சிவபெருமான், இமவான் மன்னனிடம் என்னவளின் விருப்பப்படியும், உங்களின் ஆசிர்வாதங்களுடன் என்னவளை கரம் பிடிக்கின்றேன் என்று கூறினார். பின்பு மேனை தேவி சப்த ரிஷிகளையும், நாரத முனிவரையும் கண்டு தங்களிடம் அவ்விதம் நடந்தமைக்கு மன்னிப்பு வேண்டி நின்றார்.
பின்பு, மகளே எவ்வளவு சினம் கொண்டாலும் நாம் இறைக்கும் சொற்களுக்கு தாங்களே பொறுப்பாகும் என்று கூறி அவர்களுடைய பிழைகளை மன்னித்து அருளினார்கள். மணமகன் வீட்டார்கள் வந்து தங்குவதற்காக விசேஷமாக தயார் செய்யப்பட்ட அரண்மனைக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு வேண்டிய அனைத்து சௌகரியங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களை வைத்து கவனித்து கொண்டார்கள்.
இமவான் மன்னனின் அரசாட்சி எங்கும், சிவபெருமான் பற்றிய பாடல்களும், அவரின் சிறப்புகளும், அவரின் பெருமைகளையும் பாடி மகிழ்ந்தனர். இனிமையான விவாதங்கள் என மிகுந்த மசிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
மணமகன் கோலத்தில் சிவபெருமான் கண்ணை பறிக்கும் எழிலுடன் காணப்பட்டார். இவரைவிட அழகில் சிறந்தவர் இருக்க இயலுமா என்னும் விதத்தில் சுந்தரேஸ்வராக காட்சியளித்தார் எம்பெருமான்.
மணமக்கள் பந்தலில் மணமகளின் வருகைக்காக அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தனர். அவ்வேளையில் லட்சுமி தேவியும், சரஸ்வதி தேவியும் பார்வதி தேவியை இருபுறங்களிலும் தாங்கி பிடித்தவாறு மணமக்களின் மேடைக்கு அழைத்து வந்தனர்.
யாவரும் எதிர்பார்க்காத தருணத்தில் தேவியின் வருகை அமையவும், அங்கு இருந்த அனைவரின் மனதிலும் எழுந்த ஒரே எண்ணம் இந்த உலகில் சுந்தரேஸ்வரரின் எழிலை விட மிகவும் அழகாக இருக்கக்கூடியவர் யார் என்றால்? அது பார்வதி தேவி மட்டுமே என்னும் விதத்தில் இருந்தார்.
பிரம்ம தேவர் மணமக்களின் திருமணத்திற்கான மந்திரங்களை சொல்ல இமவான் மன்னனும், மேனையும் தம்முடைய ஆசை மகளாகிய பார்வதி தேவியின் கரங்களை சிவபெருமானின் கைகளில் கொடுத்து என் மகளை தங்களின் இல்லாத்தாளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி தன் மகளை எம்பெருமானிற்கு கன்னிகாதானம் செய்து வைத்தனர்.
சிவபெருமான் இன்முகத்தோடு பார்வதி தேவியின் கரங்களை பற்றி தங்களின் மகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறி பார்வதி தேவியை மணமேடையில் தனது அருகில் அமர்த்திக் கொண்டார்.
பிரம்ம தேவர் மந்திரங்கள் சொல்லவும், இசை வாத்தியங்கள் முழக்கவும், மகிழ்ச்சி நிறைந்த எண்ணங்கள் நிரம்பிய பலரின் முன்னிலையில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு திருமாங்கல்ய தாரணம் செய்தார். வேத சத்தங்கள் முழங்க முனிவர்களும், தேவர்களும் தங்களின் ஆசிர்வாதங்களாக மணம் கமலும் மலர்களை மணமக்களின் மீது தூவினார்கள்.
திருமண பந்தத்தின் மூலம் இணைந்த பார்வதி சிவன் இருவரும் அக்னியை வலம் வந்தனர். பின்பு சிவபெருமான் பார்வதி தேவியின் கரங்களை தொட்டு அம்மி மிதித்தார். அப்போது கற்புக்கரசியான அருந்ததி வந்தார். சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வீற்று இருக்கச் சொல்லி அவர்களின் துதிகளை பாடி ஆசிர்வதித்தார்.
சிவபெருமான் பார்வதி தேவியின் திருமணம் நிறைவுற்றதை தொடர்ந்து திருமண விழாவிற்கு வருகை தந்த அனைத்து தேவர்களும் சுந்தரேஸ்வரர் வடிவத்தில் அம்பிகையான பார்வதி தேவியுடன் இணைந்து இருப்பதை கண்டு மனம் மகிழ்ந்தனர்.
மேலும், அவர்களிடம் சென்று ரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் ஆசி பெற்றனர். முனிவர்கள் மற்றும் தேவர்கள் யாவரும் மிகவும் சிறந்த முறையில் கௌரவிக்கப்பட்டனர். இமவான் மன்னன் மணமகனோடு வந்தவர்கள் அனைவரையும் சிறந்த முறையில் நடத்திய வண்ணம் எண்ணி மிகவும் மனம் மகிழ்ந்தார்.
அவ்வேளையில் தங்களின் ஆதரவுகள் ஏதும் இல்லை என்றால் இந்த இனிய நிகழ்ச்சி இங்கு நடந்திருக்கும் என கூறுவது என்பது சாத்தியமற்றது. தாங்கள் இத்திருமண விழாவில் எங்களுக்கு அளித்த ஆதரவிற்கும், தங்களின் வழிகாட்டுதலுக்கும் மிகுந்த நன்றிகள் என கூறினார்.
அவ்விதம் மேனை தேவியும் தம் மகளை ஈன்ற போது நான் அடைந்த மகிழ்ச்சியை விட என் மகளை பரம்பொருளான சிவபெருமான் மணம் முடிக்கும் போது அடைந்த மகிழ்ச்சி என்பது அளவில்லாதது. என் மகளின் பிறப்பால் என் குலமே மிகவும் புனிதமானது என்று கூறினார்.
சொப்பனங்களிலும், மற்றவர்களின் பாடல்களிலும், கீர்த்திகளிலும் கண்ட பரம்பொருளான சிவபெருமானையும், விஷ்ணு, பிரம்மா மற்றும் ஏனைய அனைத்து தேவர்களையும் ஒரே இடத்தில் காண்பது என்பது எவ்வளவு பெரிய புண்ணியம். நாங்கள் தன்யர்கள் ஆனோம் என்று மேனை தேவி கூறினார்.
மேலும், இத்திருமணத்தில் ஏதாவது பிழைகள் இருந்தால் எங்களை மன்னித்தருள வேண்டும் என்றார். மறுமுனையிலோ எம்பெருமானின் திருமண விழாவிற்கு வருகைத் தந்துள்ள அனைவருக்கும் அறுசுவை உணவுடன் பலதரப்பட்ட சுவை மிகுந்த உணவுகள் பரிமாறப்பட்டன.
மேனையின் கூற்றுகளை கேட்ட முனிவர்களும், தேவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இத்திருமண விழாவில் பிழைகள் என்று கடுகு அளவுகூட கூற இயலாது தேவி. எவ்விதமான குறைகளும் இல்லாமல் உன் பதியான பர்வதங்களை ஆளும் இமவான் மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். மேலும், சொல்வதற்கு அரிய பல கீர்த்திகளை உடையவராயிற்றே தாங்கள்.
ஏனெனில், நீ அடைந்த பதியான இமவானும் உன்னுடைய மகளான பார்வதி தேவியை எம்பெருமானுக்கு கன்னிகாதானம் செய்து விவரிக்க இயலாத கீர்த்தியை அடைந்தார்.
உன் பதியானவரின் அரசாட்சியில் உள்ள மக்களிடம் காணப்படும் மகிழ்ச்சியை காணும் போதே எவ்விதமான குறையும் இல்லை தேவி என எடுத்து கூறினார்கள். காலம் என்பது எவ்வளவு துரிதமாக செயல்படுகிறது என்பதை எண்ணுவது போல மணமக்களான சிவபெருமானும், அவரின் இல்லாள்ளான பார்வதி தேவியும் கைலாய மலைக்கு செல்ல ஆயத்தமானார்கள்.
சற்று நேரத்திற்கு முன்புதான் என் மகளை ஈன்றெடுத்தது போல உள்ளது. ஆனால், இன்றோ என் மகள் எம்பெருமானின் இல்லாள் ஆவாள் எண்ணும் தருவாயில் மேனையின் கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுக்க தொடங்கின.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக