், போக்குவரத்து துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்து செல்வந்தரான ஃபோர்டு சமூக நலத்திற்காக தன் சொத்தை வாரி வழங்கியுள்ளார்.
ஹென்றி ஃபோர்டின் ஆய்வுகளும், சோதனைகளும், கடின உழைப்பும், வியர்வையும், தொலைநோக்கு பார்வையும்தான் வாகனத்துக்குப் பின்னால் இருக்கின்றன.
ஹென்றி ஃபோர்டின் பொன்மொழிகள் :
ஆர்வம்தான் எல்லா முன்னேற்றங்களின் ஆதாரம். அது இருந்தால் சாதனை, இல்லாவிட்டால் சாக்குப்போக்கு...
உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று, இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே.
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான்.
ஊழியர்களுக்கு அதிக சம்பளம், வாரம் ஐந்து நாள் வேலை, டீலர்களை மதித்து நடத்துதல், வேலை நேரத்தைக் குறைத்தது, புதுமையான விளம்பர உத்தி, கார் கடன் வழங்குதல் என அமெரிக்கத் தொழில்துறைக்கு ஹென்றி ஃபோர்டு பல விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தன் தொலைநோக்கு பார்வையால் உலகின் மிகப்பெரிய செல்வம் கொழிக்கும் தொழிலதிபராக ஹென்றி ஃபோர்டு உயர்ந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக