Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஜனவரி, 2020

கானகம் செல்லும் இராமர் இலட்சுமணர்

சுமந்திரர் இராமனையும், இலட்சுமணனையும் அழைத்துக்கொண்டு வந்தார். வசிஷ்டர், விசுவாமித்திரர் மற்றும் தந்தையாரின் திருவடியில் இராமர் வீழ்ந்து வணங்கினார். தசரதர் இராம இலட்சமணரின் கரங்களைப் பற்றி விசுவாமித்திரருடைய கரத்தில் வைத்து, குருநாதா! இவர்களுக்கு தாய், தந்தை, குரு எல்லாம் நீங்கள் தான். அறுபதினாயிரம் ஆண்டுகள் இவர்களைப் பெறுவதற்கு நான் தவம் செய்தேன். 

என்னுடைய உயிரை நான் தங்களிடம் ஒப்படைத்து இருக்கிறேன். தாங்கள் திரும்பவும் கொண்டு வந்து சேர்க்கவும் என்று தாழ்ந்த குரலில் விசுவாமித்திரரிடம் கூறினார். அயோத்தியில் இருந்து விசுவாமித்திர முனிவர் விடைபெற்றுப் புறப்பட்டார். 

தேர் முதலிய ஊர்திகளில் சென்றால் எறும்பு, புழு முதலிய சிற்றுயிர்கள் பாதிக்கப்படும் என்று முனிவர்கள் நடந்தே பிரயாணம் செய்வார்கள். அதனால், விசுவாமித்திரர் நடந்து போக நேரிட்டதால், இராம, இலட்சுமணரும் விசுவாமித்திரரை பின் தொடர்ந்து போக வேண்டியதாயிற்று. அவர்கள் போகும் வழியில் மிக புனிதமான சரயு நதியைக் கண்டார்கள். அதில் அவர்கள் நீராடினார்கள். பிறகு அவர்கள் ஒரு மலர் சோலையை அடைந்தார்கள். அங்கு காயத்ரி மந்திரத்தை ஜெபித்து சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தார்கள்.

அர்க்கியம் என்பது தேவர்களுக்கும் அதிதிகளுக்கும் தீர்த்தத்தாற் செய்யும் ஒருவகை உபசாரம் ஆகும்.

சூரியன் உதிப்பதற்கு முன்பே சூரியனுக்கு அர்க்கியம் கொடுப்பது, காணாமல் கொடுப்பதாகும். சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது அர்க்கியம் கொடுப்பது கோணாமல் கொடுப்பதாகும். சூரியன் மறைவதற்கு முன், மாலை வேளையில் அர்க்கியம் கொடுப்பது கண்டு கொடுப்பது ஆகும். இதை தான் காணாமல் கொடு, கோணாமல் கொடு, கண்டு கொடு என்பார்கள்.

விசுவாமித்திர முனிவர் அசோகக்கொழுந்து, மாங்கொழுந்து முதலிய கொழுந்துகளை விரித்து ராஜ குமாரர்களைப் படுக்க வைத்தார். இராமருடைய கால்மாட்டில் இலட்சுமணர் படுத்து உறங்கினார். விசுவாமித்திர முனிவர் இராமருடைய தலைமாட்டில் அமர்ந்து இராமரையே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார். இராமருடைய திருமுகத்தில் கருணை வழிந்துகொண்டிருந்தது. விசுவாமித்திர முனிவர் தன் மனதில், இராமா! உன் தந்தை தசரதன் என் உரட்டலுக்குப் பயந்து இந்த கானகத்தில் உன்னை எவ்வாறு தான் அனுப்பினானோ? ஆனால், நீ எனக்கு மகனாகப் பிறந்திருந்தால் ஆயிரம் விசுவாமித்திரர் வந்தாலும் உன்னைக் கானகத்துக்கு ஒருபோதும் அனுப்பியிருக்கமாட்டேன். இராமா! நீ இந்த உலகில் மனிதனாகப் பிறந்து ஒரு சுகமும் இல்லாத இந்த கானகத்தில் வெறுந்தரையில் உறங்குகின்றாயே! என்று நினைத்துக் கொண்டு கண்விழித்துக் கொண்டிருந்தார்.

மூவரும் விடியற்காலையில் எழுந்து நீராடிக் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்து புறப்பட்டு சென்றார்கள். போகும் வழியில் அவர்கள் ஓர் சிறந்த ஆசிரமத்தைக் கண்டார்கள். இராம இலட்சுமணரைப் பார்த்து விசுவாமித்திரர், ராஜ ரத்தினங்களே! யாவரும் போற்றும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் யாகம் செய்த ஆசிரமம் ஆகும். முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் தவநிலையில் நின்றதால் இந்த ஆசிரமம் மிகவும் சிறப்பு மற்றும் சக்தி வாய்ந்தது. சிவபெருமானின் யாகத்தைக் கலைக்க மன்மதன் முயன்ற போது சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் அவன் அங்கம் அற்றவனாய் வீழ்ந்தான். அதனால் இது அங்கதேசம் என்று அழைக்கப்படுகிறது என்று கூறினார்.

தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக