எம்பெருமானும், பார்வதி தேவியும் தியான நிலையில் தாண்டவம் புரிந்து கொண்டே அமர்ந்திருக்க, அவர்கள் இருவரிடமிருந்து உருவான புதிய சக்திக்கு மேலும் ஆற்றலை அளித்து கொண்டு இருந்தார்கள்.
அந்த சக்தியானது அதிகரிக்க அதிகரிக்க அதனுடன் வெளிச்சமும், வெப்பமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அக்னி தேவர் அந்த குகையில் நுழைந்த போது சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் மற்றும் அங்கு உருவான சக்திக்கும் உள்ள தொடர்பு குறைந்து கொண்டே இருந்தது.
கைலாயத்தில் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் நடைபெற்ற பொழுது அசுரர்களின் வேந்தன் தன்னந்தனியாக கைலாய மலையின் மேற்பகுதிக்கு செல்வதை தேவேந்திரன் கண்டார். இருப்பினும் தன்னால் தாரகாசுரனை தடுக்க இயலாது என்பதை உணர்ந்த தேவேந்திரன் அக்னி தேவர் இருக்கும் இடத்தை அடைந்தார்.
பின்பு அக்னி தேவரிடம் தாரகாசுரன் இவ்விடம் நோக்கி வந்து கொண்டு இருக்கின்றான். அவனிடம் இந்த சக்தியானது கிடைத்தால் அவன் அதை அழித்து விடுவான். ஆகவே நீர் இச்சக்தியை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி செல் என்று கூறினார்.
பின்னர் தேவேந்திரனின் கூற்றுக்கு இணங்கி அக்னி தேவர் அந்த சக்தியை கைலாய மலையில் இருந்து எடுத்துக்கொண்டு புறா வடிவில் பறந்து சென்றார்.
அவ்வேளையில் தாரகாசுரன் வரவே தேவேந்திரனும் அவ்விடத்தை விட்டு மறைந்து சென்றார். பின் தாரகாசுரன் தியான நிலையில் இருந்த எம்பெருமானையும், பார்வதி தேவியையும் கண்டான். அங்கு எவ்விதமான சக்தி தோற்றமும் புலப்படவில்லை.
பின்பு இது தேவர்களின் ஒரு வகையான சதிச் செயலாக இருக்கலாம் என எண்ணி போர் நடக்கும் இடத்திற்கு தாரகாசுரன் சென்றான். போர் புரியும் இடத்தில் இருந்த தேவர்கள் இல்லாமல், அனைவரும் பூத கணங்களாக இருந்தனர்.
பின்பு அசுரர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு அசுரலோகம் சென்றனர். இருப்பினும் தாரகாசுரன் இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது போல் உணர்ந்தான்.
புறா வடிவத்தில் இருந்த அக்னி தேவர் அந்த புதிய சக்தியை தன் வாயில் ஏந்தியப்படி பறந்து சென்றார். நேரம் அதிகரிக்க அதிகரிக்க அந்த சக்தியிடமிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவை அக்னி தேவரால் தாங்க முடியாததால் அந்த சக்தியை கங்கை நதியில் போட்டுவிட்டார்.
கங்கை நதியானது அக்னி தேவர் நதிக்கரையில் விட்ட அந்த சக்தியினை யாவரும் அறியா வண்ணம் எடுத்துச் சென்றது. ஆனால், கங்கை நதியாலும் அந்த சக்தியின் வெப்பத்தை தாங்க முடியவில்லை.
பின் இமயமலையில் உள்ள சரவண பொய்கையில் தர்ப்பை புற்கள் நிறைந்த இடத்தில் அந்த சக்தியினை விட்டுவிட்டது. பின் அந்த சக்தியில் இருந்து அனைவரின் இன்னல்களை போக்கும் வல்லமை கொண்ட அழகிய குழந்தை தோன்றியது.
அப்பொழுது அங்கு நீராட வந்த ஆறு கன்னியர்கள் இந்த அழகிய குழந்தை வனத்தில் தன்னந்தனியாக இருப்பதை கண்டு வியந்தனர். பின்பு அதில் இருந்த ஒரு கன்னியர் இவன்க் என்னவன் எனக் கூற, ஆறு கன்னியர்களும் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டனர். இதைக்கண்டு அழகிய சிரிப்பை உதிர்த்த சிவகுமரன் ஆறு குழந்தைகளாக அவர்களுக்கு தோற்றம் அளித்தார்.
பின்னர் கன்னியர்கள் தங்களுக்குள் இருந்த மோதல்களை விடுத்து ஒவ்வொரு கன்னியர்களும் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டனர். அவ்வேளையில் சிவகுமரன் அழுகவே அங்கு இருந்த கன்னியர்களே அவருக்கு தேவையான பாலை அளித்தனர்.
ஆறு கன்னியர்களிடம் இருந்து பாலை பருகியதால் குமரனை ஆறுமுகன் என்றும் அழைக்கின்றோம். தியான நிலையில் இருந்து தன் பழைய நிலைக்கு பார்வதியும், சிவபெருமானும் வந்ததும் நம் மைந்தன் எங்கே என பார்வதி தேவி வினவினார்.
எம்பெருமானோ இங்கு நிகழ்ந்த யாவற்றையும் உணர்ந்து பின் பார்வதி தேவியிடம் அமைதி கொள்வாய் தேவி என்று கூறினார். பின் தேவியின் மனமோ மிகவும் சங்கடத்திற்கு உள்ளானது.
சிவபெருமான் பார்வதி தேவியிடம் நம் மைந்தன் நலமுடன் இருக்கிறான் கவலை கொள்ள வேண்டாம் தேவி. காலம் கணியும்போது நாம் குமரனை காணச் செல்வோம் என கூறினார். பதியின் கூற்றுகளில் உண்மை இருக்கும் என உணர்ந்த பார்வதி தேவி குமரனை பற்றிய கவலைகள் இருந்த போதும் அதை வெளிக்கொள்ளாமல் இருந்தார்.
காலங்கள் விரைந்து ஓடியது. அசுரர்களின் அறமற்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன. தாரகாசுரன் எதிர்ப்புகள் அனைத்தையும் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் களைத்தெரிந்தான். அசுரர்களின் படைபலமோ அதிகரிக்கத் தொடங்கின. அசுர குல குருவான சுக்கிராச்சாரியாரின் வழிகாட்டுதல் மூலம் படைபலத்தை பெருக்கி கொண்டான் தாரகாசுரன்.
குழந்தையாக இருந்த குமரனோ கன்னியர்கள் அறுவரின் அரவணைப்பில் அன்போடு வளர்ந்து வந்தார். குமரனை தன் மகனாக பாவித்து அவர் மீது அதிக அன்பு கொண்டு வளர்த்து வந்தனர். சிவசக்தியின் அம்சமான குமரன் கன்னியர்கள் அறுவரிடம் வளர்ந்து வருவதை நாரதர் மூலம் தேவர்கள் அறிந்தார்கள்.
இச்செய்தியை கேட்ட தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். பின்பு தேவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைலாய மலையில் இருக்கும் சிவபெருமானை காணச் சென்றனர். இவர்களின் வருகை எதற்கென்று நந்தி தேவருக்கு புரிவதற்குள் தேவர்கள் அனைவரும் சிவபெருமானையும், சக்தியான பார்வதி தேவியையும் பலவாறு போற்றி பாடினார்கள்.
உமையவள் பார்வதி தேவிக்கு என்னவென்று புரியாமல் இருந்தார். ஆனால், அனைத்தும் அறிந்த சிவபெருமான் அமைதி காத்தார். தேவர்களின் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியை கண்ட தேவிக்கு எம்பெருமானால் ஏதோ மார்க்கம் பிறந்துள்ளது எனவும், தாரகாசுரனின் அழிவு நெருங்கிவிட்டது என்பதையும் உணர்ந்தார்.
பார்வதி தேவி தாரகாசுரனின் அழிவு என்பது சிவனின் அம்சத்தினால் மட்டுமே ஏற்படும் என எண்ணிய கணத்தில் நாரத முனிவர் மூலம் அறிந்த தகவலை தேவர்கள் தேவியிடம் கூறினர். அப்போது தேவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு என்பது இல்லை.
பின் எம்பெருமான் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வரவே எம்பெருமானுடன் சரவண பொய்கையில் கன்னியர் வளர்ப்பில் வளர்ந்து வரும் தன் மகனை காண விரைந்தார்கள். சரவண பொய்கையில் வளர்ந்து வந்த குமரனை கண்ட பார்வதி தேவி, மகனே என்று அழைத்து குமரனிடம் சென்றார். குமரனோ தேவி தாங்கள் யார்? என கேட்டார். என் தாயானவர்கள் இவர்களே என ஆறு கன்னியர்களை காட்டினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக