Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 செப்டம்பர், 2019

நான் யார்!

 Related image

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஐயா நல்லசாமி கௌம்புய்யா, நேரமாகுதில்ல. அம்மா வேண்டாம்மா. நான் படிக்க போகலம்மா. எட்டாம் வகுப்பு வரை படிச்சது போதும்மா. நான் என்ன படிச்சி என்ன செய்யப் போறேன். உங்க கூட செங்கமாலுக்குத்தான் வேலைக்கு வரப் போறேன். அதுக்கு நான் இப்பவே உங்க கூட வேலைக்கு வர்றேன்ம்மா.

ஐயா வேண்டாம்ய்யா, அந்த வேல மட்டும் வேண்டாம்ய்யா. நான் சொல்றத கேளுய்யா ராசா. நீ படிச்சி பெரிய பெரிய வேலைக்கு போகட்டாலும் பரவாயில்லைய்யா. இந்த செங்கமாலு வேல மட்டும் வேண்டாம்ய்யா.

உள்ளுர்ல எட்டாம் வகுப்பு வரை தான் இருக்கு. பக்கத்து ஊர்லதான் மேல்நிலைப்பள்ளி இருக்கு. அதுவும் ஜில்லாவில பேர் வாங்கின பள்ளி. அது ஒரு சமுதாய கமிட்டி பள்ளி என்கிறதால நல்ல கண்டிப்பு, படிப்பு. ஒழுக்கம் எல்லாம் சிறப்பாக இருக்கும்.

நல்லசாமி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமா கருப்பா இருப்பான். அதனால அவன் கூட படிக்கிற மற்ற மாணவர்களின் கேலி கூத்துக்கு அவன்தான் தீனி. நல்லசாமிக்கு பள்ளிக்கூடம் என்றாலே கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும்.

சரிம்மா நான் செங்கமாலு வேலைக்கு போகல, மசாலா கம்பெனிக்கும் பாக்கெட் போடுற வேலைக்குப் போகட்டுமா. நிறைய சம்பளம் கிடைக்கும். தங்கச்சிய படிக்க வச்சிறுவேன்.

நம்ம வீட்லயும் கறி புளின்னு நல்ல சோறு சமைக்கலாம். உங்களுக்கு இருமல் நோய்க்கு டானிக்கு வாங்கலாம். தீபாவளிக்கு தங்கச்சி கேட்ட புது பாவாட சட்டை வாங்கலாம்.

இருய்யா வாரேன்னு சொல்லி அடுப்படிக்கு போனவளுக்கு, ஓ….ன்னு வந்த அழுகைய அடக்கிட்டு, முந்தானை சீலையால் முகத்தை மூடி அழுதான். என்னையும், பிள்ளைகளையும் இப்படி தவிக்க விட்டுட்டு இடையிலே போய்ட்டியளே. நான் உடம்புல இவ்வளவு சீக்க வச்சிக்கிட்டு எப்படி இந்த ரெண்டு பிள்ளைகளையும் காப்பாத்தப் போறேன். வேலைக்குப் போகிற வயசா இவனுக்கு, அல்லது உடம்புல தான் தெம்பு இருக்கா.விம்மியது மனசு.

வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நல்லசாமியின் தங்கை சோலையம்மா, வீட்டுக்குள் மூலையில் கிடந்த புத்தகப் பையை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு, அம்மா நான் ஸ்கூலுக்குப் போறேன். இன்னைக்கு முதல் நாள் ஸ்கூல் நான் நாலப்புல இருந்து அஞ்சாப்புப் போறேன். புதுப் புத்தகம், புது நோட்டு எல்லாம் தருவாங்க, என்றவள் அம்மாவின் பதிலுக்குக் காத்திராமல் சிட்டாய்ப் பறந்தாள்.

அம்மா என்னம்மா பன்றீங்க சமையல்கட்ல. அந்த மசாலா கம்பெனியில வேலைக்கு சேத்து விடுங்கம்மா. தினமும் நூறு ரூபாய்க்கு பாக்கெட் போட்டுக் காட்டுறேன்.

ஐயா நல்லசாமி நீ இந்த சின்ன வயசில வேலைக்கெல்லாம் போக வேண்டாம்ய்யா. நீ டவுன் பள்ளிக்கூடத்தில ரெண்டு வருசம் மட்டும் படி. பத்தாம் வகுப்பு முடிச்ச உடனே நீ வேலைக்கு போகலாம்.

அம்மா உண்மையா சொல்றியா. நான் ரெண்டு வருசம் மட்டும் தான் படிப்பேன். பத்தாம் வகுப்பு முடிச்ச உடனே ஏதாவது வேலைக்குப் போவேன்.

சரிய்யா உன் மனசுக்கு எல்லாம் நல்லாயிருக்கும்.

பக்கத்து டவுனில் உள்ள சமுதாய கமிட்டி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்து விடப்பட்டான் நல்லசாமி. புதிய பள்ளி புதிய ஆசிரியர்கள், புதிய மாணவர்கள் எல்லாமே புதிதாக இருந்தது நல்லசாமிக்கு.

ஒன்பதாம் வகுப்பு 'அ" பிரிவில் இரண்டாவது வரிசையில் உள்ள டெஸ்க் பெஞ்சில் அமர்ந்தான். அதே பள்ளியில் படித்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர். பிற பள்ளிகளில் எட்டம் வகுப்பு முடித்து வந்தவர்களுக்கு புதிதாக இருந்தது.

நல்லசாமி ஒவ்வொரு மாணவ-மாணவியரையும் ஆழமாகப் பார்த்தான். தான் மற்ற மாணவர்களைப் பார்ப்பதை அவர்கள் கவனித்து விட்டால் ஏதவாது சொல்வார்களோ என்ற பயம் இருந்தது. இவன் பெஞ்சில ஓரமாக இருந்தான். மற்ற மூன்று பேர் அதே பெஞ்சில் இருந்தவர்கள் பேசி சிரித்து, அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இவனது பெயரைக் கூட அந்த மாணவர்கள் கேட்கவில்லை. எதிர்பார்த்தான் பெயரைக் கேட்பார்கள் என்று, கேட்டால் பெயரை எப்படிச் சொல்ல வேண்டும் என்று தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான். அவர்களுடைய பெயரை எப்படிக் கேட்க வேண்டும் என்றும் கற்பனையில் ஓடவிட்டுக் கொண்டிருந்தான். ஆனால் இவன் நினைத்த மாதிரி யாரும் கேட்கவில்லை.

பின் வரிசையில ஒரு மாணவன் மிகவும் குண்டாக, உயரமாக இருந்தான். அவன் பக்கத்தி;ல் தான் நின்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான். தலையனையும், போர்டு அழிக்கிற டஸ்டரும் நினைவில் வந்து சென்றது.

வகுப்பாசிரியர் சவரிமுத்து மாணவர் வருகைப் பதிவேட்டோடு வகுப்பறைக்குள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து குட்மார்னிங் சொன்னார்கள் தொடர்ந்து ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, நிறைய புதிய மாணவர்களும் இருக்கின்றீர்கள். அதனால் நீங்கள் முதலில் உங்கள.; பெயர், ஊர், எங்கு படித்தீர்கள் என்ற விபரம் சொல்லி உங்களை அறிமுகப்படுத்துங்கள் என்று கூறினார்.

ஒவ்வொரு மாணவனும் தன்னை அறிமுகம் செய்யும் போது நல்லசாமி கூர்ந்து கவனித்தான். அடுத்து நீ சொல்லப்பா. உன் பெயர் என்ன? என்றார் ஆசிரியர்.

சார் என் பெயர் நல்லசாமி சார். எங்க ஊர் மேல பாட்டம். நான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில படிச்சேன் சார் என்று சரியாக சொன்னாலும் சற்று திணறினான். ஏதோ ஒரு பெரிய காரியம் முடித்த மாதிரி ஒரு திருப்தி நல்லசாமிக்கு பக்கத்திலிருந்த மாணவன் மெதுவாக நல்லசாமியிடம் சொன்னான். உங்க ஊர் பேரே தப்பு மேல எப்படி பாட்டம் வரும், கீழே தான் பாட்டம் வரும் என்று நகைத்தான். நல்லசாமிக்கு புரியவில்லை.

அன்று கடைசி பீரியட் கேம்ஸ் பீரியட். விளையாட மைதானத்திற்கு வரிசையாக சென்றார்கள். கேம்ஸ் டீச்சர் நீங்கள் இரண்டு டீமாக பிரிந்து கபடி விளையாடுங்கள் என்று மாணவர்களைப் பார்த்து கூறிவிட்டு, மாணவிகளுக்கு விளையாட்டு சொல்லி கொடுக்க தனியாக அழைத்து சென்று விட்டார். அதனால் மாணவர்களுக்கு ஒரே குஷி.

இரண்டு டீம் லீடர்களும் விளையாட மாணவர்களைத் தேர்வு செய்தார்கள். நல்லசாமியும் விளையாட ஆசைப்பட்டு இரண்டு லீடர்கள் முன்பும் தன்னை மிகைப்படுத்திக் காட்டினான். ஆனாலும் இரண்டு லீடர்களும் அவனை தேர்வு செய்யவில்லை. அதனால் அவனுக்கு வருத்தமாக இருந்தது என்பதை அவன் முகத்தைப் பார்க்கும் எவருக்கும் தெரிந்துவிடும்.

விளையாட்டுக்குச் சேர்க்காமல் கழித்து விடபட்ட இருவரில் நல்லசாமியும், மாற்று திறனாளி சுந்தரும் போலியோ நோய் தாக்கியதால் நடக்க சற்று சிரமபட்டான். ஆனால், அவன் சொல் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவன். அதனால சுந்தர் தன் கையோடு செஸ்போடு கொண்டு வந்திருந்தான். சுந்தருடன் சொல் விளையாடுவதற்கு நல்லசாமியைத் தவிர வேறு ஆள் இல்லை. அதனால சுந்தர் நல்லசாமியை விளையாட வருமாறு அழைத்தான். நல்லசாமிக்கு விளையாட ஆசை. அவன் செஸ் அடிக்கடி விளையாடுகிறவன் இல்லை என்றாலும், அவனுக்கு எட்டாம் வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது இப்போது கைகொடுத்தது. எனக்கு செஸ் விளையாட கொஞ்சம் தெரியும். நீ சொல்லிக் கொடுத்தால் உன்னுடன் விளையாடுகிறேன் என்றான் நல்லசாமி.

சுந்தருக்கு மகிழ்ச்சி. செஸ் விளையாட ஒரு ஜோடி கிடைத்து விட்டானே. அதை விட நல்லசாமிக்கு மகிழ்ச்சி. தனக்கு செஸ் சரியாக விளையாடத் தெரியவிட்டாலும் தனக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்து போல் உள்ளம் மகிழ்ந்தான்.

சுந்தர் செஸ் விளையாட்டை நல்லசாமிக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே விளையாடினான். ஓரளவு விளையாட்டைப் புரிந்து கொண்டான் நல்லசாமி. ஒவ்வொரு கேமிலும் விரைவாக தோற்கடிக்கப்பட்டான் நல்லசாமி.

சுந்தர் தான் ஒன்றிய அளவில் செஸ் சேம்பியன். அதனால் அவனுக்கு பள்ளியில் நல்ல பெயர். அதனால் மாணவர்கள் அவனுடன் செஸ் விளையாட விரும்புவதில்லை. எப்போதாவது கேம்ஸ் டீச்சர் சுந்தருடன் விளையாடுவதுண்டு. பள்ளிகளுக்கிடையே செஸ் போட்டி என்றால் கேம்ஸ் டீச்சர் சிறப்பு கோச்சிங் கொடுப்பார். அதுமட்டுமல்ல லேப்டாப்பில் விளையாடித் தனது திறமையை நன்கு வளர்த்துக் கொண்டான் சுந்தர்.

நல்லசாமிக்கு செஸ் விளையாட ஆசை இல்லை என்றாலும், தன்னை மதித்து சுந்தர் விளையாட சேர்த்துக் கொண்டதால் செஸ் விளையாட்டின் மீது ஒரு மரியாதை வந்தது. குழு விளையாட்டில் கூட ஒருவரும் தன்னைச் சேர்க்காத போதும் சுந்தர் தன்னை விளையாட்டுக்குச் சேர்த்ததால் சுந்தர் மீது இனம் புரியாத ஒரு அன்பும் ஈர்ப்பும் நல்லசாமிக்கு வந்தது சுந்தர் மேல்.

அன்று மாலை நல்லசாமி வீட்டில் சுறுசுறுப்பாகவும், சந்தோஷமாகவும் இருந்ததைப் பார்த்து, அவன் அம்மாவுக்கு அவனைப் பார்க்க பார்க்க ஆனந்தம் மகிழ்ச்சி.

என்னய்யா சாமி, இன்னைக்கு ரொம்ப சந்தோசமாக இருக்க. அம்மாட்ட சொல்லேன் நானும் சந்தோசப்பட்டுக்கிறேன், என்றாள்.

அம்மா எங்க கிளாஸ்ல சுந்தர்ன்னு ஒருத்தன் இருக்கான்ம்மா. அவன் சூப்பரா செஸ் விளையாடுவாம்மா. எனக்கும் செஸ் விளையாட சொல்லிக் கொடுத்தாம்மா. நானும் இப்போ சூப்பரா செஸ் விளையாடுவேன்.

அம்மா... அம்மா... நான் ஒன்னு கேப்பேன், செய்வியா என்ன சாமி வேணும் கேளுய்யா என்றாள்.

அம்மா எனக்கு ஒரு செஸ் போடு வாங்கித் தாங்கம்மா. தங்கச்சியும் நானும் விளையாடுவோம்.

சரிய்யா இந்த வாரம் சம்பளம் வாங்கிட்டு வந்த காசு தர்றேன் என்று அம்மா சொல்லவும் சந்தோசம் தாங்க முடியல நல்லசாமிக்கு. மனசில சந்தோசம் குடிகொண்டால் தூக்கம் எப்படி வரும். படுத்தபடியே சுந்தர் கூட விளையாடிய ஞாபகம், தூக்கத்தை மறக்கச் செய்தது.

சுந்தர் எப்படி இவ்வளவு பிரமாதமா விளையாடுறான். அப்பப்பா அவனை ஜெயிக்க ஆளே இல்ல. இரவு வெகுநேரம் செஸ் விளையாட்டையும், சுந்தரையும் நினைத்துக் கொண்டே படுத்திருந்தவன் எப்போது தான் தூங்கினானோ. காலையில் எழுந்ததும் பள்ளிக்கூடம் போகும் ஆவல் அவனை சுறுசுறுப்பாகச் செயல்பட வைத்தது.

பள்ளிக்கூடம் போனதும் முதல் வேளையாக சுந்தரைத் தேடினான். சுந்தர் வராண்டாவிலே வருவதைப் பார்த்து ஆவலோடு எதிர் கொண்டு போய் ஹலோ சொன்னான். சுந்தரும் பதிலுக்கு ஹலோ சொல்லிவிட்டு கண்டுகொள்ளவில்லை போய்க் கொண்டிருந்தான். நல்லசாமிக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், சுந்தரைப் பின் தொடர்ந்து, சுந்;தர் நேற்று உன் கூட செஸ் விளையாடியது ரொம்ப நல்லா இருந்தது. இன்றைக்கும் செஸ் விளையாடுவோமா? என்றான்.

அட போப்பா உன் கூடல்லாம் செஸ் விளையாட எனக்கு இன்ட்ரஸ்ட்டே இல்ல. நல்லா விளையாடத் தெரிந்தவன் கிட்ட விளையாடினால் தான் நான் அடுத்த லெவலுக்கு போக முடியும். உன் கூட விளையாடி ஜெயிக்கிறதுக்கு எனக்கு இரண்டு நிமிடம் போதும். சுந்தர் சொன்னதைக் கேட்டதும் நல்லசாமிக்கு முகம் வாடியது இருந்தாலும் சுந்தர் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது.

அன்று கணித ஆசிரியர் கணக்கு நடத்தி முடிந்ததும் ஐந்து கணக்குகளை கரும்பலகையில் எழுதி போட்டார். இப்போது நீங்கள் இந்த ஜந்து கணக்குகளையும் செய்ய வேண்டும். தனித்தனியாக செய்வது கடினம். அதனால் நான்கு குழுவாகப் பிரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு குழுவிலும் ஜந்து பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றார்.

ஆசிரியர் சொன்னதைப் புரிந்து கொண்டு மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த நண்பர்களாகச் சேர்ந்து குழுக் குழுவாக அமர்ந்தார்கள். நல்லசாமியும் கணக்கு நோட்டைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு குழுவின்; பக்கத்தில் சென்றான். ஆனால் அவர்கள் இவனைச் சேர்க்கவில்லை. மெதுவாக அருகில் இருந்த மற்றொரு குழு பக்கத்தில் சென்றான். இவர்கள் தன்னைச் சேர்த்துக் கொள்வார்கள் என்ற ஆவலோடு. ஆனால் அவர்கள் இவனைக் கண்டுகொள்ளவே இல்லை.

கணித ஆசிரியர் தற்செயலாக பார்க்க, நல்லசாமியை யாரும் சேர்த்துக் கொள்ளாதது போல் தெரிந்தது. அதனால் யாருக்கும் தெரியாமல், நல்லச்சாமிக்கும் தெரியாமல் என்ன நடக்கிறது என்று கவனிக்கத் தொடங்கினார்.

நல்லசாமியின் டவுசரின் பின்னால் லேசாக கிழிந்திருந்த ஓட்டையை மறைப்பதற்கு மேல் சட்டையை ஒரு கையால் கீழே இழுத்து இழுத்து மறைக்க முயற்சி செய்தது அனிச்சைச் செயல். அவன் அவ்வாறு சட்டையை இழுத்துப் பிடித்துக் கொண்டே அமர்ந்திருந்த மற்றொரு குழு பக்கமாகச் சென்றான். என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பது போல் அவர்களைப் பார்த்தான் அந்தக் குழுவில் ஒரு மாணவன் எங்கள் குழுவில் ஆள் சரியா இருக்கு வேற குழுவில் போய் சேர்ந்துக்கோ என்று கூறிவிட்டு பார்வையை குழுப் பக்கமாகத் திருப்பிக்கொண்டான்.

மெதுவாக நகர்ந்து அடுத்த குழுப் பக்கம் செல்ல, அந்தக் குழுவில் சுந்தரும் அமர்ந்திருந்தான். சுந்தரைப் பார்த்து தோழமையோடு புன்னகைத்தான் நல்லசாமி. சுந்தர் அவனை பார்த்ததும் நீ எந்த குழுவிலயும் சேரவில்லையா? வா…. எங்க குழுவில சேர்ந்துக்கிறாயா? உட்கார் என்று சொல்லும் முன்பே உட்கார்ந்து கொண்டான் அவன் அருகில். எம்.பி.பி.எஸ் படிக்க மெடிக்கல் ஷீட் கிடைத்தது போல் ஒரு மகிழ்ச்சி நல்லசாமி முகத்தில் தெரிந்தது.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக