இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்றைய உலகில் கேலிச்சித்திரம், கார்ட்டூன்கள் பார்த்திராத குழந்தைகளே இல்லை என்று கூறலாம்.
இன்று கார்ட்டூன் சேனல்களில் வரும் சோட்டா பீம், டோரா, பென் 10, போக்கிமேன் போன்ற கதாபாத்திரங்களை இன்றைய குழந்தைகள் அனைவரும் அறிந்ததே.
இந்த கதாபாத்திரங்களுக்கு முன்னோடியாக இருந்த ஒரு முக்கியமான கதாபாத்திரம் எது என்று உங்களுக்கு தெரியுமா?
ஆரம்ப காலத்தில் அதிகமான குழந்தைகளையும், பெரியவர்களையும் கவலைகளை மறந்து சிரிக்க வைத்த ஒரு கதாபாத்திரம் அதுதான்.
உலகில் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று அனைவரும் சொல்வார்கள். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக்க வைத்தவர் அவர்.
ஆனால், உயிரற்ற ஒன்று சார்லி சாப்ளினுக்கு இணையாக உலகை சிரிக்க வைத்திருக்கிறது என்றால் அது நமக்கெல்லாம் வியப்பாகத்தான் இருக்கும். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு கேலிச்சித்திர உலகில் அடியெடுத்து வைத்து கற்பனை உலகை கொடிகட்டி பறக்க வைத்த அந்த கதாபாத்திரம் மிக்கி மவுஸ் .
இந்த எலிதான் அன்றைய காலக்கட்டத்தில் கற்பனை உலகில் அனைவரையும் சிரிக்க வைத்த மிக முக்கியமான கதாபாத்திரம். அந்த காலக்கட்டத்த்தில் இந்த எலியை பார்த்திராதவர்கள் என்பது அரிதான ஒன்றே. இந்த எலியினால் வயிறு வலிக்க சிரித்தவர்கள் ஏராளம்.
கார்ட்டூன் என்றாலே உடனே நமக்கு நினைவில் வருவது இரண்டு. ஒன்று டாம் அண்ட் ஜெர்ரி, மற்றொன்று மிக்கி மவுஸ். இதைக் கடக்காமல் நம் குழந்தைப் பருவம் முற்றுப்பெற்றிருக்க வாய்ப்பில்லை. பார்த்து மகிழும் தொலைக்காட்சி பொழுதுபோக்குகளில் ஆரம்பித்து, படுக்கையில் கட்டிப்பிடித்துத் தூங்கும் பொம்மை வரை உயிருள்ள பொருளாகவே வாழ்ந்து வந்தது மிக்கி மவுஸ்.
பெரியவர்களைகூட குழந்தைகளாக மாற்றி சிரிக்க வைத்த அந்த மந்திர கதாபாத்திரத்தை உலகுக்கு தந்தவர் வால்ட் டிஸ்னி .
வால்ட் டிஸ்னி 1901ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சிக்காகோவில் எலியாஸ் டிஸ்னிக்கும், புளோரா கோல் டிஸ்னிக்கும் நான்காவது மகனாகப் பிறந்தார். வால்ட் டிஸ்னியின் சகோதரர்கள் ஹெர்பர்ட், ரேமண்ட் மற்றும் ராய் ஆகியோர் ஆவர். இந்த தம்பதியர் டிசம்பர் 1903ஆம் ஆண்டு ரூத் என்ற ஐந்தாவது குழந்தையை பெற்றனர். வால்ட் டிஸ்னிக்கு சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், தீட்டுவதிலும் ஆர்வம் இருந்தது.
எலியாஸ் டிஸ்னி - புளோரா கோல் டிஸ்னி
வால்ட் டிஸ்னிக்கு நான்கு வயதாக இருந்தபோது அவர்களுடைய குடும்பம் மிசோரிக்கு சென்றது. ஏனெனில் அங்குதான் அவர்களுடைய மாமா நிலம் வாங்கி வசித்து வந்தார். அங்கு சென்ற வால்ட் டிஸ்னி படம் வரையும் திறனை வளர்த்தார். ஏழு வயதானபோதே அவர் ஓவியங்கள் வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்பனை செய்வார். இவர் முதன்முதலாக தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஓய்வு பெற்ற மருத்துவருக்கு ஒரு குதிரை படம் ஒன்றினை பணத்திற்காக வரைந்து கொடுத்தார்.
வால்ட் டிஸ்னி வண்ண பென்சில்கள் மற்றும் கிரயான்ஸை கொண்டு தன்னுடைய திறன்களை மேலும் வளர்த்துக் கொண்டார். 1909ஆம் ஆண்டில் இவரும், இவருடைய சகோதரி ரூத் இருவரும் மார்செலின் பார்க் பள்ளியில் பள்ளி படிப்பை துவங்கினர். 1911ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னியின் குடும்பம் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரத்திற்கு சென்றனர். பின்பு கிரென்டன் இலக்கண பள்ளியில், வால்ட்டர் ஃபெஃப்பியர் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. வால்ட் டிஸ்னி, தன்னுடைய வீட்டில் இருந்த நேரத்தை விட இவருடன் இருந்த நேரம் தான் அதிகம்.
பள்ளிப்பாடங்களை படிப்பதற்கு பதிலாக அவர் எப்போதுமே இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைந்துகொண்டிருப்பார். தந்தைக்கு அது பிடிக்கவில்லையென்றாலும், பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்குமாறு வால்ட் டிஸ்னிக்கு அவரின் தாயார் ஊக்கமூட்டினார்.
தி கன்சாஸ் சிட்டி ஸ்டார் மற்றும் கன்சாஸ் சிட்டி டைம்ஸிற்கான செய்தித்தாள் விநியோக அனுமதியை வால்ட் டிஸ்னியின் தந்தை எலியாஸ் வாங்கியிருந்தார். வால்ட் டிஸ்னி மற்றும் அவரது சகோதரர் ராய் தினமும் காலையில் 4:30 மணிக்கு எழுந்து கன்சாஸ் சிட்டி டைம்ஸ் செய்தித்தாள்களை பள்ளி செல்லும் முன்பாக விநியோகம் செய்வர். பின் பள்ளி முடிந்த பின் தி கன்சாஸ் சிட்டி ஸ்டார் செய்தித்தாள்களை விநியோகம் செய்வர்.
இதனால் பள்ளிப்பாடத்தில் மோசமான தரங்களையே பெற்றார் வால்ட் டிஸ்னி. ஆனாலும், தன்னுடைய தினசரி செய்தித்தாள்களை விற்பனை செய்வதை ஆறு வருடங்கள் தொடர்ந்து செய்தார். மேலும், சனிக்கிழமைதோறும் கேலிச்சித்திரம் வரைவதற்காக சிறப்பு வகுப்புகளுக்கும் சென்றார்.
வால்ட் டிஸ்னியின் தனித்திறமை..!!
வால்ட் டிஸ்னி ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத்திறமையை வளர்த்துக்கொண்டார். வால்ட் டிஸ்னி தனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்ளினைப்போல் பள்ளியில் நடித்துக்காட்டுவார். ஆசிரியர்கள் அவரை கதை சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள். அவர் கரும்பலகையில் ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை சொல்வார்.
1917-ல் டிஸ்னி குடும்பம் மீண்டும் சிக்காக்கோவுக்கு இடம்பெயர்ந்தது. சிக்காக்கோவின் மெக்கின்லி உயர்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் புகைப்படத்துறையில் படித்தார் வால்ட் டிஸ்னி. அவர் பள்ளி அளவில் செயல்படும் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். அதில் இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமான கேலிச்சித்திரங்களை வரைந்தார். தந்தைக்கு தெரியாமல் இரவு நேரங்களில் உள்ள ர் அரங்குகளில் நகைச்சுவை நாடகங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.
மெக்கின்லி பள்ளியில் சேர்ந்த வால்ட் டிஸ்னி, சிக்காக்கோ நுண்கலை அகாடமியில் இரவுநேரப் படிப்பில் சேர்ந்தார். பிற்காலத்தில் அவரது சாதனைப் பயணத்துக்கான படைப்பாற்றல் பயிற்சி அங்கே கிடைத்தது.
1918-ல், முதல் உலகப்போரின்போது ராணுவ வீரராகச் சேர்ந்து போரிட விரும்பிய வால்ட் டிஸ்னியால் அதில் சேர முடியவில்லை. எனினும், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராகச் சேர்க்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வால்ட் டிஸ்னி ஆம்புலன்ஸ் வெளிப்புறத்தில் அற்புதமான கார்ட்டூன் சித்திரத்தை வரைந்து வைத்திருந்ததால் அவரது ஆம்புலன்ஸ் மிகவும் பிரபலமாகியது.
செஞ்சிலுவைச் சங்கப் பணி முடிந்து ஊருக்குத் திரும்பிய வால்ட் டிஸ்னி, பலரின் சிபாரிசுகளைப் பிடித்து கன்சாஸ் பத்திரிகை ஒன்றில் கார்ட்டூன் உதவியாளராக பணியில் சேர்ந்தார். ஆனால், அவரது மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. அவருக்கு அரசியல் சமூக கோபம் போதிய அளவில் இல்லை என்றும், அதனால் பத்திரிக்கை கார்ட்டூனிஸ்ட் வேலைக்கு அவர் ஒத்துவரமாட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டு, வேலையில் இருந்து சில மாதங்களில் வெளியேற்றப்பட்டார்.
பின்னர், பேஸ்மன் ரூபின் ஆர்ட் ஸ்டுடியோவுக்கான எடுபிடி வேலைகள் செய்யும் பணி கிடைத்தது. அங்கேயும் கிறிஸ்துமஸ் சீசன் வியாபாரம் முடிந்தவுடன் துரத்திவிட்டர்கள். அந்த ஸ்டுடியோவில் வேலைபார்த்த ஐவர்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட் வால்ட் டிஸ்னியின் நண்பரானார். இருவரும் சேர்ந்து ஐவர்க்ஸ்-டிஸ்னி வரைகலை நிறுவனத்தை தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஒருசில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை.
முதல் நிறுவனம் :
1922ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னிக்கு 21 வயதானபோது Laugh-O-Grams என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் ராயுடன் சேர்ந்து தொடங்கினார். தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon Land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார். அது தோல்வியை தழுவியது. இதன்பின் நிறுவனம் மிக மோசமான நிலைமைக்குச் சென்றது.
ஆனால், அந்த முதல் தோல்வி வால்ட் டிஸ்னியை வருத்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் மனம் தளராத வால்ட் டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் இனிமேல் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று கூறினார்.
Micky Mouse:
அப்போது உலகிற்கு அறிமுகமான அந்த அதிசய எலிதான் “Micky Mouse". ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே Micky Mouse உலகப்புகழ் பெற்றது. ஹாலிவுட்டின் கவனம் வால்ட் டிஸ்னியின் பக்கம் திரும்பியது. மிக்கி மவுஸ்க்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார்.
அவர் அடுத்தடுத்து தயாரித்த Steamboat Willie,The Skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில், மிக்கி மவுஸ் அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர், குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர்.
1932ஆம் ஆண்டு டிஸ்னி உருவாக்கித்தந்த “Flowers and Trees" என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. Mickey Mouse என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் “Donald Duck" என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் தன்னை மறந்து சிரிப்பவர்கள் ஏராளம்.
1937ஆம் ஆண்டில் Snow White and the Seven Dwarfs என்ற முழுநீள கேலிச்சித்திரத்தை வழங்கினார் டிஸ்னி. அதற்கு அப்போது ஆன செலவு ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர். அவ்வளவு பொருட்செலவில் உருவான அந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது.
வால்ட் டிஸ்னியின் திருமணம் :
வால்ட் டிஸ்னி 1925ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி லில்லியன் மேரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு டயேன் மற்றும் ஷரோன் என்ற இரண்டு மகள்கள் பிறந்தனர்.
ஆஸ்கார் விருது :
வால்ட் டிஸ்னி நிறுவனம் திறமைசாலிகளின் பாசறை ஆயிற்று. ஓவியர்கள், எழுத்தாளர்கள், ஒலி, ஒளி நிபுணர்கள், இயக்குநர்கள் சங்கமித்தார்கள். 1935ஆம் ஆண்டு மிக்கி மவுஸை படைத்ததற்காக, வால்ட் டிஸ்னிக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அதுவரை கறுப்பு வெள்ளையில் கார்ட்டூன்கள் தயாரித்த வால்ட் டிஸ்னி, வண்ணக் கார்ட்டூன்களை திரையில் காட்ட ஆரம்பித்தார்.
இதனால் இலாபம் அதிகரித்தது. வால்ட் டிஸ்னி வாங்கியிருந்த அத்தனை கடன்களையும் அடைத்தார். தனது ஸ்டுடியோவையும் விரிவாக்கினார், புதுப்புதுத் தொழில்நுட்பக் கருவிகளை வாங்கினார், பல்துறைத் திறமைசாலிகளைப் பணியில் அமர்த்தினார்.
வால்ட் டிஸ்னி தொட்டதெல்லாம் துலங்கும் காலம் தொடங்கியது. Pinochhio,Fantasia,Dumbo,Bambi என அடுத்தடுத்து வந்த படங்களும் பெரும் வெற்றி கண்டன. 1950ல், கார்ட்டூன்களை விட்டு வெளியே வந்து நடிகர், நடிகைகளை வைத்து ட்ரெஷர் ஐலண்ட், ஸ்வேர்ட் அன்ட் தி ரோஸ், 20,000 லீக்ஸ் அண்டர் தி ஸீ என்னும் சினிமாப் படங்களையும், மிக்கி மவுஸ், Zorro போன்ற தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்தார்.
Disneyland
ஒரு நாள் வால்ட் டிஸ்னி தன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன்; பூங்காவுக்குச் சென்றார். குடை ராட்டினத்தில் மூவரும் ஏறி விளையாடினார்கள். ராட்டினம் மேலே ஏறி இறங்கும்போது சந்தோஷ கூச்சல் எழுப்பினார்கள். மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் அவர்கள் இருந்தார்கள். பூங்காவுக்கு வந்திருந்த மற்ற குடும்பங்களையும் வால்ட் டிஸ்னி கவனித்தார். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். ஒரு ராட்டினமே இத்தனை மகிழ்ச்சியை தரும்போது, பிரம்மாண்டப் பொழுதுபோக்கு உலகத்தை உருவாக்கினால் எப்படி இருக்கும்? என யோசித்தார்.
வால்ட் டிஸ்னி வீட்டுக்கு திரும்பி வந்ததும், அவரின் கற்பனை திறன் சிறகடித்துப் பறந்தது. கை அவரின் கற்பனையை ஓவியமாக வரைந்தது. திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய வால்ட் டிஸ்னி 1955ஆம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப் பிரம்மாண்டமான ‘Disneyland Park’ என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் Oakland நகரில் 160 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கினார்.
மாயாஜாலக் கதைகள், மிக்கி, மினி, டொனால்ட் டக் போன்ற படைப்புகள், அறிவியல் விசித்திரங்கள் எனக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வியந்து ரசிக்க வைக்கும் அற்புத உலகத்தை உருவாக்கினார்.
பலர் Disneyland பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே வீழ்ந்துப்போகும் என்று கூறினர். ஆனால், பூங்காவை பார்க்க வந்தவர்களோ அதனை பூலோக சொர்க்கம் என்று வர்ணித்தனர். மக்களின் மகத்தான வரவேற்பை கண்ட வால்ட் டிஸ்னிக்கு நடப்பது நிஜம்தானா? என்று ஆச்சரியப்பட வைத்தது. பல்வேறு நாடுகளிலிருந்து வந்து, வால்ட் டிஸ்னிலாண்டைக் கண்டு ரசித்து மெய்மறந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சத்தை தாண்டியது. முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உட்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்தனர். தற்போது ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை இந்த பூங்கா ஈர்க்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் இந்த பூங்கா.
வால்ட் டிஸ்னி சிறுவனாக இருந்த வயதில் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு பூங்கா இருந்தது. அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். வால்ட் டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால் ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்திருக்க வேண்டும்.
மிக்கி மவுஸ்
இன்று கேலிச்சித்திரம் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் மிக்கி மவுஸ். அந்த அதிசய கதாபாத்திரம் எப்படி உருவானது? என்று வால்ட் டிஸ்னியே ஒருமுறை கூறினார் அதைப்பற்றி காண்போம்.
'வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம்? என்று தெரியாமல், ஒரு பிடிப்பு இல்லாமல் எல்லாமே இழந்த நிலையில் ஒருமுறை Manhattonலிருந்து Hollywood-டிற்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எப்போதும் போலவே அப்போதும் நான் கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் ஓவிய நோட்டுப்புத்தகத்தில் நான் கிறுக்கிய கதாபாத்திரம்தான் மிக்கி மவுஸ்."
சாதனையாளர்கள் வித்தியாசமானவர்கள். எது கிடைத்தாலும் திருப்தி அடையமாட்டார்கள். எவரெஸ்ட் உச்சியை தொட்டாலும், வானத்து நிலவைக் கைகளில் ஏந்த ஏங்குவார்கள். வால்ட் டிஸ்னிலாண்டின் வெற்றி வால்ட் டிஸ்னியின் சாதனை வெறியைத் தணிக்கவில்லை, மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.
1964ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னிவேர்ல்டைவிட மிகப்பெரிய பொழுதுபோக்கு உலகம் உருவாக்க முடிவு செய்தார். புளோரிடா மாகாணத்தில் அமைக்கத் திட்டம் தீட்டினார். அங்கு 27,258 ஏக்கர், அதாவது 110 சதுர கிலோமீட்டர் நிலம் வாங்கினார். நெஞ்சம் நிறைந்த ஆசையோடு, டிஸ்னி திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தார். மரணம் யாரை தான் விட்டு வைத்தது. நோய்வாய்ப்பட்ட வால்ட் டிஸ்னி 1966ஆம் ஆண்டு தனது 65வது வயதில் மறைந்தார்.
உலகின் பல நாடுகளிலிருந்தும், டிஸ்னிலாண்டுக்கு சராசரியாக ஒரு நாளுக்கு சுமார் 60,000 பேர் வருகிறார்கள். இறப்பதற்கு முதல் நாள்கூட அவர் பல புதிய எண்ணங்களை நிறைவேற்ற திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததாக அவரது சகோதரர் ராய் கூறினார்.
மிக்கி போஸ்டர் ஏலம் :
மிக்கி மவுஸ் படத்தின் கலர் போஸ்டர் ஒன்றை அமெரிக்காவில் வசித்த ஒருவர் பாதுகாத்து வந்தார். அவர் மரணம் அடைந்த பின்பு அது ஏலத்திற்கு வந்து 1,01,575 அமெரிக்க டாலருக்கு விற்றது.
டிஸ்னிலேண்ட் சென்றால் மிக்கி மவுஸ் வேடமணிந்த மனிதர்களை நேரில் சந்திக்க இயலும். கிட்டத்தட்ட அமெரிக்காவின் அனைத்து அதிபர்களுமே மிக்கி மவுஸூடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியின் ரகசியம் :
மனிதனுக்கு எட்டாத உயரம் என்று எதுவுமே கிடையாது. அந்த உயரத்தை எட்டிப்பிடிக்க சில ரகசியங்களை தெரிந்திருக்க வேண்டும். அந்த ரகசியம் நான்கு C எழுத்துகளில் அடங்கியிருக்கிறது. Curiosity,Confidance, Courage,Constancy அதாவது ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு இந்த நான்கிலும் அதிமுக்கியமானது தன்னம்பிக்கைதான். நீங்கள் ஒன்றை நம்பினால் அதனை உள்ளப்பூர்வமாக எந்த கேள்விகளுக்கும் இடம் தராமல் நம்புங்கள். அதுதான் வெற்றியின் ரகசியம்.
வால்ட் டிஸ்னிக்கு வெற்றியைத் தந்த அந்த நான்கு ஊ மந்திரம் நிச்சயம் நமக்கும் பொருந்தும். வால்ட் டிஸ்னியைப்போல் ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு ஆகியவற்றுடன் விடாமுயற்சியோடு செயல்பட்டால் நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.
தனது வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமானதாக தோற்றமளிப்பது பற்றி வால்ட் டிஸ்னி குறிப்பிடுவது :
'நான் தொட்ட காரியமெல்லாம் வெற்றி பெறுவதாகவும், நான் எடுக்கும் முடிவுகள் அபூர்வமாகவே தோற்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நான் எடுத்த தவறான முடிவுகளால் பலமுறை படுதோல்வி அடைந்திருக்கிறேன். எனினும், நான் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டே இருப்பதால், தவறுகள் வெளியில் தெரியாதப்படி அதிலிருந்து வேகமாக மீண்டு வந்திருக்கிறேன். என்னைப்போல நீங்களும் அடுத்தடுத்த ஏராளமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் சராசரி வெற்றி அதிகமாகவே இருக்கும்".
ஆஸ்கார் விருதுகள் :
மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பல்வேறு படைப்புகள் 26 ஆஸ்கார் உள்பட பல்வேறு உலக விருதுகள் பெற்றுள்ளன. இதில் ஒரே ஆண்டில் 4 ஆஸ்கார் பெற்றது, இன்றளவும் முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 3 குலோபல் விருதுகளும், 7 எம்மி விருதுகளும், இவரது படைப்புகள் பெற்றுள்ளன. மிக அதிக முறை ஆஸ்கார் விருதுக்கான நியமனம் மற்றும் ஆஸ்கார் விருது வாங்கியது வால்ட் டிஸ்னி செய்த சாதனையாகும்.
சிறந்த சிறிய கதைக்கரு கேலிச்சித்திரத்திற்காக 12 விருதுகளும், மதிப்பியலான விருதுகள் 3 விருதுகளும், சிறந்த சிறிய கதைக்கரு இரு-சுருள்காக 5 விருதுகளும், சிறந்த விளக்கப்படத்திற்காக 4 விருதுகளும், இர்விங்.ஜி.தால்பேர்க் நினைவு விருது ஒன்றும், நேரடி நடிக்கும் பாத்திரங்களுக்காக ஒன்றும் என 26 விருதுகளை பெற்றுள்ளார். ஆஸ்கார் வரலாற்றிலேயே இவர் மட்டும்தான் இத்தனை விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
டிஸ்னியின் மறைவுக்கு பின்பும், கலை உலகில் அவர் செய்த சாதனைக்கான ஆஸ்கார் விருது அவரை தேடி வந்தது. இது அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு வைர கல்லாக அமைந்தது.
வால்ட் டிஸ்னி கடந்து வந்த பாதை... நம் வாழ்க்கைக்கும் பொருந்தும்!!
முதலில் நம் திறமையை கண்டுபிடிக்க வேண்டும். அத்திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நம் திறமையின் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து, முழுமூச்சுடன் செயல்பட வேண்டும்.
அதில் வெற்றி, தோல்வி எது வந்தாலும் அதை எதிர்கொள்ளும் திறனை கற்றுக்கொள்ள வேண்டும்.
திறமை இருந்தால் போதுமா? சாதிக்க வேண்டாமா? என்ற கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலகமே அறியும் அளவிற்கு தன் திறமையின் மூலம் சாதித்து காட்டியவர், வால்ட் டிஸ்னி என்றால் அது மிகையாகாது.
வால்ட் டிஸ்னியின் சிந்தனை வரிகள் :
'நீங்கள் கனவுகள் கண்டால் அதை விடாமல் துரத்துங்கள். ஒரே எலி, பெரிய கனவு... இவற்றால் உலகையே என்னால் முற்றுகையிட முடிந்தபோது உங்களால் முடியாதா?"
உங்களால் ஒன்றை கனவு காண முடியும் என்றால், உங்களால் அதை செய்யவும் முடியும்.
ஒரு செயலை ஆரம்பிப்பதற்கான சிறந்த வழி, பேச்சை நிறுத்திவிட்டு செயல்பாட்டை தொடங்குவதே.
துன்பத்தில் பூக்கும் பூக்களே அனைத்திலும் அரிதான மற்றும் மிகவும் அழகான ஒன்று.
தொழிலுக்காக ஒருபோதும் ஒருவர் அவரது குடும்பத்தை புறக்கணிக்கக்கூடாது.
நமது குழந்தைகளின் மனமே நம்முடைய மிகப்பெரிய தேசிய வளமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக