Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 3




 பிரஜாபதியில் ஒருவரான தட்சப் பிரஜாபதிக்கும், பிரசுதிக்கும் மொத்தம் அறுபது பெண் புத்திரிகள் பிறந்தனர் என வேதங்கள் கூறுகின்றன. அதில் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயிணி, ரதி, ரேவதி மற்றும் கார்த்திகை உட்பட இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இவர்களின் புத்திரிகள் ஆவார்கள்.

தட்சப் பிரஜாபதி தன்னுடைய அறுபது புத்திரிகளில் பதின்மூன்று புத்திரிகளை காசிப முனிவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களின் சந்ததிகளால் உலகத்தில் உள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

பின்பு தனது மகள்களில் இருபத்தி ஏழு பேரை சோமனுக்கு மனம் முடித்து கொடுத்தார். தட்சப் பிரஜாபதி தான் ஏற்ற பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தார். இந்த பிரஜாபதி என்னும் பதவியால் அவர் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒரு நெறிமுறைப்படுத்தி அவர்களை நிறைவுடன் வாழ வழி வகை செய்தார்.

தட்சப் பிரஜாபதியின் அறுபது புத்திரிகளில் தாட்சாயிணியும் ஒருவர். தட்சப் பிரஜாபதியின் அறுபது மகள்களில் தாட்சாயிணியே தட்சப் பிரஜாபதியின் விருப்பத்திற்கு உரிய மகள் ஆவார்.

தட்சப் பிரஜாபதி மற்ற பெண் புத்திரிகள் மீது காட்டிய அன்பை விட தாட்சாயிணி மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டார். தாட்சாயிணி சதி என்றும் அழைக்கப்பட்டாள்.

திருமாலை வணங்கி வழிபட்டு வந்த பிரஜாபதி தன் வம்ச மக்களையும் அவ்வாறு வழிபடச் செய்தார். தாட்சாயிணியும் திருமாலை பக்தியோடு வழிபட்டார். தாட்சாயிணி எல்லா வேதங்களையும், உபநிடங்களையும் முறையாக பயின்று தேர்ச்சி பெற்றார். இதனால் என்னவோ மற்ற பிள்ளைகளை விட தாட்சாயிணி மீது மிகுந்த அன்பு கொண்டார்.

தாட்சாயிணி இளமை பருவம் அடைந்ததும் சிவபெருமானை பற்றிய செய்திகளை அறிந்து அவரை பற்றிய தகவல்களை அறிந்தார். ஒரு சமயம் அவரைக் காணும் வாய்ப்பு தாட்சாயிணிக்கு உண்டாயிற்று. அந்த நொடியில் சிவன் மீது தாட்சாயிணி மையல்(காதல்) கொண்டாள்.

மையல் எண்ணம் கொண்ட தாட்சாயிணி சிவனை எண்ணியே காலம் கழித்தார். பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடாமல் சிவன் மீது மையல் கொண்டார். இதை அறிந்த தட்சப் பிரஜாபதி தன் மகளிடம் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அதிர்ந்தார்.

அதற்கான காரணத்தையும் அறிந்து தன் மகளை சிவன் மீது கொண்ட மையலால் ஏற்பட்ட மாயவலையில் இருந்து அகற்றி தன் மகளின் எதிர்காலத்தை காக்க எண்ணினார். பிரஜாபதி ஆயினும் அவரும் பெண் புத்திரிகளின் தந்தையாவார். பின் இந்த பிரச்சனையை தனது தந்தையான பிரம்ம தேவரிடம் முறையிட சத்திய லோகம் சென்றார். அங்கு சென்று தன் தந்தையிடம் தட்சப் பிரஜாபதி அதற்கான தீர்வை அளிக்குமாறு கேட்டார்.

தீர்வை அளிக்குமாறு கேட்டுச் சென்ற பிரஜாபதியிடம், பிரம்ம தேவர் தாட்சாயிணி எனும் சதி பராசக்தியின் அம்சம் என்றும் சிவபெருமானின் மறுபாதி என்றும் கூறினார்.

நீ மேற்கொண்ட பல யுகங்களின் தவத்தின் பலனாக ஆதிபராசக்தியிடம் வாங்கிய வரத்தின் பலனே ஆதிசக்தியே உனக்கு மகளாகவும் எனக்கு பேத்தியாகவும் பிறப்பெடுத்துள்ளாள். அதனால் சதியையே சிவனுக்கு திருமணம் செய்து வைப்பதே சாலச் சிறந்தது என்று கூறினார்.

தந்தையான பிரம்ம தேவரிடம் இருந்து சற்றும் எதிர்பாராத இந்த பதிலால் திகைப்புற்ற இருந்த தட்சப் பிரஜாபதி சினத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

தட்சப் பிரஜாபதி தன் மகளான சதியிடம், அவள் கொண்டுள்ள மையலால் ஏற்படும் விளைவுகளை பற்றி எடுத்து கூறி மையலை கைவிடும் முயற்சியில் இறங்கினார். அவர் சதியிடம் என் அன்பு மகளே நீ மையல் கொண்டுள்ள சிவபெருமான் சுடுகாட்டில் வாசம் செய்பவன். அவனுக்கென்று மாட மாளிகை எதுவும் இல்லை. அவனுக்கென்று யாரும் இல்லை என்று எடுத்து கூறினார்.

தந்தையின் முன் சதி விருப்பத்தை கூறினாள். சிவனே என் பதியாக வேண்டும் என்பதே என் விருப்பம் எனவும் கூறினாள்.

தாரகாசுரன் என்னும் அசுரன் சிவபெருமானை நோக்கி பல காலமாக உணவும், உறக்கமும் இன்றி கடுந்தவம் புரிந்தான். அவனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் தாரகாசுரனின் முன்பு உதயமாகினார்.

சிவபெருமானை கண்ட தாரகாசுரன் செய்வது அறியாது மெய்மறந்து நின்றான். என் பிறப்பின் நெடுநாள் பலனை யான் அடைந்து விட்டேன் என்றும் இவ்வுலகத்தை மறந்து சிவனின் முன் நின்றான். தாரகாசுரனே! உன் தவத்தால் யான் மனம் மகிழ்ந்தோம் அசுரனே. உனக்கு வேண்டும் வரத்தினை கேள் என்று சிவபெருமான் கூறினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக