மேனை தேவியின் கண்களில் கண்ணீரை கண்ட முனிவர்கள் கவலை கொள்ள வேண்டாம் தேவி என ஆறுதல் கூறினார்கள். பின்பு பிரம்மதேவர், திருமால், தேவர்கள், முனிவர்கள் மற்றும் எம்பெருமானும் பார்வதியுடன் இசை வாத்தியங்கள் முழங்க அழகிய நடனங்களுடன் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தை நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினார்கள்.
இமவான் மன்னனும், மேனை தேவியும் தன் மகளை விட்டு பிரிய மனமில்லாமல் அவர்களுடைய எல்லை வரை சென்று தம் மகளையும், எம்பெருமானையும் கைலாயம் செல்வதற்கு வழியனுப்பி விட்டு திரும்பினர்.
கைலாயத்தில் எம்பெருமானையும், பார்வதி தேவியையும் வரவேற்பதற்காக லட்சுமி தேவியும், சரஸ்வதி தேவியும் அதற்கான ஏற்பாடுகளை கவனித்தனர். மங்கள வாத்தியங்களுடன் திருமணக் கோலத்தோடு கைலாயத்தில் நுழைய முற்பட்ட பார்வதி தேவியையும், கைலாய நாதரையும் அவர்களின் இருப்பிடத்திற்கு வரவேற்றனர்.
பின்பு தேவர்கள் அனைவரும் எம்பெருமானே பார்வதி தேவியை ஏற்றுக்கொண்டு எங்களை தாரகாசுரனின் இன்னல்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என அவரிடம் தங்களது கோரிக்கைகளை விடுத்தனர். பின்பு எம்பெருமானிடம் ஆசிப்பெற்று அவர்களின் பணியை மேற்கொள்ள ஆயத்தமானார்கள்.
காலங்கள் கழிந்து கொண்டே இருந்தன. தாரகாசுரனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன்னல்கள் எல்லைகளை கடந்து சென்றன. தேவர்கள் அனைவரும் எம்பெருமானுடைய குமாரனின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தனர்.
தாரகாசுரனால் ஏற்படும் இன்னல்கள் யாவும் எம்பெருமானிடம் முறையிட தேவர்கள் அனைவரும் சிவபெருமானை காணச் சென்றனர். ஆனால், சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாய மலையில் உள்ள நுழைவாயிலில் நின்ற பூதகணங்கள், அங்கு வந்த அனைத்து தேவர்களையும் தடுத்து நிறுத்தினர்.
தேவர்களிடம் தங்களால் இப்போது எம்பெருமானை காண முடியாது என்றும், அவர் எங்கள் அன்னையான பார்வதி தேவியுடன் இருப்பதாக கூறி அவர்களை உள்ளே விடமால் திருப்பி அனுப்பினர்.
ரதி தேவியின் சாபத்தால் பார்வதி தேவி குமரனை ஈன்றெடுக்க இயலாது என்னும் காரணத்தால் தாரகாசுரன் மென்மேலும் தவறுகளையும், தீங்குகளையும் செய்து கொண்டே இருந்தான். மேலும், பார்வதி தேவி தன் பதியானவரின் வாரிசுகளை ஈன்றெடுக்க முடியாததை எண்ணி மனம் கவலைக் கொண்டார்.
அவ்வேளையில் எம்பெருமான் வருகைத் தர பார்வதி தேவி முகத்தில் காணப்பட்ட வருத்தத்தை உணர்ந்து என்னவாயிற்று தேவி என்று வினவினார். இருப்பினும் தேவி எதையும் உரைக்காமல் முகமலர்ச்சியுடன் காணப்படுவது போல் காட்சி அளித்தார். ஆனால், அனைத்தையும் அறிந்த எம்பெருமான் தேவியின் மனவருத்தத்திற்கான காரணங்கள் யாவும் அறிந்தார்.
முன்னொரு சமயத்தில் கைலாய மலையில் தேவர்கள் வந்ததும் அவர்கள் திரும்பி சென்ற நிகழ்வுகளை யாவும் உணர்ந்த சிவபெருமான் தேவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் யாவற்றையும் களையவும், அறவழி தவறி நடக்கும் தாரகாசுரனை அழிக்கவும் சிவகுமரனின் தேவை வேண்டும் என்பதை அறிந்த சிவபெருமான் கைலாயத்தில் உள்ள குகைக்கு பார்வதி தேவியுடன் சென்றார்.
இனியும் தாரகாசுரனால் ஏற்படும் இன்னல்களை பொறுக்க இயலாது என்றும், நாம் அனைவரும் எம்பெருமானை காண வேண்டும் என்றும் அனைவரும் அக்னி தேவன் இருக்கும் இடத்தில் சங்கமித்தனர். அவர்கள் அனைவரும் அக்னி தேவரிடம் எம்பெருமான் திருமணம் இனிதே நிறைவுற்றது.
ஆனால், ரதி தேவியின் சாபத்தால் சிவபுத்திரன் இன்னும் உருவாகவில்லை. எங்களில் சிறந்தவர்களான தாங்கள் சிவபெருமானிடம் சென்று எங்களின் வேண்டுக்கோளை எடுத்துக்கூறி தாங்கள் சிவகுமரனின் வருகையின் அவசியத்தை அவருக்கு கூறி தாரகாசுரனை சம்காரம் செய்ய வேண்டும் என பணிந்து எடுத்துரைக்க வேண்டும் என கூறினார்கள்.
குகைக்கு சென்ற பார்வதி தேவியும் எம்பெருமானும் ஆனந்த தாண்டவத்தில் இருந்தனர். பின்பு தாண்டவத்தின் மகிழ்ச்சி நிலையில் எம்பெருமானின் சக்தியின் ஒரு பகுதியும், பார்வதி தேவியின் சக்தியின் ஒரு பகுதியும் இணைந்து கொண்டு ஒரு புதிய சக்தியின் தோற்றத்திற்கு அடிப்படையாக இருந்தன.
அக்னி தேவர், தேவர்களிடம் இது சாத்தியமற்றது. ஏனெனில், பூத கணங்களை தாண்டி என்னால் எவ்விதம் செல்ல இயலும் தேவர்களே என்று கூறினார். இருப்பினும் தேவேந்திரனின் உத்தரவை மீற முடியாத காரணத்தால் அக்னி தேவர் புறா வடிவம் எடுத்து கைலாய மலைக்கு சென்றார்.
தனது ஒற்றர்கள் மூலம் தேவர்கள் மற்றும் அவர்களின் வேந்தனான இந்திர தேவன் உட்பட அனைவரும் அக்னி தேவனை காண சென்றதை தாரகாசுரன் அறிந்தான். தேவர்கள் தனக்கு எதிராக ஏதோ சதி திட்டம் செய்யப்போவதை உணர்ந்த தாரகாசுரன் அவர்கள் சங்கமித்திருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.
பல தடைகளுக்கு பின்னால் அக்னி தேவன் எம்பெருமான் வீற்றிருக்கும் இடத்தை அடைந்தார். இருப்பினும் சிவபெருமான் இருக்கும் இடத்தில் அவர் இல்லாததை கண்டு மனம் கலங்கி நின்றார். அவ்வேளையில் கைலாயத்தில் இருந்த குகையில் வந்த வெளிச்சம் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருந்தது.
தேவர்கள் சங்கமித்த இடத்தில் இருந்து பறந்து சென்ற புறாவை பின் தொடர்ந்தே தாரகாசுரனின் ஒற்றர்கள் சென்றனர். அவர்கள் பின் தொடர்ந்த புறாவானது, அதாவது அக்னி தேவன் கைலாயத்தில் இறங்குவதை கண்ட அசுரர்களின் ஒற்றர்கள் தங்களின் வேந்தனான தாரகாசுரனிடம் இச்செய்தியை சொல்ல சென்றனர்.
தேவர்களை சிறைபிடிக்க வந்துக்கொண்டு இருந்த தாரகாசுரன் இச்செய்தியை அறிந்தவுடன் கைலாயத்தை நோக்கி தனது படையுடன் சென்றான். கைலாயத்தை அடைந்ததும் அங்கிருந்த பூத கணங்களுக்கும், தாரகாசுரனின் படைக்கும் இடையே போர் உண்டாயிற்று.
அவ்வேளையில் தேவர்களும் அக்னி தேவன் சென்று வெகு நேரம் ஆயிற்றே என எண்ணி கைலாயத்திற்கு வந்தார்கள். அந்த வேளையில் நந்தி தேவரும் அவருடன் இருந்த மற்ற பூத கணங்களும் அசுரர்களுடன் சண்டையிட்டு கொண்டிருப்பதை கண்டவர்கள் அவர்களும் போரில் ஈடுபட்டனர்.
அந்த வெளிச்சத்தின் பிரகாசத்துடன் சிறிது வெப்பமும் உண்டாயிற்று. அக்னி தேவர் அந்த குகையின் உள்ளே சென்று பார்த்தார். அவ்வேளையில் எம்பெருமானும், பார்வதி தேவியும் தியான நிலையில் ஆனந்த தாண்டவம் புரிய அங்கு ஒரு மகத்தான சக்தி உருவானதை கண்டார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக