ஐராவதேஸ்வரர் திருக்கோவில் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் 1800 வருடம் பழமையான திருகோவில் ஆகும். இரட்டை சன்னிதியில் இரண்டு மூலவராக சிவ பெருமான் சுயம்பு லிங்க பெருமான் யானை முகத்தோடு எங்கும் காண முடியாத அதிசய வடிவில் இங்கு அருள்பாலித்து வருகிறார்.
மூலவர் : ஐராவதேஸ்வரர், அழகேஸ்வரர்.
அம்மன் : காமாட்சி, அகிலாண்டேஸ்வரி.
தீர்த்தம் : எமதீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
பழமை : 500 வருடங்களுக்கு முன்.
ஊர் : அத்திமுகம்.
மாவட்டம் : கிருஷ்ணகிரி.
தல வரலாறு :
விருத்தாசூரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். இதனால் வருத்தமுற்ற தேவர்கள், தேவர்களின் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட இந்திரன் தனது ஆஸ்தான வாகனமான ஐராவதத்துடன் சென்று விருத்தாசூரனுடன் போரிட்டு அவனை அழித்தான்.
இந்திரன் விருத்தாசுரனை கொன்று அழிக்க அவருக்கும் அவரது யானை ஐராவத்திற்கும் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது.
பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகஸ்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டுமென அசரீரி கூறியது. இதையடுத்து இந்திரனும் ஐராவதமும் அகஸ்திய நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனர். ஐராவதத்தின் பக்தியை மெச்சி, சுவாமி சுயம்புவில் யானை முகத்தை பொரித்ததோடு லிங்கத்திற்கு ஐராவதேஸ்வர் என்று பெயரும் இட்டார்.
ஹஸ்தி என்றால் யானை. யானை இங்கு வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு 'ஹஸ்திமுகம்" என பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் மருவி 'அத்திமுகம்" என அழைக்கப்படுகிறது.
தல சிறப்பு :
ஒரே கோவிலில் இரண்டு மூலவர்கள் உள்ளனர்.
சூரிய பூஜைக்காக நந்தி விலகியிருக்கும் தலம் இது. மிக பெரிய பஞ்ச லிங்க சன்னிதி.
சுயம்பு லிங்கம் யானை முகத்தோடு விளங்குகிறார், அதே கருவறையில் அம்மையும் வீற்றிருக்கின்றார்.
கோட்டை கோவில், நவ கிரஹங்கள் யோக நிலையில் அமைதியாய் வீற்றிருப்பது அதிசயம்.
ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது.
காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர் ஒரு மூலஸ்தானத்திலும், அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரர் தனி மூலஸ்தானத்திலும் அருள்பாலிக்கிறார்கள்.
தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகி பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையை தெரிந்து கொள்ளலாம்.
பிராத்தனை :
சுகமான வாழ்க்கை வேண்டுவோர் இந்திரன் வழிபட்ட தலங்களில் வழிபாடு செய்வர், அந்த வகையில் இந்திரன் வழிபட்ட லிங்கம், அதுவும் தோஷங்களில் தலையாய பிரம்மஹத்தி தோஷம் நீக்க பெற்ற ஸ்தலம்.
சுவாமி காமாட்சி அம்மையுடன் தம்பதி சமேதராக சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவதால் களத்திர தோஷம், திருமண தடை, கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறைவு போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக