படைப்பவரும், காப்பவருமான பிரம்மாவும், திருமாலும் மற்றும் ஏனைய தேவர்கள் என அனைவரும் ஒன்றுகூடி பார்வதி தேவி இருக்கும் இடத்திற்கு சென்றனர். அங்கு பார்வதி தேவியை பலவாறு துதித்துப் பாடினர். தாயே அகிலத்தை காப்பவரும் அனைத்து உயிர்களுக்கும் அன்னையான தாங்கள் இவ்விதம் கோபம் கொள்ளுதல் கூடாது. இதனால் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
கோபத்தை விடுத்து அனைத்து சக்திகளையும் தாங்கள் அழைத்துக்கொள்ள வேண்டும் தாயே. எங்களை படைத்தவர்களாகிய தாங்கள் அழிப்பதா? ஆகையால் தாங்கள் சாந்தம் கொண்டு அனைவரையும் காப்பீர்களாக. நாங்கள் செய்த பிழைகளை மன்னித்து எங்களை காக்க வேண்டும் தேவி என வேண்டி நின்றனர்.
ஆனால், தேவியோ அவர்களின் கூற்றுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. சக்திகள் படைத்த மும்மூர்த்திகள் தங்களின் சக்திகளை என் மகன் மீது பயன்படுத்தி தாக்கியபோது அங்கிருந்த தேவர்கள் அவர்களிடம் வேண்டி அதை தவிர்த்து இருக்கலாமே.
ஆனால், நீங்கள் அனைவரும் என் மகனை அழிக்கும் வரை கண்டு மனமும் மகிழ்ந்து நின்றீர்கள் அல்லவா. என் மகன் உயிருடன் வரும் வரை என் சக்திகளை நான் அழைத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
பிரபஞ்சத்தை காப்பவரான திருமால் இது முறையான செயல் இல்லை தேவி. ஒரு சிறு பாலகனுக்காக இந்த பிரபஞ்சத்தை அழிப்பது சரியானதல்ல. அவன் இழைத்த பிழைக்கான தண்டனையை அவன் அடைந்தான் என்று கூறினார்.
சிறு பாலகன் ஒருவனாக தனித்து நின்று தன்னுடைய தாய் இட்ட ஆணையை ஏற்று அந்தப்புறத்தில் யாவரும் நுழையா வண்ணம் காவல் காத்துக்கொண்டு இருந்தான்.
ஆனால், நீங்களோ அவனுக்கு எதிராக ஒன்று திரண்டு போரிட்டு அவனை கொன்றது என்பது முறையான செயலா? இந்த பிரபஞ்சத்தை காப்பவரான திருமால் அங்கிருந்தும் என் மகனை காக்காமல் இருந்தது ஏன்? என தேவி வினவினார்.
என் மகனான கணனை காக்காமல் இருந்தது ஏன்? என தேவி கேட்ட கேள்விக்கு, அங்கு நின்ற யாவராலும் பதில் உரைக்க முடியாமல் நின்றனர். நீங்கள் ஒன்றிணைந்து இழைத்த இப்பிழைக்காக நீங்கள் அனைவரும் பூஜிக்கப்பட வேண்டும்.
அவனே என்றும் முதற்கடவுளாக இருந்தால் மட்டுமே என்னுடைய சக்திகளை நான் திரும்ப அழைப்பேன். இல்லையேல் அதுவரை என்னுடைய சம்ஹாரம் நிகழ்ந்த யவண்ணமிருக்கும் எனக் கூறினார். தேவியின் முடிவை அறிந்து கொண்ட தேவர்கள் தேவியிடம் விடைப்பெற்று எம்பெருமானிடம் தேவியின் முடிவுகளை தெரிவித்தனர்.
தேவர்கள் அனைவரும் தேவியின் விருப்பம் நிறைவேறாவிட்டால் இந்த பிரபஞ்சம் முழுவதும் அழிவது என்பது உறுதியாகிவிடும். சர்வேஸ்வரா! தாங்கள்தான் கணனை உயிர்பித்து இந்த பிரபஞ்சத்தை காத்து ரச்சிக்க வேண்டும் என்று கூறி பணிந்து நின்றனர்.
தேவியின் முடிவினையும், தேவர்களின் வேண்டுகோளையும் கேட்ட எம்பெருமான் இது நடைபெற இயலாத செயல் ஆகும். ஏனெனில், எனது திரிசூலத்தால் கணனின் சிரமானது எரிந்து அழிந்தது. இனி கணனின் தலையை கொண்டு கணனை உயிர்பிக்க இயலாது என்று கூறினார்.
எம்பெருமானின் கூற்றுகளை கேட்ட தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் திகைத்து நின்றனர். இதற்கு வேறு ஏதாவது உபயம் உள்ளதா என மும்மூர்த்திகளிடம் பணிந்தனர். இந்த பிரபஞ்சத்தை காக்கும் திருமாலோ கணனை உயிர்பிக்க ஒரு உபயம் உள்ளது எனக் கூறினார்.
அதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் உயிர் பெற்றது போல் மகிழ்ச்சி கொண்டனர். தேவர்களின் அரசனான இந்திரன் என்ன உபயம் என்று கேட்டார்.
அதற்கு திருமாலோ கணனின் சிரத்தை நம்மால் மீண்டும் பெற இயலாது. ஆனால், கணனுக்கு வேறு உயிரினத்தின் சிரத்தை கொண்டு அவனை உயிர்பிக்க இயலும் என்று கூறினார். இதைக்கேட்ட தேவேந்திரன் இக்கணமே நான் வேறு உயிரினத்தின் சிரத்தை கொண்டு வருவதாக கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக