ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள்
இருந்தார்கள். அந்த நான்கு பேர்களும் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்
கொள்வார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை என்பதே கிடையாது. இதைப்பார்த்த பெரியவர்
மிகவும் வருத்தமடைந்தார்.
அதனால் தன் நான்கு மகன்களையும்
பெரியவர் அழைத்து அறிவுரை கூறினார். நீங்கள் நான்கு பேரும் எப்பவும் ஒற்றுமையாக
இருக்க வேண்டும். உங்களுக்குள்ளே எந்த சண்டையும் வரக்கூடாது. அப்பதான் நீங்க
சந்தோஷமா வாழமுடியும் என்று அறிவுறுத்தினார்.
ஆனால், இதை நான்கு மகன்களும் ஏற்றுக்
கொள்ளவில்லை. வழக்கம் போல சண்டைபோட்டுக் கொண்டே இருந்தார்கள். ஒரு சமயம்
பெரியவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அவர் தன்னுடைய மகன்களுக்கு
ஒற்றுமையின் சக்தியை புரிய வைக்க விரும்பினார்.
அதற்காக தன்னுடைய மகன்களைக் அழைத்து,
நீங்கள் நான்கு பேரும் ஆளுக்கு ஒரு கொம்பைக் கொண்டு வாருங்கள் என்றார். நான்கு
மகன்களும் ஆளுக்கு ஒரு கொம்பைக் கொண்டு வந்தார்கள். பெரியவர் முதல் மகனை அழைத்து
அந்த நான்கு கொம்புகளையும் ஒன்றாய் வைத்து ஒரு கயிற்றால் கட்டச்சொன்னார்.
முதல் மகனும் அவ்வாறே செய்தான். இப்ப
நீ இதை உடைத்துவிடு, பார்க்கலாம் என்று பெரியவர் கூறினார். முதல் மகன் ஒன்றாய்
வைத்து கட்டப்பட்ட அந்த கொம்புகளை உடைக்க முயற்சி செய்தான். அவனால் உடைக்க
முடியவில்லை.
இப்போது பெரியவர் அடுத்த மகனை உடைக்கச்
சொன்னார். அவனாலும் அதை உடைக்க முடியவில்லை. மற்ற இரண்டு மகன்களாலும் அதை உடைக்க
முடியவில்லை.
இப்போது பெரியவர் அந்தக் கயிற்றை
அவிழ்க்கச் சொல்லி கொம்புகளை தனித்தனியே நால்வரையும் எடுத்துக் கொள்ள சொன்னார்.
நான்கு மகன்களும் அவ்வாறே செய்தனர்.
முதல் மகனை நோக்கி அவன் கையிலிருந்த
கொம்பை உடைக்கச் சொன்னார். அவன் அந்த கொம்பை சுலபமாக உடைத்து விட்டான்.
அடுத்தடுத்து மூவரும் தங்கள் கையிலிருந்த கொம்பை சுலபமாக உடைத்து விட்டனர்.
ஒற்றுமையோட பலம் என்னன்னு உங்களுக்கு
இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீங்கள் நான்கு பேரும் நான்கு கொம்புகளைப்
போலத்தான். நீங்கள் நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் யாராலும் உங்களை
ஜெயிக்க முடியாது.
சண்டைப்போட்டு கொண்டு தனியாக இருந்தால்
உங்களை யார் வேண்டுமானாலும் சுலபமாக ஜெயித்துவிடலாம் என்று பெரியவர் கூறினார்.
நான்கு மகன்களும் இப்போது ஒற்றுமையின்
பலத்தை புரிந்து கொண்டனர். அன்றிலிருந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாமல்
ஒற்றுமையாய் வாழத் தொடங்கினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக