இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
'ஆவிகள்
கனவில் வருமா?' என்பது குறித்து ஆராயவேண்டுமானால் முதலில் ஆவிகள் குறித்து அறிந்துகொள்ள
வேண்டும். பொதுவாக, 'இறந்த மனிதர்களின் ஆத்மாவே (உயிர்) ஆவியாக அலையும்' என்பது
ஆவி சார்ந்த நம்பிக்கையுடைய மக்களின் அனுமானமாக இன்றளவும் உள்ளது. ஆனால் ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள்
4 பிரிவுகளில் ஆவிகளை வகைப்படுத்தியுள்ளனர். இது குறித்து 1951-ல்
ஜி.என்.எம்.டைரல் (G.N.M.Tyrrell) என்கிற
பிரபல ஆவி ஆராய்ச்சியாளர் எழுதிய ஒரு புத்தகம், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்
பட்டதோடு, அறிவுப்பூர்வமான ஒன்றாகவும் இன்றளவும் கருதப்படுகிறது(!).
ஜி.என்.எம்.டைரல்
|
டைரல் எழுதிய 'அப்பாரிஷன்ஸ்' [ஆவிகள்] என்கிற புத்தகம் |
அவை,
1.
உயிரோடு இருப்பவர்களின் ஆவி,
2.
ஆபத்து நேர ஆவிகள்,
3.
சராசரி ஆவிகள்,
4.
நீண்டகால ஆவிகள்.
1.)
உயிரோடு இருப்பவர்களின் ஆவி:
அதாவது, ஒருவர் உயிரோடு இருக்கும்போதே, அவரது ஆவி ('பிம்பம்'
என்றும் வைத்துக்கொள்ளலாம்), எங்கோ இருக்கும் இன்னொருவர் முன் தோன்றுவது. இதெப்படி
சாத்தியம் எனத் தோன்றலாம். ஆனால், இவ்வாறான சம்பவங்கள் நடந்ததற்கு ஆதாரங்கள்
உலகெங்கும் உள்ளன.
அவற்றில் முக்கியமான ஓர் உதாரண சம்பவம். 1993-ல்
லாஸ் ஏஞ்சல்ஸின் ஒதுக்குப்புறமான ஒரு நகரிலுள்ள ஒரு பழைய பங்களாவில், ஒரு
பெண்மணியின் ஆவி உலவுவதாகத் தகவல் வர, ஒரு ஆராய்ச்சிக்குழு அங்கு முகாமிட்டு
ஆராய்ந்தது. அங்கிருந்த பலரும் ஒரு ஆவி, அங்கிருந்த வராண்டாவிலும், மாடிப்
படிக்கட்டுகளிலும், படுக்கை அறையில் வளைய வந்ததையும், சில சமயங்களில்
அப்பங்களாவின் அருகிலிருந்த ஏரியின் மேற்பரப்பில் மிதந்து மறைந்ததையும் கண்டனர்.
அப்பங்களாவின் அருகில் வசித்த சிலரும்,
அவ்வாராய்ச்சியாளர்களுக்கு உதவுவதற்காக உடனிருந்தனர். அதிலிருந்த சில முதியவர்கள்,
அவ்வுருவம் பல ஆண்டுகளுக்கு முன் அங்கு வசித்த ஒரு பெண்மணியின் சாயலில் இருப்பதாக
அடித்துச் சொன்னார்கள். எனவே, ஆராய்ச்சியாளர்கள் அப்பெண்மணி குறித்து மேலும்
விசாரித்ததில், அதிர்ச்சிகரமான ஒரு உண்மை தெரிய வந்தது. அது, அப்பெண்மணி அப்போது
அப்பங்களாவிலிருந்து 500 மைல் தொலைவிலுள்ள ஒரு வீட்டில் உயிரோடு
இருந்தார்! ஆனால், நோய்வாய்ப்பட்டு, கோமா நிலையில்!
அப்பெண்மணியின் குடும்பம் குறித்து
விசாரித்தபோது, அவர்களது குடும்பம் வாழ்ந்து கேட்ட குடும்பம். அவர் பிறந்து
வளர்ந்த அந்த பங்களாவை விட்டு, குடும்பத்தோடு வெளியேற வேண்டிய சூழ்நிலை. இருப்பினும்
அவர் அவ்வீட்டின் மீது கொண்ட அன்பு, அவரது எண்ண அலைகளை அவரது ஆழ்மனம் அவரது ஆவியை
அவர் விரும்பிய பங்களாவில் உருவாக்கியிருக்கிறது. உண்மையில் அது சாத்தியமா?!
சாத்தியம் என்றே சொல்கின்றனர், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள். (அதன் விளக்கங்கள்
குறித்து பின்னர் காண்போம்.)
2.) ஆபத்து நேர
ஆவிகள்: (Crisis Apparitions)
நமக்கு பரிச்சயமான ஒருவர் இறக்கும் தருணத்திலோ, அல்லது
இறந்த உடனோ நம்முன் ஆவியாகத் தோன்றுவது. கடந்த பதிவில் கண்ட, திருமதி.ஸ்பியர்மேனின் (Mrs.Spearman) சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
3.) சராசரி ஆவிகள்:
பொதுவான நம்பிக்கையின் அடிப்படையிலான ஆவி. இறந்த
ஒருவரின் ஆவி. எப்போதாவது தோன்றுவது, நடமாடுவது போன்ற வகை.
4.)
நீண்டகால ஆவிகள்:
பாழடைந்த வீடுகள், பழைய
கோட்டைகள் போன்ற இடங்களில் பல ஆண்டுகளாக உலவும், வேறெங்கும் செல்லாத புராதான
பேய்கள். நமது நாட்டு மன்னர்களின் ஆன்மாக்கள் சில கோட்டைகளில் உலவுவதாகவும்
நம்பிக்கைகள் உண்டு. எகிப்திலுள்ள பிரமிடுகளிலும் அந்நாட்டு அரசர்கள் உலவுவதாக
அவர்களும் நம்புகின்றனர். ஹிட்லரின் (Hitler) ஆவி
இன்னும் ஜெர்மனியின் சில இடங்களில் உலவுவதாக உலகில் பெரும்பாலான ஆவி
நம்பிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மைக்கேல் ஜாக்சனும் (Michael Jackson) இந்த வரிசையில் புதுவரவாக(!) இணைந்துள்ளார். (ஐயா...
அப்டியே எங்க ஊருக்கும் வந்து ஒரு ஆட்டம் போடுங்க... நாங்களும் எவ்ளோ நாளைக்குதான்
இந்த மோகினிப் பிசாசுங்களோட ஒரே மாதிரியான பேயாட்டத்தையே பாக்குறது..!!!)
அவைகளைப் (அதாவது, ஆவிகளைப்)
பற்றிய விமர்சனங்கள் குறித்து அடுத்த பதிவில் காண்போம். இப்பதிவில், மேற்கண்ட சில
சம்பவங்களுக்கான காரணங்கள் என ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் கருத்துகளைப்
பற்றிக் காண்போம். அதற்குமுன், தற்கால ஆராய்ச்சியாளர்கள் ஆவிகளை நான்கு
பெரும்பிரிவுகளாகப் பிரித்ததுபோல், விவிலியப் (பைபிள்) பிரசித்தி பெற்ற மன்னர் சாலமன் ஆவிகளை
72 வகைகளாகப் பிரித்துள்ளார். தனது "லெஸ்ஸர்
கீ ஆஃப் சாலமன்" (Lesser Key of Solomon)
என்கிற புத்தகத்தில் அது பற்றி விவரிக்கிறார்.
மன்னர் சாலமன் சாமான்யமானவர்
அல்ல. அவரது பெயரை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நமது வருங்கால பதிவு
ஒன்றில் ஏற்படப்போகும் மாபெரும் திருப்பத்தின் மிகமுக்கிய காரணகர்த்தாக்களில்
இவரும் அதிமுக்கியமானவர்.
மன்னர் சாலமன் |
விவிலியத்தில் மன்னர் சாலமன் குறித்து |
'லெஸ்ஸர் கீ ஆஃப் சாலமன்' புத்தகம்
|
அதெல்லாம்
இருக்கட்டும். இப்படி பேய்களைப் பற்றிப் பக்கம் பக்கமாகக் கதை சொல்வது காலம்
காலமாக இருந்து வருகிறது. தற்காலத்தில் விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சிகள் ஏதேனும்
ஆவிகள் குறித்த சாத்தியக்கூறுகளுக்கு வித்திட்டனவா? என்கிற உங்களின் கேள்விக்கு,
ஒரு சர்வதேச கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியையே பதிலாக வைக்கிறேன். (அதற்கு முன் வாசகர்களின் நலம் கருதி ஒரு
முன்னெச்சரிக்கை அறிவிப்பு. நீங்கள் இதயம் பலவீனமானவராக இருந்தாலோ, பயந்த
சுபாவமுடையவராக இருந்தாலோ, இதற்குப் பின் வரும் தகவல்களை, இரவிலோ அல்லது தனியாக
இருக்கும்போதோ படிக்காமல் இருக்க அறிவுறுத்துகிறேன். இது மிரட்டல் அல்ல, உங்கள்
நலன் சார்ந்த அக்கறை மட்டுமே. (நீங்கள் தற்போது வாசிக்கும் இவ்வரியை நான்
தட்டச்சு செய்யும்போது, இரவு 11 மணி 40 நிமிடம்.)
"நீங்கள் விழிப்போடு தனியாக இருக்கும்போது,
என்றைக்காவது, எங்கேயாவது, யாரேனும் அல்லது ஏதேனும் உங்களைத் தொடுவது போலவோ, அருகில்
நடமாடுவது போலவோ, உங்களிடம் மட்டும் யாரோ பேசுவது போலவோ உணர்ந்திருக்கிறீர்களா?
வேறு காரணங்கள் எதுவுமில்லாமல் (External
Cause) அது தானாகவே நிகழ்ந்ததுபோல அந்த 'அனுபவம்' இருக்க வேண்டும். அவசரப்படாமல்
நன்றாக யோசியுங்கள்!"
இப்படி ஒரு கேள்வியை, லண்டனில்
உள்ள, பரவலான மனோதத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இயக்கமான SPR (Society for Psychical Research), (1882-லேயே)
17,000 நபர்களுக்கு அனுப்பி, ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 15,316 நபர்கள்
பதிலனுப்பியிருந்தனர். அதில் 10 சதவிகிதத்தினர் "ஆமாம்" என
பதிலளித்திருந்தனர். (வாசகர்களும் இதை உங்கள் முன் வைக்கப்பட்ட கேள்வியாக
எண்ணி, இப்பதிவின் கீழ் பதிலளித்தாலும் மகிழ்ச்சிதான்!) "அட
போப்பா... அதான் 90 சதவீதம் பேரு இல்ல-னு சொல்லிட்டாங்கல்ல... அப்புறம்
என்ன..?!" என நீங்கள் கேட்கலாம். கேட்கப்பட்ட கேள்வி சாதாரணமான
சம்பவத்தைப் பற்றியது அல்ல; அசாதாரணமான நிகழ்வு பற்றியது என்பதை நினைவில் கொள்க.
மேலும், இத்தகைய ஒன்று அனைவருக்கும் நடந்தால் அது சுவாரஸ்யமானதாகவோ அல்லது
அசாதாரணமானதாகவோ இருக்காது என்பதையும் கருத்தில் கொள்க. அத்துடன் இத்தகைய
அரிதானதோர் அனுபவத்தைப் பற்றிய கேள்விக்கு சாதகமாகக் கிடைத்துள்ள 10 சதவிகித
வாக்குகள் உண்மையில் குறைந்த எண்ணிக்கை அல்ல! இன்னொரு முக்கியமான விஷயம், அவ்வாறு
"ஆமாம்" என பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்! ஆவிகளிடம்
பேசக்கூடியவர்களாக நம்பப்படும் மீடியம்-களில்
(Medium) ஆண்களை விட பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ("இனம்
இனத்தைச் சேரும்"-னு நீங்க நினைக்குறது எனக்குப் புரியுது... நீங்கபாட்டுக்கு
நினைச்சுட்டு போய்டுவீங்க... இப்போ இத நானே இட்டுகட்டி எழுதின மாதிரி-ல
நினைப்பாங்க!!!)
அப்படியானால், ஆவிகள் உண்மையா?
பேய் இருக்கிறதா? (கதை மட்டும் கேக்கணும்...நோ க்ராஸ் கொஸ்டின்ஸ்..!) ஒரு
மனிதன் உயிரோடு இருக்கும்போதே ஆவியாக முடியுமா? போன்ற பல தலைசுற்றும் கேள்விகளோடு
காத்திருங்கள், அடுத்த வாரம் வரை. (இதைப் படிக்கிற ஆர்வத்துல உங்க பின்னாடி நிக்கிற
உருவத்த கண்டுக்காம இருந்திடாதீங்க..! அவசரப்பட்டு திரும்பிடாதீங்க, அது
மறைஞ்சிடும்...!!!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக