வியாழன், 30 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 69  தேவர்கள் கூறியதைக் கேட்ட திருமால், தேவர்களிடம் நீங்கள் உரைப்பதும், அந்த அசுரர்களால் நீங்கள் அடைந்த இன்னல்கள் அனைத்தும் மெய்யே.

ஆனால், நீங்கள் உரைப்பது போன்று அவர்களை வதம் செய்வதற்கான சாத்தியம் என்பது இல்லையே. ஏனெனில், திரிபுரத்தை ஆள்வது அசுரர்களாக இருப்பினும் அவர்கள் எந்த குற்றமும் இழைக்கவில்லையே. அவ்விதம் இருக்க அவர்களை தண்டிப்பது என்பது எவ்விதம் சிறந்ததாகும் என்று கூறினார். திருமால் இவ்விதம் உரைப்பதை சற்றும் எதிர்பாராத தேவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் நின்றனர்.

மும்மூர்த்திகளாலும் எதுவும் செய்ய இயலாத அசுரர்களை நாம் போரிட்டு அழிப்பது என்பது சாத்தியமன்று என நினைத்து வருந்தினார்கள். பின்பு தேவர்களின் வேந்தனான இந்திரன், திருமாலிடம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களை காப்பவரான தாங்கள் தான் எங்களின் துயரத்தை நீக்க எங்களுக்கு ஒரு உபாயத்தை அளித்து வழிகாட்ட வேண்டுமென மிகவும் பணிவுடன் கூறினார்.

பின்பு, திருமாலோ திரிபுர அசுரர்களை அழிப்பது என்பது நம்மால் இயலாத செயலாகும். ஆகவே, அவர்களை அழிக்க சிவபெருமானை எண்ணி பூஜித்தால் உங்களின் வலிமையும் அதிகரிக்கும். மேலும், உங்களின் எண்ணங்களும் நிறைவேறும் எனக் கூறினார்.

திருமால் உரைத்த செய்தியை கேட்ட தேவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். திருமாலின் ஆலோசனையின்படி அவரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தேவர்கள் அனைவரும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தும், பூஜை செய்தும் எம்பெருமானின் திருவருளை பெற முடிவு செய்தனர்.

ஆனால், தேவர்களோ திருமாலையே முன்னின்று இந்த பூஜையை எவ்விதமான குறைகளின்றி முழு நிறைவுடன் நிறைவேற்றி தருமாறு வேண்டினார்கள்.

திருமாலும் அவர்களின் வேண்டுதலை ஏற்று சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தூய உள்ளத்துடன் தேவர்களின் நலனுக்காக சிவபெருமானை எண்ணி தியானித்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்தார். தேவர்களும் அவருடன் இணைந்து தங்களின் இன்னல்களை போக்க எம்பெருமானை எண்ணி பூஜை செய்தனர்.

தேவர்களும், திருமாலும் இணைந்து எம்பெருமானை எண்ணி பூஜைகளை செய்தனர். பூஜையின் இறுதியில் சிவபெருமானின் அருளால் சிவலிங்கத்தில் இருந்து ஆயுதங்கள் பலவற்றை ஏந்திய எண்ணிலடங்கா பூதங்கள் உருவாகின.

அந்த பூதங்கள் யாவும் திருமால் மற்றும் தேவர்களை வணங்கி அவர்களை நோக்கி தாங்கள் யாது செய்ய வேண்டும் என பணிந்து நின்றன.

சிவபெருமானின் அருளும், ஆசியும் உடைய பூதகணங்களே!! இக்கணமே நீங்கள் அனைவரும் சென்று இன்னல்கள் பலவற்றை உருவாக்கும் தன்மை கொண்ட திரிபுரத்தையும், அதை ஆளும் அசுரர்களையும் எரித்து, அழித்து விட்டு வாருங்கள் என்று திருமால் கூறினார்.

ஆனால், பூதகணங்களோ எங்கும் செல்லாமல், எந்தவிதமான அசைவும் இன்றி அவ்விடத்திலேயே நின்றதை திருமால் கண்டார். ஏன்? இன்னும் செல்லாமல் இருக்கின்றீர்கள். இப்போதே சென்று முப்பட்டணங்களை அழித்து விட்டு வாருங்கள் என்றார் திருமால். அதற்கு பூதகணங்கள், பிரபுவே எங்கள் அனைவரையும் மன்னித்தருள வேண்டும். நீங்கள் இட்ட பணியை எங்களால் செய்ய இயலாது என்று கூறினர்.

ஏன்? உங்களால் இச்செயலை செய்ய இயலாது என்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற்றவர்கள். உங்களால் செய்ய இயலாதது எதுவும் இல்லை என்று தேவர்களின் வேந்தனான இந்திரன் கூறினார். அதற்கு பூதகணங்கள் இல்லை பிரபு, நீங்கள் கூறிய திரிபுரத்தை ஆட்சி செய்யும் அசுரர்கள் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். மேலும், அப்பட்டிணத்தில் இருப்போர் அனைவரும் எம்பெருமானுக்கான பூஜைகளை எவ்விதமான குறைவின்றி செய்து வருகிறார்கள்.

அசுரர்களான அவர்கள் எவ்வளவு பாவம் செய்தவர்களாக இருப்பினும் சிவபூஜை செய்வோரை ஆதவன் ஒளியில் இருள் மறைவது போல, அவர்கள் செய்த பாவங்களும் அழியத் தொடங்கும். அதனால்தான் எங்களால் அந்த திரிபுர அசுரர்களை அழிக்க இயலாது என்று கூறினோம் என்று பூதகணங்கள் கூறினர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்