Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜனவரி, 2020

சிவபுராணம்..!பகுதி 68

  தேவர்களின் இன்னல்களை உணர்ந்த பிரம்ம தேவர், அசுரர்கள் மூவரையும் எளிதாக அழிப்பது என்பது இயலாத காரியம். ஆனால், மிகவும் கடினமான முறையினால் மட்டுமே அழிக்க இயலும் என்றார். மேலும், அவர்கள் கோட்டைகளை பல காலங்கள் தவமிருந்து பெற்றுள்ளனர்.

வரம் அளித்த நானே அவர்களை அழிப்பது என்பது முறையல்ல. தேவர்களாகிய நீங்கள் அவர்களிடம் போரிட்டு வெற்றிக் கொள்வதே சிறந்ததாகும் என்று கூறினார். நாங்கள் போரிட்டு அவர்களை வெல்ல வேண்டும் என்றால் பல யுகங்கள் பொறுமையோடு காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அசுரர்கள் தங்களிடம் வாங்கிய வரத்தால் எங்களின் பலமானது குறைந்து கொண்டோ இருக்கின்றது என்று தேவர்கள் கூறினார்கள்.

தேவர்களின் கூற்றுகளை கேட்ட பிரம்ம தேவர் அசுரர்களை என்னால் அழிக்க இயலாது. ஆனால், அவர்களை அழிப்பதற்கான உபாயத்தை நான் உங்களுக்கு கூறுகிறேன் என்றார்.

பிரம்ம தேவர் அளிக்கும் உபாயத்தை கேட்பதற்காக தேவர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருந்தனர். பிரம்ம தேவர், அவர்களை அழிக்கும் வல்லமையும், உங்களை இன்னல்களில் இருந்து காக்கக்கூடியவரும் ஒருவரே. அவர்தான் எம்பெருமானான சிவபெருமான். உங்களின் இன்னல்களை களைக்க வல்லவர் அவர் மட்டுமே என்றார்.

கைலாயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசித்த தேவர்கள் அவரை வணங்கி தாங்கள் பிரம்ம தேவரை காணச் சென்றது பற்றியும், பிரம்ம தேவர் அருளியவற்றையும் கூறினார்கள்.

பின்பு திரிபுரர்களை அழித்து எங்களை காத்து ரச்சிக்க வேண்டும் என தேவர்கள் எம்பெருமானிடம் பணிவுடன் தங்களின் கோரிக்கையை வைத்தனர்.

தேவர்களின் கோரிக்கைகளை கேட்ட எம்பெருமான் அவர்களிடம் திரிபுர அசுரர்களை என்னால் வதம் செய்ய இயலாது என்று கூறினார். ஏனென்றால், அவர்கள் இறைவன் மீது கொண்டுள்ள சிறந்த பக்தியும், அளவற்ற நம்பிக்கையும் கொண்டுள்ளார்கள். அவர்களை என்னால் இக்காலத்தில் வதம் செய்ய இயலாது.

அவர்கள் இறை எண்ணங்கள் விடுத்து அழிவு பாதையில் செல்லும் காலத்தில் மட்டுமே அவர்களை என்னால் அழிக்க முடியும் என்று கூறினார். இதனால் தங்களை இந்த இன்னல்கள் மிகுந்த சூழலில் இருந்து எம்பெருமான் காப்பாற்றுவார் என எதிர்பார்த்த தேவர்கள் மனம் வருந்தினார்கள்.

பின்பு தேவர்கள், சர்வங்களை உள்ளடக்கிய தாங்கள் இவ்விதம் கூறினால் நாங்கள் யாது செய்ய இயலும் சர்வேஸ்வரா என்றனர். எம்பெருமானோ! உங்களின் இன்னல்களை போக்கவும், திரிபுர அசுரர்களையும் அழிக்கவும், வல்லவரான மாய கலையில் மாயாவியாக விளங்கும் திருமாலிடம் சென்று உங்கள் இன்னல்களை கூறி உபாயம் ஏதேனும் உள்ளதா? என அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயலாற்றுங்கள் என்று கூறினார்.

பிறகு தேவர்கள் எம்பெருமானிடம் விடை பெற்று வைகுண்டத்தில் வீற்றிருக்கும் திருமாலை காண சென்றனர். ஆதிசேஷன் மீது துயில் கொண்ட திருமாலையும், அவரின் பாதங்களில் அமர்ந்திருந்த லட்சுமி தேவியையும் கண்டு வணங்கினர்.

பின்பு தாங்கள் வந்த நோக்கத்தினையும், திரிபுர அசுரர்களால் அடைந்த இன்னல்களையும் சர்வேஸ்வரன் அதற்கு அளித்த உபாயத்தையும் தேவர்கள் கூறினார்கள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக