நாரதர் கூறுவதை அனைத்தையும் கவனத்துடன் கேட்ட பார்வதிதேவிக்கு தன் மனதில் இருந்த ஐயத்திற்கு பதில் கிடைத்தது என எண்ணினார். சிவபெருமானை அடைவதற்கான மார்க்கங்கள் தெளிவுற உணர்த்தியமைக்கு மனதார நன்றியை தெரிவித்தார் பார்வதிதேவி. பார்வதிதேவியின் முகத்தில் காணப்பட்ட பொழிவை கண்ட பர்வதராஜன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தாரகாசுரன், தேவர்கள் இவ்வளவு அமைதியுடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். ஏதேனும் திட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார்களா? என அறிய வேண்டும் என எண்ணினார். தேவலோகத்தில் இருந்து முதன்மையான பதவியை அடைந்தாலும் தன் மனம் அமைதி கொள்ளவில்லையே! ஏதோ நிகழக்கூடாத நிகழ்ச்சி நிகழ்ந்து விடுமோ என ஒரு விதமான உணர்வு தாரகாசுரனுக்கு தோன்றியது. இதைப்பற்றி தம் குருதேவரிடம் ஆலோசிக்க வேண்டும் என எண்ணினார்.
பார்வதி தேவியோ தாம் சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொள்வதாகவும், அதன் பொருட்டு தான் இந்த அரண்மனையை விடுத்து கானகம் செல்ல விரும்புவதாகவும், அதற்கு தங்களின் அனுமதி வேண்டி நிற்கின்றேன் என தம்முடைய எண்ணங்களை யாவும் தன் பெற்றோர்களிடம் உரைக்க நாணம் கொண்டு தன் தோழிகள் வாயிலாக தன் விருப்பங்களை தெரிவித்தார்.
தியானத்தால் உண்டாகும் பலன்கள் :
மனதில் உள்ள வீண் குழப்பங்கள் நீங்கும்.
பணியில் உள்ள பதற்றம் குறையும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்.
தோழிகளும், தேவியின் தந்தையிடம் சென்று தேவியின் விருப்பங்களை தெரிவித்தனர். மிகவும் மகிழ்ச்சியுற்ற பர்வதராஜன், தேவி தவம் புரிவதற்காக கானகம் செல்ல இருப்பதை தேவியின் தாயிடம் உரைத்தீர்களா? என வினவினார். ஆனால், தோழிகள் தங்களிடமே தாங்கள் முதலில் உரைத்துள்ளோம் என்று கூறினார்.
தேவி கானகம் சென்று தவம் மேற்கொள்ள நான் பரிபூரணமாக சம்மதம் அளிக்கின்றேன். இருப்பினும் தேவியின் தாயான மேனை தேவி சம்மதித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். முதலில் மேனை தேவியிடம் சென்று அனுமதி பெறுக என கூறினார் பர்வதராஜன்.
தோழிகளும் தேவியின் தாயான மேனை தேவியை கண்டு அவர்களிடம் பணிந்து தேவியின் விருப்பத்தை தெரிவித்தனர். ஆனால், மேனை தேவிக்கு தம் மகளை சிவபெருமானுக்கு மணம் செய்து வைக்க உடன்பாடு இல்லை. மேலும், தேவி எடுத்துள்ள முடிவை பற்றி பார்வதி தேவியிடம் உரையாட வேண்டும் என எண்ணினார். தோழிகளிடம் தேவி இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அங்கு விரைந்து சென்றார் மேனை தேவி.
தோழிகளிடம் தேவி இருக்கும் இடத்தை அறிந்து அங்கு விரைந்து சென்றார் மேனை தேவி. தேவி பார்வதியை காண அவர் இருக்கும் அறையை நோக்கி சென்றார். ஆனால் அங்கு தேவி இல்லை.
பின் அரண்மனைக்கு அருகில் உள்ள மலர்கள் நிறைந்த சோலைகளின் மையத்தில் உள்ள தாமரை மலர்கள் நிறைந்த குளத்தின் அருகில் அமர்ந்திருப்பதை தேவியின் அறையின் முகப்பு மாடம் வழியாக கண்டார் மேனை தேவி. உடனே பார்வதி தேவி இருக்கும் இடத்தை மேனை தேவி அடைந்தார்.
தன் அன்னை அங்கு வந்துள்ளதை உணராமல் குளத்தில் உள்ள நீரில் சிவநினைவுகளுடன் ஆழ்ந்து இருந்தார். அவ்வேளையில் தாமரை மலரில் அடியில் உள்ள இலையில் இருந்த தேளானது தண்ணீரில் விழுந்தது.
அதைக்கண்ட தேவி சிவநினைவுகளில் இருந்து தெளிந்து அந்த தேளை தண்ணீரில் இருந்து எடுத்து தாமரை இலையில் விட முயன்றார். இருப்பினும் தேளானது தேவியின் கைகளில் கொட்டியது. தேவி அதை பொருட்படுத்தாமல் அத்தேளை எடுத்து உயிர் பிழைக்கும் பொருட்டு காப்பாற்றினார்.
தன் மகளின் கையில் தேள் இருப்பதை கண்ட மேனை தேவி தன் மகளின் அருகே வந்து தேள் உள்ள கையை தட்டிவிடும் போது தேவி அவர்களின் கைகளை தடுத்து தேளை பாதுகாப்பாக ஒரு மரத்தின் மீது விட்டார்கள். தேளும் அவ்விடத்தை விட்டு ஓடியது.
அன்னையான மேனை தேவி, தேவியின் கைகளை பார்க்க அதில் தேள் கொட்டியதால் கைகளில் இரத்தம் வருவதை கண்டார். ஏன் இந்த அனர்த்தமான செயல்பாடுகள்? பார் உனது கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் நீர் எடுக்கும் முடிவுகள் கூட சில நேரங்களில் உன்னை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் சேர்த்து காயப்படுத்தக்கூடியவையாக அமைகின்றன என கூறினார். தன் தாய் தன்னிடம் கூற வந்த விஷயங்கள் யாவையும் உணர்ந்த தேவி அன்னையே தேள் என்பது கொட்டும் என்பதை நான் அறிவேன்.
கொட்டுவது என்பது தேளின் இயல்பாகும். ஆபத்தில் உள்ள உயிர்களை காப்பாற்றுவது என்னுடைய இயல்பாகும். தேள் கொட்டும் என்பதற்காக என்னுடைய இயல்பை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக