Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஜனவரி, 2020

அம்பையின் தவம்...!

 பீஷ்மர், பெண்ணே! உன் மனம் சௌபல நாட்டு மன்னன் சால்வனை விரும்பினால் நீ அவனையே திருமணம் செய்துக் கொள்ளலாம். உனக்கு தடை ஏதும் இல்லை எனக் கூறினார். அதன் பிறகு அம்பை சௌபல நாட்டு மன்னனை தேடிச் சென்றாள். மன்னன் சால்வனை சந்தித்த அம்பை, தனது விருப்பத்தைக் கூறி இருவரும் திருமணன் செய்துக் கொள்ளலாம் எனக் கூறினாள். சால்வன், பெண்ணே! உன்னை பீஷ்மர் கவர்ந்து சென்று அவரது அரண்மனையில் தங்க வைத்துள்ளார். நான் மற்றவரால் கவரப்பட்டு, அவர்களிடம் இருந்து திரும்பி வந்த பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன். அதனால் நீ இங்கிருந்து செல்லலாம் எனக் கூறினான். சால்வனின் இந்த முடிவினால் ஏமாற்றமடைந்த அம்பை, அஸ்னாபுரத்திற்கு திரும்பிச் சென்றாள்.

 அங்கு பீஷ்மரை சந்தித்து, சால்வனின் கூறிய பதிலை கூறிவிட்டு, என்னை சாஸ்திர சம்பரதாயத்தின்படி திருமணம் செய்துக் கொள்ளுமாறு கூறினாள். பீஷ்மர், பெண்ணே! நான் பிரம்மச்சர்யத்தை மேற்கொண்டிருப்பவன். அதனால் உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள இயலாது எனக் கூறி மறுத்து விட்டார். சால்வனிடமும், பீஷ்மரிடமும் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி மாறி மாறி கேட்டு ஆறு வருடங்கள் கழிந்தது. கடைசியில் அம்பை, இமயமலை சாரலுக்குச் சென்று, அங்கு பாகூத நதிக்கரையில், கால் கட்டை விரலால் ஊன்றி நின்று பன்னிரண்டு வருடங்கள் கடும் தவம் புரிந்தாள். தவத்தின் பயனாய் முருக பெருமான் அம்பைக்கு காட்சி அருளினார். முருகன், அம்பையிடம் ஒரு மாலையைக் கொடுத்து, இந்த மாலையால் உன் துன்பம் நீங்கும். இந்த தாமரை மாலையை யார் அணிகின்றாரோ அவரால் பீஷ்மர் மரணமடைவார் எனக் கூறிவிட்டு மறைந்தார்.

 பிறகு அம்பை அந்த மாலை எடுத்துக் கொண்டு பல அரசர்களிடம் சென்று, இந்த மாலையை அணிபவர் பீஷ்மரை கொல்லும் ஆற்றல் பெற்றவர் ஆவார். பீஷ்மரை கொல்பவரையே நான் திருமணம் செய்துக் கொள்வேன் எனக் கூறினாள். பீஷ்மருக்கு பயந்து பல அரசர்கள் அந்த மாலையை வாங்கி கொள்ள மறுத்து விட்டனர். ஆனால் அம்பை தன் முயற்சியை கைவிடாமல் இந்த மாலையை யாராவது வாங்கிக் கொள்ளுங்கள் என பல மன்னர்களிடம் வேண்டினாள். மாலை வாங்கி அணிந்து கொள்ள யாரும் முன் வாராமல் பல ஆண்டுகள் கழிந்தது. இருப்பினும் அம்பை தன் முயற்சியை கைவிடவில்லை. கடைசியில் அம்பை, பாஞ்சாலா நாட்டு அரசன் துருபதனை சந்தித்து தன் துன்பங்களை கூறி இந்த மாலையை அணிந்துக் கொள்ளுமாறு வேண்டினாள்.

 ஆனால் துருபதன், பீஷ்மருடன் போராடி வெற்றி பெறும் ஆற்றல் எனக்கில்லை எனக் கூறி மறுத்துவிட்டார். எந்த மன்னனும் மாலையை அணிந்து கொள்ள முன் வராத நிலையில் அம்பை, அந்த மாலையை துருபதனின் அரண்மனையில் போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். இதைப் பார்த்த துருபத மன்னன், பெண்ணே! இந்த மாலையை எடுத்துச் செல் எனக் கூறியும் அவள் செவிகளில் வாங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

 என்ன செய்வதென்று தெரியாத துருபதன் அந்த மாலையை தன் அரண்மனையில் வைத்து காத்து வந்தான். அங்கிருந்து சென்ற அம்பை, ஒரு காட்டிற்கு சென்று தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் தன் துன்பங்களை கூறினாள். அந்த முனிவர், பரசுராமரை சென்று சந்திக்கும்படி கூறினார். அதன் பிறகு அம்பை அங்கிருந்து பரசுராமரை தேடிச் சென்றாள். பரசுராமரை சந்தித்த அம்பை தன் துன்பங்களை கூறி, அதனை போக்குமாறு வேண்டிக் கொண்டாள். அதன் பிறகு பரசுராமர், பீஷ்மரை சந்தித்து அம்பையை திருமணம் செய்துக் கொள்ளும் படி கூறினார். ஆனால் பீஷ்மர் திருமணம் செய்துக் கொள்ள மறுத்துவிட்டார். இதனால் கோபடைந்த பரசுராமர் பீஷ்மருடன் போர் புரியச் சென்றார். இருவரும் சமமான ஆற்றல் பெற்றவர். இருவரும் சளைக்காமல் போர் புரிந்தனர்.

 கடைசியில் பரசுராமர் போரில் இருந்து விலகிச் சென்றுவிட்டார். இதிலும் தோல்வி அடைந்த அம்பை, சிவப்பெருமானை வேண்டி கடும் தவம் இருந்தாள். அம்பையின் தவத்தை மெச்சி சிவபெருமான், அம்பை முன் தோன்றினார். அம்பை, சிவபெருமானிடம் தன் துன்பங்களை கூறினாள். சிவபெருமான், பெண்ணே! இப்பிறவியில் உனது கோரிக்கைகள் நிறைவேறாது. அடுத்த பிறவியில் உன்னை காரணமாகக் கொண்டு பீஷ்மருக்கு மரணம் ஏற்படும் எனக் கூறிவிட்டு மறைந்தார். இப்பிறவியில் ஈடேறாத செயலை மறுபிறவியில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அம்பை, தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாள்.

மறுபிறவியில் அம்பை துருபதனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு சிகண்டி என்று பெயர் சூட்டினர். பல வருடங்கள் கழிந்தது. ஒரு முறை சிகண்டி அரண்மனையில் பாதுகாப்பாக வைத்திருந்த மாலையை எடுத்து தன் கழுத்தில் போட்டுக் கொண்டாள். இதைப் பார்த்த துருவதன், பீஷ்மருக்கு பயந்து தனது மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். அதன்பிறகு சிகண்டி தவ வாழ்க்கையை மேற்கொண்டாள். ஒரு முறை இஷிகர் என்னும் முனிவருக்கு சிகண்டி பணிவிடை செய்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது முனிவர் சிகண்டியிடம், கங்கை ஆறு உற்பத்தி ஆகும் இடத்தில் விபஜனம் என்னும் விழா நடைப்பெற உள்ளது. அவ்விழாவிற்கு வரும் தும்புரு என்னும் மன்னனுக்கு பணிவிடை செய்தால் உனது எண்ணங்கள் நிறைவேறும் என்றார்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக