திங்கள், 27 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 66


தேவேந்திரன் இக்கணமே வேறொரு உயிரினத்தின் சிரத்தை கொண்டு வருவதாக கூறினார். ஆனால், அதில் சில நிபந்தனைகள் உள்ளது தேவேந்திரனே! என்று திருமால் கூறினார். அதற்கு தேவேந்திரன் என்ன நிபந்தனைகள் உள்ளன தேவா எனக் கேட்டார்.

அதற்கு சிவபெருமான் நீர் எந்த உயிரினத்தின் சிரத்தை பெற போகின்றாயோ அந்த சிரத்தை அளிக்கும் உயிரினம் மன மகிழ்ச்சியுடன் அளிக்க வேண்டும். மேலும், அந்த உயிரினம் வடதிசையை நோக்கி இருக்க வேண்டும் என்று கூறினார்.

எம்பெருமானின் கூற்றுகளை கேட்டு அதற்கு ஏற்றாற்போல் தேவர்கள் இந்த பிரபஞ்சத்தில் வடதிசையை நோக்கி உள்ள உயிரினத்தை தேடிச் சென்றனர். ஆனால், எந்த உயிரினங்களும் வடதிசையை நோக்கி இல்லாமல் இருந்தன.

அதனால், தேவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தனர். இருந்தாலும் அவர்கள் முயற்சிகளை விடாமல் தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் எம்பெருமானின் கூற்றுக்கு ஏற்றாற்போல் வடதிசையை நோக்கி ஒரு உயிரினம் படுத்துக்கொண்டு இருந்ததை கண்டனர்.

ஆனால், படுத்துக்கொண்டு இருந்த உயிரினமோ மனித இனமின்றி விலங்கினத்தை சேர்ந்த புனர் முகம் (ஆண் யானை) ஆகும். பல அரிய செயல்கள் செய்ய வல்ல தேவர்கள் அந்த புனர் முகத்திடம் பணிந்து நின்றனர்.

வந்தவர்கள் யார் என்று அறிந்த புனர் முகம் வல்லமை கொண்ட தாங்கள் என்னிடம் பணிந்து நிற்பதா?. நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டது. தேவர்களோ இந்த பிரபஞ்சத்தை அழிவில் இருந்து காக்கும் வல்லமை தங்களிடம் மட்டுமே உள்ளது என்று கூறினார்கள். அவர்களின் கூற்றுகளை கேட்ட புனர் முகனோ என்னிடமா? என புரியாமல் நின்றது.

தேவர்களோ புனர் முகத்திற்கு புரியும் விதமாக கணனின் உருவாக்கமும், அவரின் அழிவும், அதனால் தேவி கொண்டுள்ள சினத்தையும், அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவைப் பற்றியும், அதனை தடுக்கும் பொருட்டு காப்பவரும் மற்றும் அழிப்பவருமான திருமால் மற்றும் எம்பெருமான் கூறிய கூற்றுகளையும் எடுத்துக் கூறினர்.

தேவர்களின் கூற்றுகளை கேட்ட புனர்முகன் மிகவும் மகிழ்ந்தான். நான் என்ன தவம் செய்தேனோ? இது யாருக்கும் கிடைக்காத அரிய வரம் ஆகும். நான் மனமுவந்து எனது சிரத்தை அளிக்கின்றேன் என்றார். பின்பு தேவர்கள் புனர்முகனின் சிரத்தை கொய்தனர்.

பின்பு கொய்த புனர்முகனின் சிரமானது கணனின் உடல் இருக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்பு எம்பெருமான் புனர்முகனின் சிரத்தை தம் கைகளில் ஏந்தி சிரம் இல்லாத கணனின் உடலோடு பொருத்தி கணனுக்கு உயிர் அளித்தார். உயிர் பெற்று எழுந்த கணணை பிரம்ம தேவர் தம் கரங்களால் வாரித் தூக்கிக் கொண்டார்.

உயிர் பெற்று எழுந்த கணன் பிரம்ம தேவரின் கைகளை விடுத்து கீழே இருந்த தண்டாயுதத்தை எடுத்து மீண்டும் சண்டைக்கு தயாரானான். ஆனால் இம்முறை அவருடன் போர் புரிந்த அனைவரும் போர் புரியாது வணங்கி நின்றார்கள். இங்கு நிகழும் யாவையும் அறியாவண்ணம் இருந்தார் கணன்.

எம்பெருமான் பல அரிய நன்மைகளையும் அளிக்கக்கூடிய சஞ்சீவி முதலிய பல மூலிகைகளை கொண்ட துரோணசலம் என்ற குன்றை எண்ணினார். எம்பெருமான் நினைத்த கணப் பொழுதில் அங்கு அந்த குன்றானது வந்தது. அந்த குன்றில் இருந்து உயிர்பிக்கும் வல்லமை கொண்ட பல ஆற்றல்கள் நிறைந்த, குளிர்ந்த காற்றானது அவ்விடம் முழுமையும் வீசியது.

போரில் உயிரிழந்த தேவர்கள் மற்றும் முனிவர்கள் என அனைவரும் உயிர் பெற்றனர். உயிர் பெற்று எழுந்த அனைத்து தேவர்களும் கணனின் வீரத்தையும், பலத்தையும் கண்டு மகிழ்ந்தனர். எடுத்த காரியத்தில் எவ்விதமான இன்னல்கள் ஏற்பட்டாலும் அதை எதிர்த்து போராடிய உனது சாதுர்யமான செயலானது வியப்பிற்குரியது என்று கூறி கணனை காண காத்திருக்கும் தேவி பார்வதியிடம் அழைத்துச் சென்றனர்.

சிவபெருமானால் உயிரிழந்த தனது மகன் தேவர்களோடு உயிருடன் வருவதைக் கண்ட பார்வதி தேவியின் விழிகளில் இருந்த கோபமானது முழுவதும் அகன்றது. அங்கு வந்த கணனை அரவணைத்து அவரது நெற்றியில் முத்தமிட்டார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்