Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 10



  இந்தமுறை எவ்வித பிழையும் இன்றி நான் உன்னை கொன்றே தீருவேன் என்று அசுரன் தாட்சாயிணி தேவியிடம் கூறினான். தன் முன்னிற்பது யாரென்று அறிந்தும் அவ்விதம் கூறியதை கண்டு எவ்வித சினமும் இன்றி அமைதியுடன் எல்லாம் உணர்ந்தவரான சிவபெருமான் நின்றார். அணையும் விளக்கு எப்போதும் பிரகாசமாக எரியும் என்பதை உணர்ந்தவர் அவர்.

இந்த அசுரன் முன்பு செய்த தவறை இழைக்காமல் இம்முறை தோல்வியின்றி வெற்றி பெற வேண்டும் என்று தேவியின் அருகில் செல்ல முயன்றான். நிற்பது சிவபெருமான் அருகில் அதனால் அவனது முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இருப்பினும் முயற்சியை கைவிடாமல் சிவனிடமிருந்து தேவியை பிரிக்க முயற்சி செய்தான். ஆனால், அவன் எடுத்த அனைத்து முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்.

இறுதியில் அசுரனின் செயல்பாடுகளால் சினம் அதிகரித்த சிவன் சூலாயுதம் வாளாக மாற்றி அவ்வாளை கொண்டு அசுரனின் தலையை வெட்டினார். கருணை ரூபமாக இருந்த சிவனை கோபரூபத்தில் கண்ட தாட்சாயிணி தேவி திகைப்புற்று நின்றார். சினம் தனிந்த சிவபெருமான் அந்த அசுரனால் ஏற்பட்ட உதிரக் கறை நீக்கி மீண்டும் தன்னுடைய பழைய உருவமான கருணை உருவிற்கு மாறினார்.

அரக்கனால் ஏற்பட்ட இடர்பாடுகளை களைந்து இருவரும் வனத்தில் உலாவிக் கொண்டு இருந்தனர். இருவருக்கும் இடையே உள்ள உறவானது உறுதியாக ஆரம்பித்தது. இருவரும் தங்களுக்குள் மனம்விட்டு பேசி இருவருக்கும் இடையே உள்ள அன்பை மென்மேலும் அதிகப்படுத்தினர்.

இவ்வேளையில் பிரம்ம தேவர் தேவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரு மாபெரும் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தார். அந்த வேள்வியில் பரம்பொருளான சிவனும், தாட்சாயிணி தேவியும், அரியும், லட்சுமியும் கலந்து கொள்ள அழைப்புகள் விடுக்கப்பட்டன. தேவலோகத்தில் உள்ள அனைத்து தேவர்களும் கலந்து கொள்ளும் வகையிலும் ரிஷிகளும் உடன் இருந்து வேள்விகளை நடத்தும் பொறுப்பில் இருந்தனர்.

கருணைக் கடவுளான சிவபெருமான் தனது மனைவியான தாட்சாயிணி தேவியுடன் அந்த வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றனர். இதேபோன்று காக்கும் கடவுளான விஷ்ணுவும் தம் மனைவியான லட்சுமி தேவியுடன் கலந்து கொண்டார்.

மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா மூவரும் தங்கள் இல்லத்தாள்களான தாட்சாயிணி, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகியோருடன் அங்கு கூடி இருந்த அனைத்து தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் காட்சியளித்தனர்.

மும்மூர்த்திகளையும் அவர்களின் மனைவிகளுடன் காண தங்களின் இரு கண்கள் போதாது என்றும், தேவர்களாகிய நாங்கள் தோன்றியதற்கான முழுபலன்களையும் கண்டதாக அங்கு கூடி இருந்தவர்கள் எண்ணினார்கள்.

ஆனால், இந்த பிரபஞ்சமே கண்கூட காண வேண்டிய இந்த அற்புதமான காட்சியை ஒரு அற்புதமான வினைக்காக யாவருக்கும் கிடைக்காமல் போக கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பது அங்கு கூடி இருந்த யாவரும் அறிந்ததே.

இவர்களை தொடர்ந்து பிரஜாபதியான தட்சனும், அவரது மனைவியான பிரசுதியுடன் வருகை தந்தனர். இவர்களின் வருகையை அறிந்து அனைத்து தேவர்களும் எழுந்து நின்று இவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்தினார்கள்.

தாட்சாயிணி தேவி தன் அம்மாவை கண்டதும் அவருடன் உரையாட சிவனை தனித்து தன் அம்மாவை காண சென்றார்கள். பின், பிரஜாபதியான தட்சன் தான் எந்நேரமும் வணங்கும் திருமாலை பணிவுடன் வணங்கினார்.

ஆனால், தம் மருமகனான எம்பெருமான் தன்னுடைய வருகையை அறிந்தும் எழாமல் இருப்பதை கண்ட தட்சன் சினம் கொண்டதோடும் அவருடன் பேச முயற்சி செய்கையில் அவருக்கு ஆசிர்வாதம் அளிக்கும் நிலையில் சிவபெருமான் நின்றதோடு அவருக்கு ஆசியும் அருளினார்.

இதைக்கண்டு முக்காலம் உணர்ந்த நாரதர் பிரஜாபதியான தட்சனே உங்களை உங்கள் மருமகன் ஆசிர்வதிப்பதா என்று கூறியதும் மட்டுமல்லாமல் உங்களின் பெருமைகளை சிவபெருமான் அறியவில்லையோ என்று கூறினார்.

இந்நிலையில் தான் அனுப்பிய வீரன் மடிந்த செய்தியை அறிந்த தாரகாசுரன் இனி என்ன செய்வது என்று குழம்பி நின்றான். மேலும், இவர்களின் அன்பு மிகுதியால் தன்னை கொல்லக்கூடிய சக்தியுடைய பிள்ளை பிறந்து விடுவானோ என்று எண்ணத் தொடங்கினான்.

பிரம்ம லோகத்தில் இதுவரை பொறுமை காத்த தட்சன் நாரதரின் பேச்சுகளால் பொறுமை இழந்து சிவபெருமானை நோக்கி பித்தனே யார் யாரை ஆசிர்வாதம் செய்வது என்னை பற்றி உமக்கு தெரியாதோ என்று கோபத்துடன் அங்கு உரைக்க ஆரம்பித்தார்.

நான் என்ன பாலகன் என்று நினைத்தாயோ பித்தனே? நான் யார் தெரியுமா என்று நீர் அறிவீரோ? நான் தான் இந்த சிருஷ்டியில் உதித்த அனைத்து பிரஜைகளின் அதிபதி பிரஜாபதி என்று கூறினார். என்னை நீர் ஆசிர்வாதம் செய்வதா? என்றும் இந்த உலகில் ஆசிகள் கூற சில நெறிமுறைகளை வகுத்தவன் நான் என்று இருமாப்புடன் கூறினார் தட்சன்.

இவரின் வாதத்தின் சத்தத்தால் தன் தாயிடம் உரையாடிக் கொண்டு இருந்த தாட்சாயிணி தேவி என்னவென்று புரியாமல் தன் பதியான சிவபெருமானின் அருகில் வந்தார். மேலும் அங்கு கூடி இருந்தவர்களுக்கு தட்சனின் பேச்சுகளால் இங்கு என்ன அனர்த்தம் உண்டாகுமோ என ஐயம் கொண்டனர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக