சிவபெருமானும் கார்த்திகேயனின் விருப்பத்தை ஏற்று சிவகணங்களை வென்றுவிட்டோம் என்ற எண்ணத்தில் நிற்கும் அந்த பாலகனுக்கு தகுந்த பாடங்களை புகட்டிவிட்டு வருவாயாக எனக்கூறி தன்னுடைய புதல்வனை ஆசி கூறி அனுப்பினார்.
சிவகணங்களை தன் தாய் அளித்த தண்டாயுதத்தால் விரட்டி விட்ட கணன், வேலன் எதிரில் வருவதை கண்டு தயங்கி நின்றார். ஏன் என்றால் எதிரில் நிற்பவர் பார்வதி தேவியின் புதல்வன் அல்லவா?. இவ்வேளையில் நான் என்ன செய்யப்போகிறேன் என தன்னுடைய அன்னையை மனதில் எண்ணி குழம்பிய நிலையில் நின்று கொண்டிருந்தார்.
சிவகணங்கள் ஆறுமுகனின் வருகையை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டன. இனி கணனிற்கு தோல்வி என்பது உறுதியானது எனக் கூறினர். அவ்வேளையில் பார்வதி தேவி அனுப்பிய சக்திகளானது கணனிற்கு ஆதரவாக பெரிய உடலைக் கொண்டு பூதாகாரமாக காட்சியளித்தன.
இதனைக் கண்ட சிவகணங்கள் இவன் ஒருவனையே நம்மால் வெற்றி கொள்ள முடியவில்லையே, இதில் மேலும் இரண்டு பூதங்களா? என அஞ்சினார்கள். அவ்வேளையில் முருகப்பெருமான் அவர்களுக்கு வீரத்துடன் செயல்பட்டு அவனை வெற்றி கொள்ள வேண்டும் எனக்கூறி கணனை தாக்குவதற்கு பலவிதமான அஸ்திரங்களை அனுப்பினார்.
முருகப்பெருமான் அனுப்பிய அனைத்து அஸ்திரங்களும் கணனை அடைவதற்குள் அந்த பூதங்கள் தடுத்து அவைகளை விழுங்கின. கணனே அமர்ந்து அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஆறுமுகனுக்கு இது மிகவும் வியப்பான மற்றும் விசித்திரமான செயலாகவும் விளங்கியது. பலவிதமான முறைகளில் அதிக சக்தி கொண்ட அஸ்திரங்களை அனுப்பியும் அவை யாவும் பயனற்று போயின. ஒன்று கூட கணனை நெருங்கவில்லை.
இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பவைகள் யாவும் உணர்ந்தவர்களாக இருந்த மும்மூர்த்திகள் வினையின் அந்தப்பகுதியை கணன் நெருங்கிக்கொண்டு இருக்கின்றான். இனி நாம் செல்வதே இதற்கு உசிதமாகும் என்று கூறி கணன் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்கள்.
திருமால், கணனிடம் செய்த செயலுக்கான தவறை அறிந்து மன்னிப்பு கேட்பாயாக என்று கூறினார். அதற்கு கணன் நான் என்னுடைய கடமையை மட்டுமே புரிந்துகொண்டு இருக்கின்றேன். இதில் என்னுடைய பிழைகள் ஏதும் இல்லை என்று கூறினான். மேலும், தன்னிடம் தன் அன்னையின் ஆசியும், சக்திகளையும் கொண்ட கணன் என்னை யாராலும் வெல்ல முடியாது. ஏன்?.. இந்த மும்மூர்த்திகள் இணைந்தாலும் என்னை வெல்வது எளிதல்ல எனக்கூறினான்.
அவ்வேளையில் நாரதரோ அவன் சின்னஞ்சிறு பாலகன், அவன் அறியாமையால் இதுபோன்று நடந்து கொள்கிறான் என்று கூறி மும்மூர்த்திகளுக்கு சாந்தம் வேண்டும் என்றும், மேலும் இந்த பாலகன் கொல்லப்பட வேண்டியவன் அல்ல என்றும் கூறினார்.
ஆனால், பாலகனின் கூற்றுகளே மும்மூர்த்திகளையும் சினங்கொள்ளச் செய்தன. பின் திருமால், ஆறுமுகனுக்கு துணையாக தனது சக்ராயுதத்தை அனுப்பி கணனுக்கு துணையாக இருந்த சக்திகளை அழித்தார். திருமாலோ நம்மிடம் பலம் இருக்கின்றது என எண்ணி அதை தவறாக பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், தம் பலமே சில தருணங்களில் நம்முடைய அழிவிற்கு அழைத்துச் செல்லும் பாலகனே அதை நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறினார். இருப்பினும் கணன் அதை பொருட்படுத்தாது இருந்தான்.
தனியாக நின்ற கணனோ என்னை வெல்வது என்பது எவராலும் இயலாத செயலாகும். என் அன்னையின் பரிபூரண ஆசியுடன் உங்கள் அனைவரையும் என்னால் வெல்ல இயலும் என்று இருமாப்பு கொண்டிருந்தான். இனியும் பொறுமைக்காத்தல் இயலாது என்பதை அறிந்த சிவபெருமான் உன்னுடைய மனதில் கொண்ட அகம்பாவம் அழிந்தால் நீ எல்லோராலும் போற்றப்படுவாய் என்றார்.
எம்பெருமானின் கூற்றுகளை ஏற்காத கணன் தனது தாயின் கணவரான எம்பெருமானிடம் தனக்கு இடப்பட்ட கட்டளையை மட்டுமே நான் செய்கின்றேன். என்னுடைய பணிக்கு இடையூறாக யாராக இருப்பினும் அவரையும் நான் எதிர்த்து வெற்றி கொள்வேன் எனக்கூறி தண்டாயுதத்தை கையில் கொண்டு எம்பெருமானையும் எதிர்க்க துணிந்தான்.
இனி எவரும் என்னை கடந்து செல்ல இயலாது என்று தண்டாயுதத்தை கையில் கொண்டு அங்கிருந்த எம்பெருமானான சிவபெருமானை எதிர்த்து தன் கையில் இருந்த தண்டாயுதத்தை அனுப்பினார் கணன். சர்வ வல்லமை கொண்ட எம்பெருமானை நோக்கி அனுப்பப்பட்ட தண்டாயுதமானது அக்னியால் எரிந்து சாம்பலானது. அதைக் கண்ட கணனோ என்ன செய்வது என அறியாமல் நின்றான்.
இதுவரை பாலகன் என எண்ணி பொறுமைக்காத்த சிவபெருமான் இச்செயலால் மிகுந்த கோபம் கொண்டார். அத்தருணத்தில் எவராலும் தடுக்க இயலாத வல்லமை கொண்டவராகவும், தனது கரங்களில் இருந்த திரிசூலத்தை ஏந்தி கணனை நோக்கி அனுப்பினார். திரிசூலமானது மிகுந்த தீ ஜூவாலையுடன் சென்று கணப்பொழுதில் கணனின் சிரத்தை துண்டித்தது.
சிரம் இல்லாத உடலானது தரையில் வீழ்ந்தது. கணனின் வீழ்ச்சியானது சிவகணங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. தேவர்களும், சிவகணங்களும் சிவபெருமானை வணங்கி நின்றார்கள். ஆனால், எம்பெருமானோ அமைதியாகவே இருந்தார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக