வெள்ளி, 31 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 70

  பூதகணங்கள் கூறியவற்றில் இருந்து முப்புரத்தை ஆளும் அசுரர்களை அழிப்பதற்கான முறையானது திருமாலால் அறிய முடிந்தது. அதாவது அசுரர்கள் அனைவரையும் சிவ பூஜையை மறக்க ஏதாவது மாய வேலைகள் செய்ய வேண்டும்.

மேலும், அவர்கள் அனைவரும் தர்ம வழியை விடுத்து அதர்ம வழிக்கு சென்றால் மட்டுமே திரிபுரவேந்தர்களின் அழிவு என்பது ஆரம்பமாகும் என்பதை உணர்ந்தார் திருமால். பின் பூதகணங்களை நோக்கி நீங்கள் அனைவரும் போகலாம் என்று கூறினார். பூதகணங்கள் யாவும் நொடிப் பொழுதில் அவ்விடத்தை விட்டுச் சென்றன.

பூதகணங்கள் யாவும் அவ்விடத்தை விட்டு சென்றதும் திருமால் தேவர்களை நோக்கி நீங்கள் அனைவரும் இணைந்து எம்பெருமானான சிவபெருமானை எண்ணி தியானம் புரிந்து அவரின் ஆசிகளையும், அனுக்கிரகத்தையும் பெற வேண்டும்.

அவருடைய அனுக்கிரகம் இருந்தால் தான் நாம் எண்ணிய செயலை வெற்றியுடன் செய்து முடிக்க இயலும் என்று கூறினார் திருமால். பின்பு அங்கிருந்த தேவர்கள் அனைவரும் திருமாலிடம் விடைபெற்று சிவபெருமானை நோக்கி தியானம் புரிய சென்றனர்.

பின்பு திருமால் தனியாக தியான நிலையில் அமர்ந்தார். அவ்வேளையில் அவரிடத்தில் இருந்து மாய கலைகளில் வல்லவராக விளங்கக்கூடிய வித்தகனை (புருஷர்) உலக மக்களின் நன்மையை எண்ணி உருவாக்கினார்.

உருவான அந்த புருஷர் தன்னை படைத்த திருமாலை நோக்கி தான் என்ன செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய பிறப்பின் நோக்கம் எதுவானாலும் அதை சிரம் ஏற்று புரிவேன் என்றும் வணங்கி பணிந்து நின்றார்.

அப்புருஷனை நோக்கி திருமால் நீ என்னால் படைக்கப்பட்டவன். நான் இட்ட பணியை செய்ய நீ கடமைப்பட்டுள்ளாய் என்று கூறினார்.

திருமால் அந்த புருஷரிடம், வேதங்கள் யாவும் பொய்யோ, இவ்வுலகில் சொர்க்க, நரகங்கள் என்று எதுவும் இல்லை, இவையாவும் மெய்யன்று போன்ற சாஸ்திரங்களை என்னிடம் கற்றுத்தேர்ந்து, அதை இவ்வுலகம் முழுவதும் விரிவுப்படுத்தும் சக்தியையும் என்னிடமே பெற்று பலவிதமான மாய கலைகளை என்னிடத்தில் இருந்து பயின்று தேர்வு பெறுவாய்.

பின்பு உருவாதல், மறைதல், கவருதல், கவர்ந்தவற்றை இழத்தல், நண்பர்கள், காமம் மற்றும் எதிரிகள் என பலவிதமான கலைகளில் சிறந்து விளங்குவாய் என்றும், நீ கற்ற இக்கலையால் திரிபுர அசுரர்களை மயக்கி அவர்களை சிவநெறியை விடுத்து உனது மாய கலைகளை பயின்று அவர்களின் அழிவு பாதைக்கு அழைத்து வருவாயாக என்று கூறி அந்த புருஷர்களை அனுப்பி வைத்தார்.

திரிபுர அசுரர்களுக்கு நீ கற்றுணர்ந்த இந்த சாஸ்திரத்தை கற்பித்து பின்பு பூவுலகிற்கு சென்று கலியுக காலம் தொடங்கும் வரையிலிருந்து, கலியுகம் தொடங்கிய பின்பு உன்னுடைய சிஷ்யர்களுக்கும், பிற சிஷ்யர்களுக்கும் இந்த சாஸ்திரத்தை ஓதுவித்து இச்சாஸ்திரத்தை விரிவடையச் செய்வாய் என்று கூறினார்.

இப்பணியை நிறைவேற்றிய பின்பு நீ மீண்டும் என்னை அடைவாய் என்று கூறி அந்த புருஷரை ஆசிர்வதித்து அனுப்பினார். மாய கலையில் வித்தகனான அப்புருஷன் நான்கு சிஷ்யர்களை படைத்து அவர்களுக்கும் இக்கலையை பயிற்றுவித்து பண்டிதர்களாக்கி பின்பு திருமாலை சந்திக்க சென்றனர். திருமால் அந்த நான்கு சிஷ்யர்களை கண்டு உங்கள் குருவை போல் சிறந்து விளங்குவீர்களாக என்று கூறினார்.

பின்பு சிஷ்யர்கள் அனைவரும் திருமாலை பணியும் வேலையில் அவர்களின் கரங்களை பிடித்து மாய ரூபியின் கரங்களில் கொடுத்து இவர்களையும் உன்னை போல் எண்ணி எந்நிலையிலும் கைவிடாது காப்பாற்ற வேண்டும் என்று கூறி நீங்கள் அனைவரும் எதிரிகளை வெல்பவன் என்று அழைக்கப்படுவீர்கள் என திருமால் ஆசி வழங்கினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்