Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 டிசம்பர், 2019

சமையல் சிலிண்டரை மக்கள் பயன்படுத்துகிறார்களா?

மையல் எரிவாயு சிலிண்டர்களை மீண்டும் நிரப்பும் மக்களின் அளவு குறைந்து வருவதாக அரசு தரப்பு ஆய்வு வாயிலாகத் தெரியவந்துள்ளது.

 இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழைப் பெண்களுக்குச் சுகாதாரமான சமையல் எரிவாயுவை இலவசமாக வழங்கும் நோக்கத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சமையல் சிலிண்டர் பெற்று அவற்றைத் தரகர்களிடம் விற்பனை செய்துவிட்டு விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் மக்களும் இருக்கின்றனர். எனவே சமையல் சிலிண்டர் இணைப்பு பெறுபவர்கள் மீண்டும் அவற்றை நிரப்புகிறார்களா என்பதை அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அதற்கான சலுகைகளும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெரும்பாலான மக்கள் மீண்டும் நிரப்புவதில்லை என்று இந்திய செலவுக் கட்டுப்பாட்டாளார் மற்றும் பொதுத் தணிக்கையாளர் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் 3.21 கோடி சிலிண்டர் இணைப்புகள் மட்டுமே மீண்டும் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது 1.93 கோடி பயனாளர்கள் ஒரு ஆண்டில் 3.66 கோடி சிலிண்டர்களை மீண்டும் நிரப்பியுள்ளனர். ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் குறைவான அளவிலேயே மக்கள் மீண்டும் நிரப்புகின்றனர்.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களில் 80 சதவீதத்துக்கும் குறைவான வாடிக்கையாளர்களே மீண்டும் சமையல் எரிவாயு நிரப்பியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சிலிண்டர் விநியோகத்தை எளிதாக்க 9,000க்கு மேற்பட்ட விநியோகர்களை அரசு நியமித்துள்ள போதும் சிலிண்டர் விநியோகம் மந்தமாகவே இருக்கிறது. அதோடு, சமையல் சிலிண்டர்களை 1.98 லட்சம் பயனாளர்கள் வர்த்தகப் பயன்பாட்டுக்கு உபயோகிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களுக்குப் பதிலாக 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அரசு தரப்பில் வழங்கப்பட்டாலும் இதுபோன்ற பிரச்சினைகள் நீடிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக