தன்னம்பிக்கை நூல்களுக்கு என்றுமே
பஞ்சம் இருந்ததில்லை. ஏராளமான நூல்கள் வாசகர்களின் தன்னம்பிக்கையைத் தட்டி
எழுப்பும் பணியைச் செய்திருக்கின்றன, செய்து வருகின்றன. அவற்றில் விமர்சகர்களின்
பார்வையிலும், வாசகர்களின் பார்வையிலும், விற்பனையின் எண்ணிக்கையிலும் சர்வதேச
கவனத்தை ஈர்த்த நூல்கள் ஏராளம். அவற்றிலிருந்து முக்கியமான பத்து நூல்கள் இந்த
வாரம்.
1.The 7 Habits of Highly Effective People
தன்னம்பிக்கை நூல்களின் பட்டியலில் தவறாமல் இடம்பிடிக்கக்
கூடிய நூல் இது. 1989ம் ஆண்டு வெளியான இந்த நூல் இந்த குறுகிய கால இடைவெளியிலேயே
இரண்டரை கோடி பிரதிகள் எனுமளவில் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. சர்வதேச
அளவில் மிகவும் பிரபலமான, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் இது. இதன்
பரபரப்பைப் பார்த்து ஆடியோ புக்காகவும் இதை வெளியிட்டார்கள். புனை கதையல்லாத ஒரு
நூலுக்கு ஆடியோ வடிவம் வெளியிட்டது இது தான் முதன் முறை.
பணியில் இருப்பவர்கள், நிறுவனங்களில் இருப்பவர்கள், தொழில்
நடத்துபவர்கள் போன்றவர்களுக்கு பிரமாதமான வழிகாட்டி. எப்போதும் வருமுன்
காப்பவர்களாக இருக்க வேண்டும், இலக்கை மனதில் கொண்டே ஒரு செயலைத் துவங்க வேண்டும்,
முதலில் தொடங்க வேண்டியதை முதலில் தொடங்கவேண்டும், இருதரப்புக்கும் வெற்றி என்பதை
யோசிக்க வேண்டும், புரிந்து கொள்ளுதல் வேண்டும், குழுவாகப் பணிசெய்தல் வேண்டும்
எனும் ஏழு விஷயங்கள் மிக விரிவாக, புதுமையாக இந்த நூலில் அலசப்பட்டிருக்கிறது.
2. Chicken Soup For the Soul
“என்ன ஓவர் பாசிடிவ் ஆக இருக்கே, இதையெல்லாம் பதிப்பிக்க
முடியாது” என முதலில் நிராகரிக்கப்பட்ட நூல் தான் இது. பலர் நிராகரித்தபின்
ஹைச்.சி.ஐ எனும் ஒரு குட்டி பதிப்பகத்தின் புண்ணியத்தால் பிரசுரமானது.
அதன்பின் பதிப்பாசிரியருக்கு அடித்தது ஜாக்பாட். உலகெங்கும் காட்டுத் தீ போல
பற்றிப் படர்ந்தது இதன் விற்பனை. எழுத்தாளர்கள் ஜேக் கேன்ஃபீல்ட் மற்றும் மார்க்
ஹேன்சன் இருவரும் உலகப் புகழ் பெற்றனர்.
அதிகம் விற்பனையாகும் நூல்களில் இதற்கு சிறப்பிடம் உண்டு.
உலகிலேயே அதிகம் விற்கப்பட்ட தன்னம்பிக்கை நூல் வரிசை இது தான். இப்போது பல்வேறு
எழுத்தாளர்கள் எழுதும் விஷயங்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. குழந்தைகள்,
பதின் வயதினர், ஆண்கள், பெண்கள், தம்பதியர் என இப்போது எல்லோருக்கும் தனித் தனியே
இந்த நூல் வெளியாகிறது.
பார்டன் கோல்ட்ஸ்மித் எழுதிய இந்த நூல் எளிமையாக, நடைமுறை
யதார்த்தங்களோடு எழுதப்பட்டுள்ளது. வாசகர்களை மட்டுமன்றி பிற எழுத்தாளர்களையும்
கவர்ந்துள்ளது இந்த நூல்.
உனது வாழ்க்கை உனது கையில் எனும் செய்தியோடு இந்த நூல்
பயணிக்கிறது. உனக்குள் இருக்கும் திறமைக் கடலைத் திறந்து பார்க்கத் தவறாதே. நீ
பிடரி சிலிர்க்கும் சிங்கம் உன்னைக் கூட்டில் தள்ள முடியாதே ! என
உள்ளுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை இந்த நூல் தட்டி எழுப்புகிறது.
நல்ல குணாதிசயங்களோடு வாழ்வதையும், உறவுகளை
வலுப்படுத்துவதையும், தன்னம்பிக்கையோடு செயல்படுவதையும் இந்த நூல்
முதன்மைப்படுத்துகிறது.
ஆன்டனி ரோபின்ஸ் எழுதிய இந்த நூல் அதிகம் விற்பனையான நூல்களின்
பட்டியலில் இடம் பிடித்த நூல். எளிமையும், சுவாரஸ்யமும் நிறைந்த நடை. 1991ம் ஆண்டு
வெளியான இந்த நூல் அமெரிக்காவின் அதிக விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில்
இருந்த நூல். இதன் பல வடிவங்கள் வெளியாகியிருக்கின்றன.
தன்னம்பிக்கையின் முனையை கூர்தீட்ட விரும்புபவர்கள் நிச்சயம்
படிக்கலாம். இந்த நூலைத் தவிர இந்த எழுத்தாளர் எழுதிய பிற நூல்களில், அன்லிமிடட்
பவர் மற்றும் மணி:மாஸ்டர் த கேம் எனும் இரண்டு நூல்களும் மிகப் பிரபலம்.
5. You Can Heal your Life
உங்கள் வாழ்க்கையை எந்த மந்திரக் கோலும் வந்து சரி செய்து விட
முடியாது. ஆனால் உங்கள் மனம் அதைச் செய்ய முடியும். உங்கள் பேச்சு முதல் செயல் வரை
எப்படி வசீகரமாய் மாற வேண்டும் என்பதை இந்த நூல் விளக்குகிறது. லூயிஸ் ஹே எழுதிய
இந்த நாவல் மூன்றரை கோடி பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்தது. உலகின் டாப் 10
பெண் எழுத்தாளர் வரிசையில் மூன்றாவதாய் இருக்கிறார் ஆசிரியர், புத்தக விற்பனை எண்ணிக்கையின்
அடிப்படையில்.
இந்த புத்தகத்தை எழுதியபோது அவர் அறுபது வயதைத்
தாண்டியிருந்தார். வாழ்வின் அனுபவ முடிச்சுகளிலிருந்து நூலில் பல்வேறு தீர்வுகளைச்
சொல்லியிருந்தார். குறிப்பாக உடலுக்கும் மனதுக்கும் இடையேயான ஆழமான பிணைப்பு
குறித்த அவரது சிந்தனைகள் பெரும் பாராட்டு பெற்றன.
சேம் ஹார்ன் எழுதிய இந்த நூல் எப்படி எந்த ஒரு செயலிலும் பளிச்
என நமது முத்திரையைப் பதிக்க முடியும் என அக்கு வேறு ஆணி வேறாக விளக்குகிறது. “எது
தான் உன்னை வெற்றி பெற விடாமல் தடுக்கிறது” என நம்மையே கேள்வி கேட்க வைத்து, நமது
செயல்களை ஒவ்வொன்றாகச் சீர்செய்ய இந்த நூல் வழிகாட்டுகிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி செயல்பட வேண்டும், நமது தோல்விகளை
எப்படி பாடங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் போன்ற பல விஷயங்களை இந்த நூல் அழகாகவும்
சுவாரஸ்யமாகவும் விளக்குகிறது. வாசகர்களும், எழுத்தாளர்களும் ஒரு சேர அங்கீகரித்த
நூல்களில் இதுவும் ஒன்று.
உண்மை சுடும் என்பார்கள், உங்களைப் பற்றிய உண்மையெனில் அதும்
ரொம்ப அதிகமாகவே சுடும். அந்த உண்மையை நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது ?
அங்கிருந்து எப்படி வெற்றியை நோக்கி நகர்வது ? நீங்கள் யார் எனும் நிலையிலிருந்து
தொடங்கி எங்கே சென்றடைய வேண்டும் எனும் பயணத்துக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது.
நம்மை மாற்றிக் கொள்வது தான் மிகப்பெரிய கடினமான விஷயம். அந்த
மாற்றத்தை எப்படிச் செய்வது ? எப்படி அதை படிப்படியாய் செயல்படுத்துவது என்பதை
இந்த நூல் அழகாகச் சொல்கிறது. முதலில் உங்களைப் பற்றிய உண்மையை அறியுங்கள்.
உங்களைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களையும், நம்பிக்கைகளையும்
விலக்குங்கள் என்கிறது இந்த நூல்.
8. The Breakout Principle
ஹெர்பர்ட் பென்சன் மற்றும் வில்லியம் ப்ரோக்டர் இருவரும்
இணைந்து எழுதியிருக்கும் அற்புதமான நூல் இது. மன அழுத்தம், உடல் சோர்வு,
அதிக உழைப்பினால் மூளை கொள்கின்ற அசதி – இவையெல்லாம் இன்றைய உலகில் சர்வ சாதாரணம்.
ஆனால் அத்தகைய சூழலில் எப்படி வாழ்க்கையை ஆனந்தமாய் நடத்துவது ? என்பதை அழகாகச்
சொல்கிறது இந்த நூல்.
மருத்துவத் துறையில் பெற்ற அனுபவத்தை இவர்கள் தங்களுடைய நூலில்
வாழ்வியல் அனுபவங்களாக எழுதியிருப்பது நூலுக்கு அதிக பலம் சேர்க்கிறது. மனச்
சோர்வு, குழப்பம், மன அழுத்தம் போன்றவற்றில் உழல்பவர்களுக்கு ரொம்பவே பயன் தரும்
நூல் இது.
ஆடம் கான் எழுதிய இந்த நூலின் சிறப்பு ஒரு நாவலைப் போன்ற
இனிமையான வாசிப்பு அனுபவம். தன்னம்பிக்கை நூல்களின் ஒரு மிகப்பெரிய சிக்கல் அவற்றை
வாசிப்பது பல வேளைகளில் கடினமாக இருப்பது தான். அந்த சிக்கலை இந்த நூலில்
உடைத்திருக்கிறார் ஆசிரியர்.
சின்னச் சின்ன அத்தியாயங்கள், எல்லோரும் புரிந்து கொள்ளக்
கூடிய விஷயங்கள் என நூலை ஒரு சுகமான வாசிப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நூல்களில் ஒன்று இது எனலாம்.
எளிமையாகவும், விரைவாகவும் வாசிக்க விரும்புபவர்களுக்கான நூல் இது.
10.think and grow rich
1937ம் ஆண்டு வெளியான நூல் இது. எழுதியவர் நெப்போலியன் ஹில்
எனும் எழுத்தாளர். உலகிலேயே மிக அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதாரமும்,
தன்னம்பிக்கையும் கலந்து கட்டி எழுதப்பட்ட நூல் இது தான். சுமார் ஏழு கோடி
பிரதிகள் விற்று பெரும் சாதனை படைத்த நூல் இது.
இந்த நூலை எழுதுவதற்கு முன் ஆசிரியர் சுமார் 40 கோடீஸ்வரர்களை
ஆராய்ந்து அவர்களுடைய வெற்றியின் வழிகளை அறிந்து இதை எழுதியிருக்கிறார். இந்த நூல்
பல நூறு செல்வந்தர்களை உருவாக்கியிருக்கிறது. வாழ்வில் பொருளாதார ரீதியாக வெற்றியடைய
வேண்டும் என நினைப்பவர்களுக்கு வரமான நூல் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக