Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 16


  தேவேந்திரனின் கூற்றுக்கு இணங்கி தாரகாசுரன் தனது படையை தயார் செய்து தேவேந்திரனுடன் போர் புரிவதற்கு தயாராக இருந்தான். தேவேந்திரனும் தனது படைகளுடன் நேருக்கு நேராக போரிட தயாராக இருந்தார்.

பார்வதிதேவியும் வளர்ந்து பருவ வயதை அடைந்தார். தேவியும் அவர்களது தோழிகளுடன் அருகில் இருந்த தன் தந்தையின் ஆளுமையில் உள்ள வனத்திற்கு சென்றார். தோழிகளுடன் அந்த வனத்தில் உலாவிக் கொண்டு இருந்தபோது ஒரு குகையின் அருகில் சென்றதும் பார்வதிதேவிக்கு இதுவரை இல்லாத ஒரு ஈர்ப்பு அவ்விடத்தில் உண்டாயிற்று. இதன் காரணமாக அவ்விடத்தில் யாரோ உள்ளார் என்பதனை அறிந்த தேவி யார் என அறியும் பொருட்டு தன் தோழிகளை தவிர்த்து தனியே சென்றார்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே யுத்தம் உண்டாயிற்று. எனினும் தேவர்களின் பகுதியிலேயே அதிகப்படியான இழப்புகள் உண்டாயின. காரணம் தாரகாசுரன் பெற்ற வரத்தின் மகிமையால் அவனே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாயின.

தேவேந்திரன் தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பிரயோகித்துப் பார்த்தும் எவ்வித பலனும் இல்லை. இவரின் சக்தி மிகுந்த ஆயுதங்களும் தாரகாசுரனிடம் சக்தி இழந்து போயின. தேவேந்திரனும் விடாது முயற்சித்து பார்த்தும் அவரின் எண்ணம் ஈடேறவில்லை.

இந்நிலை இவ்வாறே சென்று கொண்டு இருந்தால் தன்னுடைய அழிவு உறுதி என முடிவு செய்த தேவேந்திரன் அவ்விடத்தை விட்டு மறைந்தார். தேவேந்திரன் மறைந்ததை அடுத்து போர் புரிய தலைவனே இல்லாததால் இனி தேவலோகம் எனக்கே உரியது என்றும், இனி நானே தேவலோகத்தின் அரசன் ஆவேன் என்றும், மூவுலகிலும் இனி என் கட்டளைப்படி அனைத்தும் நடைபெற வேண்டும் எனவும் கூறி தாரகாசுரன் மகிழ்ந்தான்.

தேவேந்திரன் தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியை தேடி அவரின் குருகுலத்தை தேடிச் சென்றார். பெண் மயக்கத்தில் இருந்த தேவேந்திரன் செய்த செயல்களால் இந்திர சபையை புறக்கணித்த குலகுருவை எங்கு தேடியும் தேவேந்திரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் என்ன செய்வது என்று அறியாமல் பிரம்மாவை காணச் சென்றார்.

சிவபெருமான் தவம் மேற்கொண்ட குகையை பார்வதிதேவி அடைந்தார். குகையின் வெளியே நந்தி தேவரும் சிலை வடிவில் எம்பெருமானின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தார். நந்தி தேவரை கண்டதும் பூர்வீக ஜென்ம நினைவுகள் பார்வதிதேவியின் கண்முன் தோன்றி மறைந்தன.

நினைவுகளில் சிவனுடன் கைலாய மலையில் இருந்ததும் ஆடல் பாடல் நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் இந்த ஜென்மத்திற்கு தொடர்பில்லாமல் இருந்தன. இந்நிகழ்வுகள் கண்ணெதிரே தோன்றி மறைந்தாலும் குழப்பங்களுடன் இருந்த பார்வதிதேவி அவ்விடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இவ்வேளையில் தேவர்களின் அதிபதியான தேவேந்திரன், பிரம்ம தேவரிடம் சென்று நிகழ்ந்த அனைத்தையும் கூறினார். இனி நான் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாகவும், தேவர்களின் குருவையும் காண முடியவில்லை என்றும் கூறி இதற்கு தாங்கள் தான் உபயம் கூற வேண்டும் என பணிந்து நின்றார்.

பார்வதிதேவியுடன் வந்த தோழிகள் தங்களுடன் வந்த தேவியை காணவில்லை என்றதும் அச்சம் கொண்டனர். தேவி இல்லாமல் நாம் அரண்மனைக்கு சென்றால் என்ன நிகழுமோ என பயந்தனர். பின் தோழிகள் அனைவரும் சேர்ந்து வனத்தில் தேடினர். எவ்வளவு முயன்றும் தோழிகளால் தேவி எங்கு சென்றார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின் தோழிகள் அனைவரும் சேர்ந்து அரண்மனைக்கு சென்று வனத்தில் நிகழ்ந்த யாவற்றையும் கூறி இறுதியில் தேவியை தவறவிட்டதையும் கூறினார்கள். இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த இமவான் சினம் கொண்டு வெகுண்டார். பார்வதிதேவியை அந்த வனத்தில் தவறவிட்டீர்களா என சினம் கொண்டு தேவியுடன் சென்ற தோழிகளை கடிந்தார். பின் தனது படை வீரர்களுடன் தேவி இருக்கும் இடத்தை தேடி புறப்பட்டு சென்றார் வேந்தனான இமவான்.

தாரகாசுரனின் அழிவு என்பது சிவபெருமானால் மட்டுமே அழிக்க இயலும். அதற்கு வேறு எந்த உபயமும் இல்லை என்று பிரம்ம தேவர் கூறினார். சிவபெருமானே யோக நிலையில் இருக்கிறாரே அவரால் எவ்விதம் அழிக்க இயலும் என்று தேவேந்திரன் வினவினார்.

அதற்கு பிரம்மதேவர் சிவபெருமானின் வாரிசுகளால் மட்டுமே தனக்கு அழிவு நேரிட வேண்டும் என்ற வரத்தினை தாரகாசுரன் பெற்றுள்ளான் என்றார். சிவபெருமானோ யோகி நிலையில் உள்ளார். அவரின் மனைவியான தாட்சாயிணி தேவியோ இப்போது இல்லை. நமக்கு ஏற்பட்ட இன்னல்கள் இன்னும் தொடருமோ என்று தேவேந்திரன் கேட்டார்.


சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக