புதன், 29 ஜனவரி, 2020

விசுவாமித்திர முனிவரின் கோபம்நான்கு குமாரர்களும் வளர்ந்தார்கள். ஐந்து வயதுக்கு மேல் நான்கு குமாரர்கள் வசிஷ்டருடைய ஆசிரமத்தில் வளர்ந்து கலைகளை பயின்றார்கள். எல்லா கலைகளிலும் வல்லவராக விளங்கினார்கள். தசரத சக்ரவர்த்தி அரசவையில் சுந்தர வடிவுடன் வீற்றிருந்தார். வசிஷ்டர், சுமந்திரர், யாபாலி முதலிய அறிஞர்கள் அவரை சூழ்ந்து அமர்ந்து இருந்தார்கள்.

விசுவாமித்திர முனிவர் அங்கு எழுந்தருளினார். கடைக்காவலன் ஓடிவந்து மன்னரை வணங்கி, விசுவாமித்திர முனிவர் வருகின்றார் என்னும் செய்தியை கூறினான். தசரத சக்ரவர்த்தி விசுவாமித்திர முனிவரை சந்தனங்களாலும், மலர்களாலும் பாதபூஜை செய்தார். தசரதா! வசிஷ்ட முனிவருடைய கருணை உனக்கு இருப்பதால் எல்லா காரியங்களும் சித்தியாகும். 

உன்னை போன்ற உத்தம அரசனை எங்கும் காண இயலாது. அரசர் பெருமானே! என்னைப்போன்ற முனிவர்களும், தேவர்களும் இடையூறு வந்தால் தெய்வங்களிடம் முறையிடுவோம். நிறைவேறாத குறைகளை அயோத்தி மாநகரம் வந்து உன்னிடம் முறையிடுவோம். எங்களுக்கு உன்னைத்தவிர புகலிடம் ஏது, என்று விசுவாமித்திர முனிவர் கூறினார்.

தசரதர் அகமும், முகமும் மலர்ந்தது. குருநாதா! நான் தங்களுடைய அடிமை. நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும், கட்டளையிடுங்கள், என்றார். மன்னர் பெருமானே! உலக நலன் கருதி நான் தருக்கள் நிறைந்த குளிர்ந்த கானகத்தில் யாகம் செய்தேன். அதனை அரக்கர்கள் தடுத்து இடையூறு செய்கின்றார்கள். அந்த வேள்வியைக் காவல் புரிய ஒருவனை அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

மன்னவனே! சாமான்யமான போர் வீரனால் வேள்வியை காவல் புரிய முடியாது. ஐயனே! தங்கள் அடியேன் வருகின்றேன். வேந்தனே! உன்னாலும் முடியாது, என்றார். உன்னை விட பல மடங்கு சிறந்தவன் ஒருவன் இருக்கின்றான் அவனை அனுப்புக. குருநாதா! அயோத்தியில் என்னைப் பார்க்கிலும் சிறந்தவன் இருக்கின்றானா? குருநாதா! சுமந்திர், மதிநுட்பம் உடையவர் கூறியதைக் கேட்டீரா, என்னைவிட சிறந்தவன் இல்லாததை இருப்பதாக எண்ணி கூறுகின்றீர்.

தசரதா! உன்னைப் பார்க்கிலும் ஓராயிரம் கோடி மடங்கு உயர்ந்தவன், அயோத்தியில் இருக்கிறான். அவனை அனுப்பு. நான் ஒருபோதும் இல்லாத ஒன்றை இருப்பதாக கூறமாட்டேன். என் வாக்கு சத்தியம். விசுவாமித்திரர் கூறியதை கேட்டு தசரதர் சிறிது சிந்தித்தார். என்னைப் பார்க்கிலும் சிறந்தவர் வசிஷ்ட முனிவர் தான். தாங்கள் அவரை அழைத்துப் போங்கள், என்றார் சக்கரவர்த்தி. 

விசுவாமித்திரர் புன்னகைத்தார்! நான் கூறியவர் வசிஷ்டர் முனிவர் அன்று. மன்னவனே, நீ பெற்ற நான்கு செல்வர்களும் அரிய ஆற்றல் படைத்தவர்கள். அதில் இராமனை அனுப்புக என்றார். இராமனை அனுப்பு என்ற சொல் மன்னவனை வாட்டி வதைத்தது. கவலையில் ஆழ்ந்தார். 

சக்கரவர்த்தி விசுவாமித்திரருடைய திருவடியில் வீழ்ந்தார். குருநாதா! இராமனோ இளம் பாலகன், போர் முகம் அறியாதவன். அடியேன்! பல போர்களில் வெற்றி பெற்றவன். அரக்கர்களை கொன்று வேள்வியை முடித்துக் கொடுப்பேன் என்றார், தசரத சக்கரவர்த்தி. விசுவாமித்திர முனிவர் வெகுண்டு எழுந்தார். அவருடைய கோபக்கனல் உலகங்களை வெதுப்பியது. நிலம் நடுங்கியது, சராசரங்களெல்லாம் அசைந்தன.

விசுவாமித்திர முனிவரின் சீற்றத்துக்கு அஞ்சிய வசிஷ்ட முனிவர் தசரதரை பார்த்து மன்னவனே! விசுவாமித்திரருடன் இராமனை அனுப்பி வையுங்கள். இதனால் இராமனுக்கு நன்மை உண்டாகும். என் வார்த்தையைத் தட்ட வேண்டாம் என்று கூறினார், வசிஷ்ட முனிவர். தசரதர் இராமனையும், இலட்சுமணனையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டார். சுமந்தரர், அரண்மனைக்கு சென்று கௌசலையிடம் கூறி இராமனை அழைத்து வந்தார். அடுத்து என்ன நடந்ததென்று நாளை பார்ப்போம்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்