சுமார் 50 பேர் ஒரு செமினாரில் கலந்துக்கொள்ள சென்றிருந்தனர். அங்கு சிறப்புரையாற்ற பேச்சாளர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பலர் தங்கள் கவலைகளையும், பிரச்சனைகளையும், சோகங்களையும் பகிர்ந்துக்கொண்டனர். அவர்களது தேவை என்ன? மற்றும் அவர்களின் குறை என்ன? என்பதை பேச்சாளர் தெளிவாக புரிந்துக்கொண்டார்.
அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த தொடங்கினார். பேசிக்கொண்டிருந்தவர் இடையில் திடீரென்று எல்லோருக்கும் தலா ஒரு பலூனை கொடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு பலூனிலும் அவரவர் பெயரை எழுதச் சொன்னார். பெயர்கள் எழுதிய பின், அனைத்து பலூன்களும் சேகரிக்கப்பட்டு அருகேயிருந்த வேறு ஒரு பெரிய அறையில் விடப்பட்டன.
இப்போது அனைவரும் அந்த அறைக்கு சென்று 5 நிமிடங்களுக்குள் அவரவர் பெயரை எழுதிய பலூனை எடுத்து வாருங்கள் பார்க்கலாம்.! என்றார். ஐந்தே நிமிடங்களுக்குள் தங்கள் பலூனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு, இடித்துக்கொண்டு, திக்கித் திணறி பலூன்களுக்கு இடையே தங்கள் பலூனை தேடினர். ஐந்து நிமிடங்கள் கடந்தது தான் மிச்சம். ஒருவரால் கூட தங்கள் பெயர் எழுதிய பலூனை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்போது யார் வேண்டுமானாலும் எந்த பலூனை வேண்டுமானாலும் எடுங்கள். அந்த பலூனை எடுத்து அந்த பெயர் எழுதியவரிடம் அதை கொடுங்கள் என்றார். இந்த முறை ஐந்து நிமிடங்களுக்குள் அனைவரின் கைகளிலும் அவரவர் பெயர் எழுதிய பலூன் இருந்தது.
இப்போது அந்த பேச்சாளர் நமது வாழ்க்கையில் நடப்பதும் இது தான். மகிழ்ச்சி உண்மையில் எங்கிருக்கிறது என்று தெரியாமல் அர்த்தமற்ற முறையில் அதை தேடுகிறோம். நமது மகிழ்ச்சி மற்றவர்களின் மகிழ்ச்சியில் இருக்கிறது. மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பாருங்கள். உங்கள் சந்தோஷம் தானாகவே உங்களிடம் தேடி வரும்! என்று கூறினார்.
உங்கள் துன்பமே பெரியதென்று நீங்கள் வாழ்ந்து வந்தால் எந்தக் காலத்திலும் இன்பத்தை உணரமுடியாது. நம்மை விட துன்பப்படுகிறவர்கள் இந்த உலகில் எப்போதும் உண்டு என்பதை எந்நாளும் நாம் மறக்கக்கூடாது.
நமது அன்பையும், கருணையையும் பரிவையும் எதிர்பார்த்து எத்தனையோ உன்னதமான விஷயங்கள் இந்த உலகில் காத்திருக்கின்றன. அவற்றின் மீது நம் கவனத்தை திருப்பினால் நமக்கு உள்ள துன்பம் தானே தீரும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக