தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு வந்து வழிபடுகின்றனர். தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர். இன்றும் நோய் தீர்க்கும் தலமாக அமைந்து உள்ளது. உயிர்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் பொருட்டு, தையல் நாயகியாய்த் தைல பாத்திரமும், சஞ்சீவியும் வில்வ மரத்தடி மண்ணும் கொண்டுவர இறைவன் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளிய தலம்.
மூலவர் : வைத்தியநாதர்.
தாயார் : தையல்நாயகி.
தல விருட்சம் : வேம்பு.
தீர்த்தம் : சித்தாமிர்தம்.
ஆகமம் : காமிக ஆகமம்.
ஊர் : வைத்தீஸ்வரன் கோயில்.
மாவட்டம் : நாகப்பட்டினம்.
தல வரலாறு :
வைத்தீஸ்வரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.
இக்கோவிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.
ஒன்பது கிரகங்களுள் ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதன் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணி தீர்த்தார்.
திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணி நீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணி நீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.
தலச்சிறப்பு :
செல்வ முத்துக்குமார சுவாமி மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் ஆவார். கார்த்திகை தோறும் இவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. சந்தனக் குழம்பு, மண் உருண்டை, சித்தாமிர்தம் ஆகியன நோய் தீர்க்கவல்லன.
நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.
சடாயு என்னும் புள் (பறவை), இருக்கு வேதம் (ரிக்குவேதம்), முருகவேல், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேள%2Bர் எனவும் திருபுள்ளிருக்குவேள%2Bர் என தனிச் சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார்.
பிராத்தனை :
செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.
மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள். செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக