Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 2


  ஸ்ரீமந் நாராயணன் மற்றும் பிரம்ம தேவர் இருவரும் பல யுகங்களாக தனது பயணத்தை மேற்கொண்ட போதும் இருவராலும் அடியையோ, முடியையோ காண இயலவில்லை. ஸ்ரீமந் நாராயணன் இந்த லிங்க வடிவம் முடிவற்றது என்பதை உணர்ந்து தனது பழைய இடத்தை நோக்கி பயணத்தை தொடங்கினார்.

ஆனால், பிரம்ம தேவர் லிங்க வடிவத்தின் உச்சியை காணும் முயற்சியை கைவிடாமல் பயணத்தை தொடர்ந்தார். ஒரு சிறு கால இடைவெளியில் லிங்க வடிவத்தின் உச்சியில் இருந்து தாழம் பூ வருவதை பிரம்ம தேவர் கண்டார்.

பிரம்ம தேவர் தாழம் பூவின் அருகில் சென்று லிங்கத்தின் உச்சியை அடைய இன்னும் எவ்வளவு காலம் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் என வினவினார். அதற்கு தாழம் பூ இன்னும் பல கோடி யுகங்கள் கடந்து செல்ல வேண்டும் என்று கூறியது.

இதை கேட்ட பிரம்ம தேவர் மலைப்புற்று இனியும் பல கோடி ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டுமா என யோசித்தார். சிறிது நேர சிந்தனைக்கு பின் தாழம் பூவிடம் ஒரு உபயம் வேண்டும் என பிரம்ம தேவர் வேண்டினார். பிரம்ம தேவர் வேண்டுகோளை ஏற்று, வேண்டிய உதவியை அளிப்பதாக தாழம் பூ வாக்குறுதி கொடுத்தது.

பிரம்ம தேவரும், தாழம் பூவும் பிரம்ம தேவர் பயணம் ஆரம்பித்த இடத்திற்கு செல்ல பயணம் மேற்கொண்டனர். ஆனால் இவர்கள் இருவரும், சர்வமும் உணர்ந்த பரம்பொருள் இவை அனைத்தையும் கண்டுக்கொண்டு உள்ளார் என்பதை மறந்தனர்.

இறுதியாக ஸ்ரீமந் நாராயணன் இருக்கும் இடத்தை அடைந்த பிரம்ம தேவர் நாராயணனிடம் தான் லிங்கத்தின் முடியை கண்டதாகவும் அதற்கு, இந்த தாழம் பூவே சாட்சி என கூறினார். தாழம் பூவும் பிரம்மாவிடம் கொடுத்த வாக்குறுதிக்கு இணங்கி ஆமாம் பிரம்ம தேவர் லிங்கத்தின் முடியை கண்டதாக பொய் சாட்சி கூறியது.

தாழம் பூ உரைப்பது பொய் என அசரீரி சினத்துடன் உரைத்தது.

லிங்கத்தில் இருந்து வந்த அசரீரியை கேட்ட பிரம்ம தேவர் அதிர்ந்து போனார். அப்போது ஸ்ரீமந் நாராயணன் என்ன நிகழ்ந்தது என அறியாமல் நின்றார். பின்பு பிரபஞ்சத்தின் ஜோதி லிங்கமானது சிவபெருமானாக காட்சியளித்தார்.

ஆனால், சிவபெருமானை காண இயலாத வகையில் ஒளியானது பிரகாசித்தது. மீண்டும் இருவரும் சிவபெருமானை வணங்க ஒளியின் பிரகாசம் குறைந்து அவர்களுக்கு பரிபூரணமாக சிவபெருமான் காட்சியளித்தார்.

காட்சியளித்த சிவபெருமான் பிரம்மாவை நோக்கி நீர் செய்தது தவறு என உரைத்தார். செய்த தவறுக்காக நீர் படைக்கும் சிருஷ்டியில் உனக்கு கோவில் இல்லாமல் போகவும், பொய் சாட்சி சொன்ன தாழம் பூ பூஜைக்கு பயன்படாமல் போகட்டும் என சபித்து விட்டார்.

தான் செய்த தவறை உணர்ந்த பிரம்ம தேவர் சிவனிடம் மன்னிக்கும்படி வேண்டி அருளினார். சினம் கொண்ட சிவபெருமான் செய்த தவறை உணர்ந்த பிரம்ம தேவரை மன்னித்தருளினார். பின் இருவரும் சிவனை வணங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் திருமாலை காக்கும் தெய்வமாகவும், பிரம்மாவை படைக்கும் தெய்வமாகவும் இருக்க அருள் புரிந்தார்.

மேலும் திருமால் சிவபெருமானிடம் பிரபஞ்ச உபதேசம் செய்தருள வேண்டும் என வணங்கி நின்றார். சிவபெருமானும் அவரின் வேண்டுதலை ஏற்று உபதேசம் செய்தார். சிவபெருமான் அருளிய உபதேசங்களில் இருந்து திருமால் மந்திரத்தையும், அதை கடைபிடிக்கும் முறைகள் யாவையும் உணர்ந்தார்.

பின் திருமால் தான் கற்ற உபதேசத்தை பிரம்ம தேவருக்கு சிவன் அருளிய முறையில் உபதேசம் செய்தார். திருமால் உபதேசிக்கும் பொழுது சிவபெருமான் அங்கு காட்சியளித்தார். பிரம்ம தேவர் சிவபெருமானிடம் சிருஷ்டியில் வாழும் உயிர்கள் அறவழியில் நடந்து மோட்சம் அடையும் வழியையும் போதிக்கும்மாறு வேண்டியருளினார். சிவபெருமானும் அவரின் வேண்டுகோளை ஏற்று அருள் பாவித்தார்.

அடியும், முடியும் இன்றி முடிவற்றதாக உள்ள லிங்க வடிவத்தை வழிபட்டால் வாழும் வாழ்க்கையில் எது உண்மையான அன்பு மற்றும் எதில் எல்லா வகையான நிம்மதிகள் உள்ளன என்பதை அறிந்து பிறவிகளின் உன்னத நிலையான பிறவா நிலையை அடைவார்கள் என்று ஞான வழியை போதித்தார்.

படைப்புக் கடவுளான பிரம்மா உயிர்களை படைக்க தொடங்கினார். அந்த உயிர்கள் உயிர் வாழ தேவையான உயிர் வாயுவை அளிக்குமாறு திருமாலிடம் பிரம்மா வேண்டினார்.

பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் உயிர் வாயுவை அளித்தார். உயிர்கள் வாழ்வதற்கான இடத்தையும், பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அண்டம் மற்றும் நிலப்பரப்புகளையும் படைத்தார்.

திருமால் படைத்த நிலப்பரப்பில் திருமால் அருளால் உயிர்கள் தோன்ற ஆரம்பித்தன. பிரம்மா படைப்பு தொழிலை தொடங்கினார். படைப்பு தொழில் அவருக்கு உதவும் வகையில் பிள்ளைகளை உண்டாக்கினார். ஆனால், அவர்களால் எந்தவித பயனும் இல்லாததால் மனம் சோர்ந்தார்.

அவ்வேளையில் சிவபெருமான் அங்கு தோன்றி அவரின் சோகத்திற்கான காரணத்தை அறிந்து அந்த குறையை நிவர்த்தி செய்வதாகவும் கூறி மறைந்தார்.

சிவனின் அருளால் அவர் எண்ணியவாறு பிரஜாபதிகளை படைத்தார். பிரஜாபதிகள் என்பவர்கள் பிரம்மாவால் படைப்பு தொழிலுக்கு உதவியாக இருக்கும் வகையில் படைக்கப்பட்டவர்கள். பிரம்ம தேவர் மொத்தம் பத்து பிரஜாபதிகளை தோற்றுவித்தார். மரீசி, அத்திர, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர், தக்கன், பிருகு, நாரதர் போன்றவர்கள் பிரம்மாவால் படைக்கப்பட்டவர்கள்.

பின்பு சப்த ரிஷிகளை தோற்றுவித்தார். அதன்பின் உயிரினங்கள் மற்றும் மானிடர்கள் தோற்றுவிக்கப்பட்டனர். ரிஷிகளின் தோற்றத்திற்கு பின் அவர்களால் தேவர்களும் அசுரர்களும் படைக்கப்பட்டனர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக