புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இந்த புதிய வருடத்தின் முதல் மாதமான ஜனவரி 6ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி வருகிறது.
மார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். உலகை காத்தருளும் பரந்தாமன் வீற்றிருக்கும் வைகுண்டத்தின் கதவுகள் திறக்கும் நாளாகும்.
சொர்க்க வாசல் :
திருமால் ஆலயங்களில், உட்பிரகாரத்தில் இருந்து வெளிப்பிரகாரத்திற்கு திறக்கும்படியாக, வடக்குப் புறத்தில் ஒரு வாசல் இருக்கும். ஆண்டு முழுவதும், இவ்வாசலின் இரண்டு கதவுகளும் மூடியிருக்கும். ஆனால், வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இந்த இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டு, பெருமாள் இந்த வாசல் வழியாக எழுந்தருள்வார். இந்தத் திருக்காட்சியைக் காண்பதற்காக பக்தர்கள், இந்த வாசலின் கதவுகளுக்கு எதிரே காத்திருந்து பெருமாளை சேவிப்பார்கள்.
ஏகாதசி விரத மகிமை :
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு 'யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்" என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒருமுறை பார்வதிதேவி, மிகச்சிறந்த விரதம் எது?... என பரமேஸ்வரனிடம் கேட்டாள். தேவி! ஏகாதசி விரதமே விரதங்களில் சிறந்தது. இவ்விரதம் பாவங்களைப் போக்கும் விரதமாகும். இவ்விரத்தை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்ற சிறப்புப் பெயருண்டு. ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருப்பவர், எல்லாப் பாவங்களில் இருந்தும் முக்தி பெற்று மோட்ச கதியை பெறுவார்.
சிறப்பு :
வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.
வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இந்த விழா அதிகாலை வேளையில் நடைபெறும். இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்க வாசலின் வழியாக வெளியே வருவார்கள்.
இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் நீங்குவார்கள். மேலும், முக்திக்கான வழியை அடைவீர்கள். ஏகாதசி விரதமிருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அடைவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக