Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜனவரி, 2020

பீஷ்மரின் தியாகம்...!


தேவவிரதன், தேரோட்டியை அழைத்து தந்தையின் கவலைக்கான காரணத்தை கேட்டான். தேரோட்டி அரசே! தங்களின் தந்தை ஓடம் செலுத்தும் செம்படவப் பெண்ணை விரும்புகிறார். செம்படவ அரசனின் மகளின் பெயர் சத்தியவதி. அவர் அப்பெண்ணின் தந்தையிடம், தங்களின் மகளை எனக்கு மணமுடிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு செம்படவன், உங்களுக்கு மணமுடிக்க வேண்டுமானால் என் மகளின் குழந்தையே நாடாள வேண்டும் என நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனையை ஏற்க முடியாமல் மன்னர் வருத்ததுடன் திரும்பி விட்டார் என்றான். தந்தையின் இந்நிலையைக் கண்ட தேவவிரதன், செம்படவ பெண்ணை எப்படியாவது தந்தைக்கு திருமணம் செய்ய வேன்டும் என எண்ணினான்.

உடனே கங்கை நதிக்கரைக்குச் சென்று செம்படவ அரசனை சந்தித்தான். செம்படவ அரசன் தேவவிரதனை மரியாதையுடன் வரவேற்றான். தேவவிரதன் செம்படவனிடம், உங்களின் மகளை என் தந்தைக்கு திருமணம் செய்து தர வேண்டும். அதற்காக தான் இங்கு வந்துள்ளேன் என்றான். செம்படவன், அரசே! எனது மகளை தங்களின் தந்தைக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், எனது மகளின், குழந்தையே அரசாள வேண்டும். இந்த நிபந்தனை தங்களுக்கு சம்மதம் என்றால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறேன் என்றான். தேவவிரதன், செம்படவ அரசே! உங்களின் மகளுக்கு பிறக்கும் மகனே நாடாளுவான். அவனே அரசுரிமை ஏற்பான் என நான் உறுதியளிக்கிறேன். நீங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றான்.

 செம்படவன், அரசே! நீங்கள் அரச குலத்தில் பிறந்தவர். நீங்கள் கொடுக்கும் வாக்குறுதியை மீற மாட்டீர்கள். உங்களின் மேல் எனக்கு முழு நம்பிக்கையும் உள்ளது. ஆனால் உங்களுக்கு பின்னால் வரும் சந்ததியினர் உங்களின் வாக்குறுதியை மீறலாம் அல்லவா? என்றான். அதற்கு தேவவிரதன், செம்படவ அரசே! நான் எனது அரசுரிமையை சற்று முன் துறந்துவிட்டேன். இப்பொழுது நான் சந்ததியும் துறக்க சபதம் மேற்கொள்கிறேன். இன்று முதல் நான் பிரம்மச்சாரிய விரதத்தை மேற்கொள்கிறேன். நான் உயிர் உள்ளவரை என் சந்ததி உற்பத்தி ஆகாது. இந்த தியாகத்தை நான் என் தந்தைக்காக செய்கிறேன். இது என் சத்தியம். இப்பொழுது என் மேல் எந்த சந்தேகம் இல்லாமல் உங்கள் மகளை என் தந்தைக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்றான்.

அதன் பின் செம்படவ அரசன், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். தேவவிரதனின் இந்த சபதத்தையும், அவனின் மன உறுதியையும் அனைவரும் போற்றி புகழ்ந்தனர். அன்று முதல் அனைவரும் தேவவிரதனை பீஷ்மர் என்று அழைத்தனர். பீஷ்மர், பெரியோர்களின் ஆசியுடன் செம்படவப் பெண் சத்தியவதியை அழைத்துக்கொண்டு அரண்மனை வந்தார். செம்படவ பெண்ணை கண்ட சந்தனு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். அங்கு பீஷ்மர் ஏற்ற சபதத்தை அறிந்து சந்தனு வருத்தம் அடைந்தார். அதன் பின் சந்தனு பீஷ்மருக்கு ஒரு வரம் அளித்தார். இம்மண்ணுலகில் எவ்வளவு காலம் நீ உயிருடன் இருக்க விரும்புகிறாயோ அவ்வளவு காலம் நீ உயிருடன் வாழ்வாய். எமன் உன்னை நெருங்கமாட்டான் என்றான்.

சத்தியவதிக்கும் சந்தனுக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. சேதி நாட்டு அரசனான உபரிசரஸ் என்னும் மன்னனின் மகள் தான் சத்தியவதி. செம்படவ அரசனால் வளர்க்கப்பட்டவள். சந்தனு மற்றும் சத்தியவதிக்கு முதலில் சித்திராங்கதன் என்னும் மகன் பிறந்தான். அதன் பின் விசித்திரவீரியன் என்னும் மகன் பிறந்தான். சில வருடங்கள் கழித்து சந்தனு மரணம் அடைந்தான். அதன் பிறகு சித்திராங்கதனை நாட்டின் அரசனாக பீஷ்மர் முடிசூட்டினார். காந்தர்வ நாட்டின் அரசர் பெயரும் சித்திராங்கதன் ஆகும். அதனால் காந்தர்வ நாட்டின் அரசன், சித்திராங்கதன் என்னும் பெயரை மாற்றிக் கொள். அப்படி உன் பெயரை மாற்றிக் கொள்ளாவிட்டால் என்னுடன் போரிட வா என அழைப்பு விடுத்தான். இதனால் காந்தர்வ நாட்டின் அரசனுடன் போர் புரிய நேரிட்டது.

 இருவருக்கும் நடந்த கடும் போரில் சந்தனுவின் மகன் சித்திராங்கதன் மாண்டான். சந்தனுவின் இரண்டாவது மகனான விசித்திரவீரியனை நாட்டின் அரசனாக பீஷ்மர் முடிசூட்டினார். சில நாட்கள் கழித்து பீஷ்மர், விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அச்சமயத்தில் காசி நாட்டின் மன்னன் தன் மகள் மூவருக்கும் சுயம்வரம் நடத்துவதை அறிந்தார். காசி நாட்டின் மன்னன் மகள்களின் பெயர் அம்பை, அம்பிகை, அம்பாலிகை. உடனே பீஷ்மர் காசி நாட்டுக்குச் சென்று சுயம்வரத்தில் கலந்துக் கொண்டார். சுயம்வரத்தில் பல நாட்டின் அரசர்களும் கலந்துக் கொண்டனர். அங்கு சில அரசர்கள் பீஷ்மரை பார்த்து, நரை கூடிய வயதில் உங்களுக்கு திருமண ஆசையா? எனக் கூறி ஏளனம் செய்தனர்.

இதனால் கடும்கோபம் அடைந்த பீஷ்மர், காசி மன்னனின் மூன்று மகள்களையும் வலுகட்டாயமாக இழுத்துச் சென்றார். இதை பார்த்த பல மன்னர்கள் பீஷ்மரை தடுக்க முயன்றனர். அவர்கள் அனைவரும் பீஷ்மரிடம் தோற்று போயினர். அப்பொழுது சால்வ நாட்டு மன்னன் சால்வன், பீஷ்மரிடம் கடும் போர் புரிந்தான். முடிவில் சால்வநாட்டு மன்னன் சால்வன் பீஷ்மரிடம் தோற்று போனான். அதன் பிறகு பீஷ்மர் அப்பெண்களை தன் மகள்கள் போல் அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் வந்தடைந்தார். விசித்திரவீரியனுக்கு விரைவில் திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டார். அப்பொழுது அப்பெண்களில் ஒருவளான அம்பை, நான் சால்வ நாட்டு மன்னன் சால்வனை விரும்புகிறேன். நான் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் எனக் கூறினாள்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக