Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 1

  ல்லைகளுக்கு உட்படாத அபரிவிதமான சக்திகளை தன்னகத்தே கொண்டு எல்லாம் கொண்டவராகவும், ஆனால் எதிலும் பற்று இல்லாமல் அமைதியாக இருந்து யோக நிலையில் அமர்ந்து பல திருவிளையாடல்களை புரிந்த சிவபெருமானை பற்றியும் அவரால் இயற்றப்பட்ட பல திருவிளையாடல்களை நாம் இங்கு காண்போம்.

சிவபுராணம் என்பது சிவபெருமானின் தோற்றம், அவரின் சக்திகள் மற்றும் அவரால் இயற்றப்பட்ட திருவிளையாடல்களின் தொகுப்பாகும்.

புராணம் என்றால் என்ன?

புராணம் என்பது நம் முன்னோர்களால் எக்காலத்தில் வாழும் மானிட பிறவிகளுக்காக அளிக்கப்பட்ட ஒரு வரப் பிரசாதம் ஆகும். புராணம் என்றால் தொன்மை என்று பொருள். பல பெருமைகளை கொண்ட தொன்மையான நம் நாட்டில் வாழ்ந்த முன்னோர்களால் எதிர்காலத்தில் நிலவும் சங்கடங்களை களையவும், அறவழியில் சென்று தீர்வு காணும் விதமாக இயற்றப்பட்ட கதைகளின் சங்கமம் ஆகும்.

விந்தைகளுடன் கூடிய பல நன்மை பயக்கும் கதைகளையும், ஞான மார்க்கத்தின் அவசியத்தையும் பல யுகங்களாக காலம் தவறாமல் அனைவரிடத்திலும் இனிமையாகவும் எளிதில் புரியும் வண்ணம் இறைவனை கொண்டு படைக்கப்பட்ட அரும் பெரும் ஞான பொக்கிஷம் தான் இந்த புராணம்.

பிரளயம் :

பிரளயம் ஒன்று உண்டாகி உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறந்து போய் விட்டன. உலகின் எப்பகுதியை கண்டாலும் நீரால் சூழப்பட்டு இருந்தன. சகல லோகங்களும் நீரினால் மூழ்கி சமுத்திரமாக காட்சியளித்தன. அந்த பிரளயத்தின் காரணமாக சிருஷ்டிக் கர்த்தாவான பிரம்ம தேவர் மயக்கமுற்று ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

நீர்ப்பரப்பின் மீது ஆதிசேஷன் மேல் ஸ்ரீ மந் நாராயணன் சயனித்திருந்தார்.

திடீரெனக் கண் விழித்து பார்த்த பிரம்மாவுக்கு பிரளயத்தின் விளைவாக அனைத்து லோகங்களும் நீரினால் அழிந்து போயின என்பதை கண்டார். பிரளயத்தின் விளைவாக யாவற்றையும் மறந்த பிரம்ம தேவருக்கு தாம் தான் சிருஷ்டி கர்த்தா என்ற ஒன்று மட்டும் நினைவில் இருந்தது.

மீண்டும் தன் பணியான சிருஷ்டித்தல் தொழிலை செய்ய தொடங்கினார். தாம் எண்ணிய பணிக்கு உதவும் வகையில் யாரேனும் உள்ளாரா எனப் பார்த்தார். அப்போது ஆனந்த நித்திரையில் இருந்த நாராயணனை கண்டார்.

தான் எண்ணிய பணியை நிறைவேற்ற தனக்கு உதவியாக இருக்கும் வகையில் இன்னொருவரை கண்ட பிரம்மா அவர் அருகில் சென்றார்.

நித்திரையில் இருந்த நாராயணனை எழுப்பி சர்வ உலகங்களும் அழிந்துள்ள இந்த தருவாயில் நித்திரையில் ஆழ்ந்து இருக்கும் நீர் யார்? என வினவினார்.

நித்திரையில் ஆழ்ந்த ஸ்ரீமந் நாராயணன் யாவும் மறந்தவராக காட்சியளித்தார். பின்பு சிறிது காலத்திற்கு பின் யாம் யாரென்றும், தம்முடன் உரையாடுபவர் யாரென்றும் அறிந்த ஸ்ரீமந் நாராயணன் என்ன குழந்தாய் வேண்டும்? என வினவினார்.

இதைக் கேட்ட பிரம்மதேவர் யார் குழந்தை என்று அழைக்கிறாய் என சினமுடன் கேட்டார். நான் யார் என்று நீர் அறிவீரோ? நானே இந்த சிருஷ்டியை படைத்தவன்! நானே உன்னையும் படைத்தவன் என்று கர்வத்தோடு பிரம்மதேவர் ஸ்ரீமந் நாராயணனிடம் சினத்துடன் உரையாடினார்.

ஸ்ரீமந் நாராயணன் இவரின் பதில் உரையை கேட்டு சினம் கொள்ளாமல் கனிவான குரலில் நீரே எம்மிடமிருந்து தோன்றியவன் என்று பதில் உரையை அளித்தார். இதைக்கேட்ட பிரம்மதேவர் நானே உன்னை படைத்தவன் என்று கர்வத்தோடு உரையாடினார்.

ஸ்ரீமந் நாராயணன் சிரித்த இன்முகத்தோடு நீரே என் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றிய தாமரை மலரில் உதயமானவர் என்றும், இதுவே உன் பிறப்பின் ரகசியம் என்றும் கூறினார்.

இதை சற்றும் ஏற்றுக்கொள்ளாத பிரம்மதேவர் எதிர் வாதம் புரிந்தார். இருவருக்கும் இடையில் இருந்த உரையாடல் கடும் வாக்குவாதமாக மாறியது.

அவ்வேளையில் அக்னி சொரூப ஜோதி உருவத்தில் அண்டத்தின் பரம்பொருளான சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றினார். இதைக்கண்ட இருவரும் தம்மை விட சக்தி இன்னொருவர் இருக்கக்கூடும் என அறிந்தனர்.

அவ்விருவரும் தங்கள் வாதத்திற்கான மூலக் காரணத்தை கூறி நீரே இதற்கு தீர்வு வழங்க வேண்டும் என்று வேண்டினர். அப்போது லிங்க ரூபத்தில் இருந்து ஒரு அசரீரி உருவாகியது.

அதாவது இருவரில் யார் எனது அடியை அல்லது முடியை முதலில் காண்கிறீர்களோ அவரே முதலில் தோன்றியவர் என்று அந்த அசரீரி உரைத்தது.

இதுவே சரியென முடிவெடுத்த இருவரும் அன்னப்பறவை அவதாரம் எடுத்து லிங்கத்தின் முடியை காண பிரம்மதேவர் தனது பயணத்தை தொடங்கினார். ஸ்ரீமந் நாராயணன் வெண்பன்றியின் அவதாரம் எடுத்து லிங்கத்தின் அடியை காண தனது பயணத்தை தொடங்கினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக